ஐந்து கிராமத்தில் விவசாய நிலம்; பத்திரப்பதிவு செய்ய மறுப்பு : கலெக்டரிடம் விவசாயிகள் புகார் | Dinamalar

ஐந்து கிராமத்தில் விவசாய நிலம்; பத்திரப்பதிவு செய்ய மறுப்பு : கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
சூலுார்:ஐந்து கிராமங்களில் உள்ள விவசாய பூமி மற்றும் மனைகளை பத்திர பதிவு செய்ய மறுக்கும் பிரச்னை குறித்து, விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.சூலுாரில் விமானப்படைத் தளம் உள்ளது. இதன் விரிவாக்கத்துக்காக, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட காடாம்பாடி, காங்கயம் பாளையம், கலங்கல், அப்பநாயக்கன் பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் உள்ளிட்ட

சூலுார்:ஐந்து கிராமங்களில் உள்ள விவசாய பூமி மற்றும் மனைகளை பத்திர பதிவு செய்ய மறுக்கும் பிரச்னை குறித்து, விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.சூலுாரில் விமானப்படைத் தளம் உள்ளது. இதன் விரிவாக்கத்துக்காக, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட காடாம்பாடி, காங்கயம் பாளையம், கலங்கல், அப்பநாயக்கன் பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் உள்ளிட்ட கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த, 2010 ஆண்டு முதல் குறிப்பிட்ட சர்வே எண்கள் கொண்ட விவசாய நிலங்கள், வீட்டுமனையிடங்கள் முடக்கி வைக்கப்பட்டன. நிரந்தர கட்டுமானங்கள் கட்டக்கூடாது என, அறிவிக்கப்பட்டது.அதனால், அந்த இடங்களின் உரிமையாளர்கள், அவற்றை விற்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், நிலத்தை விற்கவோ, வாங்கவோ எந்த தடையும் இல்லை என, நில உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆனாலும், சூலுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுத்து வந்தனர். இதனால், விவசாயிகள், நில உரிமையாளர்கள் விரக்தியடைந்தனர். நேற்று முன்தினம் கலெக்டரை சந்தித்து மனு அளித்து , பிரச்னை குறித்து முறையிட்டனர்.கலெக்டரிடம் விவசாயிகள் அளித்த மனு விபரம்:சொந்தமாக நிலம் இருந்தும் பயன்படுத்த முடியாமல், கடந்த, 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வருவாய்த்துறை மறுக்கிறது. நிலத்தை பரிவர்த்தனை செய்ய, பத்திரப்பதிவுத் துறை மறுக்கிறது. இறுதியில் கோர்ட்டில் முறையிட்டு, எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இதற்கிடையில், விமானப்படைத்தள விரிவாக்கத்துக்கு, 400 ஏக்கர் நிலம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை எந்த இடங்கள், சர்வே எண்கள் எவை என தெளிவுபடுத்த வேண்டும். அந்த இடங்கள் போக, மற்ற இடங்களை, அதன் உரிமையாளர்கள் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கான உத்தரவை வெளியிட்டு, பல ஆண்டுகளாக உள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் சமீரன் உடனடியாக, பத்திரப்பதிவு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தாமதிக்காமல் பத்திரப்பதிவுகளை செய்து தர, உத்தரவிட்டதை கேட்டு, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X