புதுடில்லி : ''பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
தலிபான் பயங்கரவாதிகள் கையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, 'ஜி 20' அமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று ( அக்.12) நடந்தது. இதில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஆப்கனில் அமைதி நிலவ வேண்டும்; வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது தான், 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் விருப்பம். ஆப்கன் மக்கள் பட்டினியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கபட்டுள்ளது இந்தியர்களுக்கு பெரும் மனவலியை தந்ததுள்ளது.
ஆப்கன் மக்களுக்கு உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். அதேநேரத்தில் பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறிவிடக் கூடாது. இதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் அமைய வேண்டும் என்பதுதான், இந்தியாவின் விருப்பம். ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதில் ஐ.நா., சபைக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE