செய்திகள் சில வரிகளில்... கேரள வியாபாரிகள் வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... கேரள வியாபாரிகள் வருகை

Added : அக் 13, 2021
Share
பொள்ளாச்சி மாட்டு சந்தை, கொரோனா பரவல் காரணமாக, பல வாரங்கள் செயல்படாமல் இருந்தது. கடந்த மூன்று வாரங்களாக சந்தை திறக்கப்பட்டு, வர்த்தகம் நடந்தது. ஆனால், தொற்று பரவல் காரணமாக, கேரள வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.இந்த வாரம், கேரள வியாபாரிகள் சந்தைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மழை காரணமாக மாடுகள் வரத்து மந்தமாக இருந்தது. வரும் நாட்களில்

பொள்ளாச்சி மாட்டு சந்தை, கொரோனா பரவல் காரணமாக, பல வாரங்கள் செயல்படாமல் இருந்தது. கடந்த மூன்று வாரங்களாக சந்தை திறக்கப்பட்டு, வர்த்தகம் நடந்தது. ஆனால், தொற்று பரவல் காரணமாக, கேரள வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.இந்த வாரம், கேரள வியாபாரிகள் சந்தைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மழை காரணமாக மாடுகள் வரத்து மந்தமாக இருந்தது. வரும் நாட்களில் வர்த்தகம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.நேற்று நடந்த சந்தையில், மொத்தம், 1,250 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன; 200 வியாபாரிகள் பங்கேற்றனர்.

மொத்தமாக, 1.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கொரோனா பரவல் குறைந்து, கேரள வியாபாரிகள் வரத்து துவங்கியுள்ளதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும், வரும் நாட்களில் வர்த்தகம் அதிகரிக்கும். மாடுகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என, வியாபாரிகள், விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
நெ.10 முத்துாரில் தி.மு.க., வெற்றி
கிணத்துக்கடவு ஒன்றியம், நெ.,10 முத்துார் ஊராட்சி, 2வது வார்டு இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில், மொத்தமுள்ள, 381 ஓட்டுகளில், 288 ஓட்டுகள் பதிவானது.நேற்று காலை, 8:00 மணிக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கி, 45 நிமிடத்தில் நிறைவடைந்தது. இதில், 112 ஓட்டுகள் பெற்று, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மகேந்திரன் வெற்றி பெற்றார்.அவருக்கு அடுத்ததாக, மகேஷ் - 94, நடராஜன் - 49, பாப்புசாமி - 32 ஓட்டுகள் பெற்றனர். பதிவான ஓட்டுகளில் ஒன்று செல்லாததாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வேட்பாளருக்கு, ஒன்றிய அதிகாரிகளும், தி.மு.க., ஒன்றிய செயலாளர்முகமதுயாசினும் வாழ்த்தினர்.
நுாலகத்தில் ஆபத்தான மரம்
வால்பாறையில், நுாலகம் முன் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என, நுாலக வாசகர்கள் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நுாலகத்தை, தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நுாலகத்தின் முன் பக்கம் மிக உயரமான ஆபத்தான நிலையில் உள்ள யூகலிப்டஸ் மரம் எப்போது வேண்டுமானாலும், நுாலக கட்டடத்தின் மீது விழும் நிலையில் உள்ளது. எனவே, பருவமழைக்கு முன், வாசகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். நுாலகத்தின் முன்பக்கம் உள்ள ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
மத்திய, மாநில அரசு அறுவுறுத்தலின்படிஇம்மாதம் இறுதி வரை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லுாரிகள் வாயிலாக சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பிரபாகர், தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி, நிர்வாக அறங்காவலர் விக்ரம் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கோவை பாரதியார் பல்கலை நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, சிறப்பு விருந்தினராக, பங்கேற்றார். இதையடுத்து, துாய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.இதையடுத்து, அனைவரும், சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் பணியிலும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் நந்தகுமார்,சுகா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஹாக்கி உபகரணங்கள் வினியோகம்

திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சங்க செயலாளர் மோகன்குமார் வரவேற்றார்.'ஹாக்கி யுனிட் ஆப் தமிழ்நாடு' தலைவர் சேகர்மனோகரன் மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் பெதப்பம்பட்டி மற்றும் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஹாக்கி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் 'ஆன்லைன்' கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம்.அதன்படி, 6 முதல், 8 ம் வகுப்பு மாணவர்கள், 'விண்வெளித்துறையில் ஏவுகணை நாயகன்', 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், 'எனது பார்வையில் கலாமின் கட்டளைகள்', 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், 'அக்னி சிறகுகள் ஒரு பார்வை', கல்லுாரி மாணவர்கள், 'அப்துல்கலாம் விரும்பிய கனவு இந்தியா' என்ற தலைப்பில், படைப்புகள் இருத்தல் வேண்டும்.இக்கட்டுரைகளை, வரும், 15ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், galilioscienceclub@gmail.com என்ற இமெயில் அல்லது ஒருங்கிணைப்பாளர், பி7, வித்யாசாகர் வீதி, காந்தி நகர், உடுமலை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரம் அறிய, 87782 01926 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஓடை கரையில் மண் அகற்ற கோரிக்கை
உடுமலை நகரின் மேற்கு பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது. இந்த ஓடையை யொட்டி மேற்கிலும், கிழக்கிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த ஓடை கழிவு நீர் கால்வாயாகவும் உள்ளது. மழைக்காலங்களில் இதில் தண்ணீர் அதிக அளவில் செல்லும்.ஒட்டுக்குளம் நிறைந்தால் உபரிநீர் இந்த ஓடையில் தான் திறந்து விடப்படும். ஓடையை துார்வாரி மேம்படுத்தும் பணிகள் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓடையிலிருந்து துார்வாரப்பட்ட மண், கரைப்பகுதியில் நீண்ட துாரத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால், மண் மீண்டும் ஓடைக்குள் விழும்.இதனால் துார்வாரப்பட்டதன் பலன் கிடைக்காமல் போகும். எனவே, கரைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மூடாத சாக்கடையால் ஆபத்து
பொள்ளாச்சி நகராட்சி, 13வது வார்டு பகுதியில், ரங்கசாமி வீதி, விநாயகர் கோவில் சந்திப்பு பகுதியில், சாக்கடை கால்வாய் ரோட்டை கடக்கிறது. இங்கு, சிறு சாக்கடை பாலம் அமைத்து, ரோட்டை கடந்து சாக்கடையை கொண்டு சென்றுள்ளனர்.சாக்கடையை துார்வாரும் போது, ரோட்டோரம் சாக்கடையின் மீது அமைத்திருந்த கான்கிரீட் சிலாப்களை அப்புறப்படுத்தினர். அதன் பின், சிலாப் அமைக்காமல் திறந்தநிலையில் விட்டுச் சென்று விட்டனர்.இதனால், இரவு நேரத்தில் அப்பகுதியை கடந்து செல்வோர், சாக்கடையில் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. அதை தவிர்க்க, கற்களை போட்டு தடுப்பு அமைத்துள்ளனர். அந்த கற்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.சாக்கடையால் துர்நாற்றம், கொசு உற்பத்தி அதிகரித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். சாக்கடையை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X