சென்னை: ‛‛உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.,வின் வெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது,'' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., வெற்றி பெற்றது தொடர்பாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., சார்பில் வெற்றி பெற்றவர்களுக்க வாழ்த்துகளையும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தல்கள் தான் ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால், கிராமங்களும், மக்களும் முன்னேறுவார்கள் என்பதால், அதுற்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காக பா.ம.க., தனித்து போட்டியிட்டது. பா.ம.க., வலிமையையும் பா.ம.க., ஆற்றிய களப்பணிகளை ஒப்பிடும்போது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க,வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.
ஆனாலும், நமது வெற்றி எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் பெறப்பட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தை ஆளும் மற்றும் ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைத்தன. வேட்பு மனு தாக்கல் துவங்கி, ஓட்டு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் அரசு எந்திரம் ஆளுங்கட்சியின் கட்டளைகளுக்கு பணிந்து பா.ம.க., வெற்றி பெற வேண்டிய இடங்களில் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன.

இப்போது, வெற்றி பெற்ற இடங்களில் பலவற்றிலும் கூட முடிவுகள் மாற்ற முயற்சிகள் நடந்தன எதை எதிர்த்து போராடி தான் முடிவுகளை அறிவிக்க வைக்க முடிந்தது. இவை அனைத்துமே போராடி பெற்ற வெற்றிகள் ஆகும். அந்த வகையில், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களை சந்தித்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க, பெற்ற வெற்றி கவுரவமானது. மரியாதைக்குரியது. பா.ம.க, தனித்து போட்டியிட்ட போதிலும், தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் தமிழகத்தின் 3வது பெரிய அரசியல் சக்தி என்பதை மீ ண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.