'விவசாயி தற்கொலைக்கு அரசு அலட்சியம் காரணம்'
ஈரோடு: உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட, விழுப்புரம் மாவட்ட விவசாயி மணி, தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசின் அலட்சிய போக்கே காரணம் என, தற்சார்பு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், 'உயர்மின் கோபுர விவசாயிகள், தங்கள் நிலத்தை இழந்ததுடன், சட்டப்படி இழப்பீட்டை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகள், மணி முடிவில்தான் உள்ளனர். சட்டசபை தேர்தலின்போது, உயர் மின் கோபுர விவசாயிகளின் இழப்பீடு பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதாக, ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.
2,௦௦௦ டன் நெல் வருகை
ஈரோடு: திருவாரூரில் இருந்து சரக்கு ரயிலில், ௨,௦௦௦ டன் நெல், நேற்று ஈரோடு வந்தது. ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு, லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. டெண்டருக்கு பின் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அரிசியாக்கப்பட்ட பின் மீண்டும் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும்.
வளர்ச்சி திட்டப்பணி எம்.எல்.ஏ., துவக்கம்
கோபி: கோபி அருகே கோட்டுப்புள்ளாம்பாளையத்தில், அங்கன்வாடி கட்டடம், அலையப்பாளையத்தில் சின்டெக்ஸ் தொட்டி, புதுக்காலனியில் கான்கிரீட் சாலை, மல்லியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் சத்துணவு சமையற்கூடம் என, 64 லட்சம் ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். அயலுார் அருகே மல்லிபாளையத்தில், பால் கொள்முதல் நிலையத்தை திறந்தார்.
காவிரியில் பெண் உடல் மீட்பு
ஈரோடு: ஈரோடு காவிரி ரயில்வே பாலம் காவிரி ஆற்றங்கரையில், சில நாட்களுக்கு முன், 55 வயது மதிக்கதக்க பெண் உடல், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. ஆரஞ்சு, ரோஸ் கலர் பாலியஸ்டர் சேலை அணிந்து இருந்தார். உடலை மீன்கள் சாப்பிட்டதால் அடையாளம் தெரியவில்லை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
கொடுமுடியில் பலத்த மழை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக கொடுமுடியில், 38.2 மி.மீ., பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு, 23, பெருந்துறை, 9, கோபி, 13.6, தாளவாடி, 23.4, சத்தி, 2, பவானிசாகர், 1.2, சென்னிமலை, 31, எலந்தகுட்டை மேடு, 4.2, கொடிவேரி, 9, குண்டேரிபள்ளம், 14.6, வரட்டுபள்ளம், 4.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE