பெங்களூரு: கர்நாடக காங்., தலைவர் சிவகுமார் நிர்வாகிகளிடம் லஞ்சம் வாங்கியதாக அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் எம்.பி., உக்ரப்பா மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.சலீம் ஆகியோர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், சலீம் பேசும் போது, ''முன்பு 6 முதல் 8 சதவீதம் லஞ்சம் வாங்கப்பட்டது. தற்போது அது 10 முதல் 12 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு சிவக்குமார் தான் காரணம். அவரின் உதவியாளர் முல்குன்ட் ரூ.50 முதல் 100 கோடி சம்பாதித்திருப்பார். அவரே அவ்வளவு சம்பாதித்திருந்தால், சிவக்குமார் எவ்வளவு பணம் வைத்திருப்பார்? என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்'' எனக்கூறினார்.

உக்ரப்பா கூறும்போது, ''சிவக்குமாரை தலைவராக்க நாம் கடுமையாக உழைத்தோம். ஆனால், அவர் நமக்கும், கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்,'' என தெரிவித்தார்.
சலீம் தொடர்ந்து பேசும்போது, ''சிவக்குமார் பேசும்போது தடுமாறுகிறார். இதற்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமா? அல்லது குடித்திருக்கிறாரா? என தெரியவில்லை. அதனை தான் நாம் விவாதித்தோம். அவர் குடித்திருக்கிறாரா? என மீடியாக்கள் முன்னர் கேள்வி எழுப்பியது. சித்தராமையாவின் உடல்மொழி சிறப்பாக உள்ளது'' எனக்கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானதுடன் மாநில காங்கிரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, சலீமை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்க மாநில தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் உக்ரப்பாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE