காஸ் வாகனங்கள் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கும்; நாமக்கல்லில் ஐ.ஓ.சி., செயல் இயக்குனர் தகவல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் வாகனங்கள் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கும்; நாமக்கல்லில் ஐ.ஓ.சி., செயல் இயக்குனர் தகவல்

Added : அக் 13, 2021
Share
நாமக்கல் : ''இந்தியாவில் வருங்காலத்தில், காஸ் வாகனங்களின் எண்ணிக்கை, மூன்று மடங்காக அதிகரிக்கும்,'' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின், தென்மண்டல செயல் இயக்குனர் சைலேந்திரா கூறினார்.தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் கோவிந்தம் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'இந்தியன் ஆயில் கம்ப்ரெஸ்ட் பயோகாஸ்' உற்பத்தி ஆலையை, தென்மண்டல செயல் இயக்குனர்

நாமக்கல் : ''இந்தியாவில் வருங்காலத்தில், காஸ் வாகனங்களின் எண்ணிக்கை, மூன்று மடங்காக அதிகரிக்கும்,'' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின், தென்மண்டல செயல் இயக்குனர் சைலேந்திரா கூறினார்.

தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் கோவிந்தம் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'இந்தியன் ஆயில் கம்ப்ரெஸ்ட் பயோகாஸ்' உற்பத்தி ஆலையை, தென்மண்டல செயல் இயக்குனர் சைலேந்திரா பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும், கர்நாடகாவின் ஒரு பகுதிக்கும், சென்னை எண்ணுாரில் உள்ள எல்.என்.ஜி., இறக்குமதி மையத்தில் இருந்து, இந்தியன் ஆயில் பைப் லைன் மூலமாக காஸ் வினியோகம் செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு பயன்பாட்டுப் பங்கை அதிகப்படுத்தும் வகையில், 'கம்ப்ரெஸ்டு பயோகாஸ்' என்பது, பயோ காஸை துாய்மைப்படுத்தி பின், கம்ப்ரெஸ் செய்து உருவாக்கப்படுவதாகும்.

தமிழகத்தில், முதல் முறையாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்து கோவிந்தம்பாளையத்தில், கம்ப்ரெஸ்ட் பயோகாஸ் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு, 15 டன் உற்பத்தி செய்ய முடியும். தற்போது, தினமும், ஐந்து டன் பயோ காஸ் உற்பத்தி செய்யப்பட்டு வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படுகிறது.

நாமக்கல், சேலம் மாவட்டங்களில், 5 ஐ.ஓ.சி., பெட்ரோல் பங்குகளில், இந்த 'பயோகாஸ் இண்டிகிரீன்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. கம்ப்ரெஸ்ட் பயோ காஸ் என்பது, சி.என்.ஜி., காஸூக்கு இணையானது. சி.என்.ஜி., கிட் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்களில், எந்த மாற்றமும் செய்யாமல், பயோ காஸ் உபயோகப்படுத்தலாம். வரும், 2025ம் ஆண்டுக்குள், இதுபோன்ற, 5,000 பயோகாஸ் ஆலைகளை அமைப்பதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, 13 பயோகாஸ் ஆலைகள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன.

வாகனங்களுக்கு, பயோகாஸ் மிகவும் மலிவான எரிபொருளாகும். இது, ஒரு கிலோ, 65 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை, 100 ரூபாயாக இருக்கும்போது, இது மிகவும் லாபகரமானது. வேளாண் கழிவுகள், கோழிப்பண்ணை கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி, இந்த காஸ் உற்பத்தி செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வருங்காலத்தில், காஸ் வாகனங்களின் எண்ணிக்கை, மூன்று மடங்காக அதிகரிக்கும் எதிர்காலத்தில், பேட்டரி மூலம் இயங்கக் கூடிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ஐ.ஓ.சி., நிறுவனம் இஸ்ரேல் நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில், தரமான பேட்டரிகள் தயாரிப்பிலும் களம் இறங்குகிறது.

வருங்காலத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல், டீசல், பயோ காஸ், பேட்டரிகள் மற்றும் பேட்டரி சார்ஜிங் வசதி போன்ற அனைத்தையும், வாடிக்கையாளர்கள் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்தியன் ஆயில் முதன்மை பொது மேலாளர் சிதம்பரம், சேலம் மண்டல தலைமை மேலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X