தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையங்களில்... குளறுபடி! முடிவு அறிவிப்பதில் குழப்பம்; கட்சியினர், அலுவலர்கள் தகராறு

Added : அக் 13, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 13 ஓட்டு எண்ணும் மையங்களிலும், முடிவு அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டதால், கட்சியினர், அலுவலர்கள் இடையே தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., முன்னிலையிலும், அ.தி.மு.க., பா.ம.க., அடுத்தடுத்த நிலையிலும் இருந்தன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், 6ம் தேதி
ஓட்டு எண்ணும் மையங்களில்... குளறுபடி! முடிவு அறிவிப்பதில் குழப்பம்; கட்சியினர், அலுவலர்கள் தகராறு

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 13 ஓட்டு எண்ணும் மையங்களிலும், முடிவு அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டதால், கட்சியினர், அலுவலர்கள் இடையே தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., முன்னிலையிலும், அ.தி.மு.க., பா.ம.க., அடுத்தடுத்த நிலையிலும் இருந்தன.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களிலும் என, இரு மாவட்டங்களிலும் 13 மையங்களில் நேற்று, ஓட்டு எண்ணும் பணி நடந்தது.


அதிருப்தி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணப்பட்டது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு மேல் தான் ஓட்டுச்சீட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர், 98 ஒன்றிய கவுன்சிலர், 269 ஊராட்சி தலைவர், 1,793 வார்டு உறுப்பினர் என, 2,171 பதவிகளுக்கு, 7,036 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

நேற்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியதில் இருந்தே, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க., வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர்.காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மூன்றாவது வார்டில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளரைவிட பா.ம.க., வேட்பாளர் ரமேஷ், 86 ஓட்டுகள் கூடுதலாக பெற்றிருந்தார்.ஆனால் வெற்றி நிலவரத்தை, தேர்தல் அலுவலர்கள் அறிவிக்காமல் இருந்தார். இதனால், அதிருப்தியடைந்த பா.ம.க.,வினர், தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மூன்று மணி நேரம் வாக்குவாதம் செய்த பின்னே, பா.ம.க., வேட்பாளர் வெற்றி பெற்றதாக, தேர்தல் அதிகாரி அறிவித்தார்.அதேபோல், நேற்று பிற்பகல் வரை எந்த வேட்பாளரின் முடிவுகளும் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. அதன்பிறகே, ஒவ்வொரு வேட்பாளராக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களில், நேற்றிரவு 8:00 மணி வரை நிலவரப்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வெற்றி நிலவரம் தெரியவில்லை.ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 5 முதல் 10 வார்டு வரையிலான முடிவுகளே ஒவ்வொரு ஒன்றியத்திலும் தெரிந்தது.பெரும்பாலான இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களும், சில இடங்களில் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். தேர்தல் முடிவுகள் முழுதுமாக இன்று தெரியவரும்.


மழை


செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட கவுன்சிலர் 14 இடங்களுக்கு, 124 பேரும், ஒன்றிய கவுன்சிலர் 154 பதவியிடங்களுக்கு, 751 பேர் போட்டியிட்டனர்.ஊராட்சி தலைவர் 359 பதவிகளுக்கு, 1,395 பேர்; வார்டு உறுப்பினர் 2,679 பதவிகளுக்கு, 8,614 பேர் போட்டியிட்டனர். மொத்த பதவிகளாக, 3,208 இடங்களுக்கு, 10 ஆயிரத்து, 884 பேர் போட்டியிட்டனர்.எட்டு ஒன்றியங்களிலும் காலை முதல் இரவு வரை, ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. மாலை 5:40 மணியிலிருந்து, இரவு 8:00 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது.

ஓட்டு எண்ணும் மையத்திற்கு, வேட்பாளர் மற்றும் முகவர்கள் நனைந்தபடி வந்தனர். மாலை 6:40 மணியிலிருந்து, 6:45 மணி வரை மின் தடை ஏற்பட்டது. அதன்பின், ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு பணிகளில், செங்கல்பட்டு மாவட்ட போலீசார் 1,400 பேர் ஈடுபட்டிருந்தனர்.ஓட்டு எண்ணும் மையங்களில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மட்டுமே அதிகளவில் பங்கேற்றனர். மற்ற கட்சியினர் குறைவாகவே காணப்பட்டனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், தி.மு.க., இரண்டு இடங்களிலும், ம.தி.மு.க., ஓரிடத்திலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்ற ஒன்றியங்களில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தொடர்ந்து போட்டி நிலவி வந்தது.


நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு


உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் பணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஓட்டு எண்ணும் மையங்களில் நேற்று நடந்தது. இம்மையங்களில், செய்தி சேகரிக்க வரும் நிருபர்களுக்கும், புகைப்பட நிருபர்களுக்கும் என, மீடியா அறை அமைக்கப்பட வேண்டும்.லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், மீடியா அறை அமைக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையங்களில், எந்த இடத்திலும் மீடியா அறை அமைக்கப்படவில்லை.

நிருபர்களுக்கு குடிக்க குடிநீர், உணவு போன்றவை கூட முறையாக வழங்கப்படவில்லை.'டிவி' நிருபர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மின்னணு சாதனங்கள், கேமரா போன்ற பொருட்களை 'சார்ஜ்' போட கூட வசதியில்லாத சூழலே நிலவியது.

- -நமது நிருபர் குழு- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X