சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கணக்கு சரியாக இருக்காதே!

Added : அக் 13, 2021
Share
Advertisement
கணக்கு சரியாக இருக்காதே!மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க நகைகளை உருக்கி, வங்கியில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்ய, தி.மு.க., அரசு திட்டமிட்டு உள்ளது.இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.கோவில் நகையை, வங்கி 'லாக்கரில்' வைத்திருந்தால் ஆளுங்கட்சியினர் வேடிக்கை பார்க்க


கணக்கு சரியாக இருக்காதே!மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க நகைகளை உருக்கி, வங்கியில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்ய, தி.மு.க., அரசு திட்டமிட்டு உள்ளது.இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.கோவில் நகையை, வங்கி 'லாக்கரில்' வைத்திருந்தால் ஆளுங்கட்சியினர் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். அதிகாரிகள் துணையுடன் அங்கு போலி நகைகளை வைத்து, தங்கத்தை களவாடி விடுவர்.அங்கு இருப்பது தங்கமா, 'கவரிங்'கா என்பதை யார் அறிய முடியும்? ஆட்சி மாறினால், ஒரு வேளை குற்றம் நடந்தது தெரிய வரலாம். அப்படி இருந்தாலும், அது தொடர்பான வழக்கு 100 ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். கோவில் நகையை திருடியோர் சுகபோகமாக வாழ்ந்து, மறைந்து விடுவர்.
அந்த நகையை உருக்கி விற்று, பணமாக்கி, வங்கியில் 'டிபாசிட்' செய்தாலும் சிக்கல் வரும்.உருக்கிய நகையின் எடையை குறைத்து காட்டுவர். நகை மதிப்பீட்டில் குளறுபடி செய்து, குறைந்த தொகைக்கு விற்பனை செய்து மோசடி செய்வர். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதிகாரிகள் சொல்வது தான் கணக்கு!அதாவது, கோவிலில் இருந்த 100 கிலோ தங்கத்தை உருக்கியபோது, அதில் வெறும் 10 கிலோ தான் தேறியது என கணக்கு காட்டினால், யார் ஆய்வு நடத்த முடியும்?நேர்மையான அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் சல்லடை போட்டு அல்லவா தேட வேண்டியது உள்ளது!'சிவன் சொத்து' என்ற பயம், நாத்திக கட்சியான தி.மு.க.,விடம் எப்படி இருக்கும்?நம் அரசியல்வாதிகள் ஆலத்திலும், கோலத்திலும் நுழைந்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதில் கை தேர்ந்தோர்.அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருப்பதே, கோவில் நகைகளுக்கு பாதுகாப்பு!


விரைவில் தமிழகம் விற்பனைக்கு!கு.அருணாச்சல மூர்த்தி, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, முடிந்தவரை ஊழல் செய்து சொத்து வாங்கி குவிப்பது வழக்கம். தங்கள் பெயரில் வாங்குவதை விட, தன் குடும்பத்தினர், உறவினர், 'பினாமி' பெயரில் வாங்கும் சொத்துக்கள் தான் மிக அதிகம்.நம் நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலும் சொத்து வாங்கி குவிப்பதில், அரசியல்வாதிகள் போட்டி போட்டு முன்னேறுகின்றனர்.சட்டசபை தேர்தலுக்கு முன் தி.மு.க., கூறிய வாக்குறுதிப்படி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும், சொத்து குவிப்பு வழக்குகள் சம்பந்தமாக அதிரடி 'ரெய்டு'கள் நடந்து வருவது நாம் அறிந்ததே.முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தற்போது வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் ரெய்டு நடத்தி உள்ளனர்.எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடக்கும் என்பதால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தற்போதே அதிலிருந்து தப்பிக்கும் வழிகளைத்தேடி கண்டுபிடித்து இருப்பர்.அவர்கள் எல்லாம் வழக்கிற்கு அஞ்சுவது இல்லை. ஏனெனில் அவர்களின் கட்சித் தலைமையை போல, பல ஆண்டுகள் வழக்குகளை இழுத்தடித்து, தங்களது வாழ்நாள் முழுவதையும் கடத்தி விடலாம் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.நம் நாட்டில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தண்டிக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மை!அரசியல்வாதியின் குடும்பமே, ஊழல் செய்வதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது; பின் எப்படி ஊழல் ஒழியும்?அன்று காமராஜர், கக்கன், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்கள் கட்சி வேறு, குடும்பம் வேறு என பிரித்து வைத்திருந்தனர். ஆட்சி அதிகாரங்களில், தன் குடும்பத்தினர் தலையீடு இருப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.இப்போதுள்ள அரசியல் வாதிகள், பினாமி பெயரில் பல தொழில்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான தொழில்கள், திராவிடக் கட்சி தலைவர்களின் பிடியில் இருக்கிறது.விரைவில் வணிகம் முழுதும், ஊழல் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கப்போவது உறுதி. அப்போது தமிழகம் விற்பனை செய்யப்படும்!


வேறு என்ன செய்வது?வி.கோபாலன், பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தொழுகை நடக்காமல் இருக்க, காஷ்மீரில் உள்ள மசூதி மற்றும் தர்ஹாக்களை மத்திய அரசு மூடி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, இங்குள்ள பெரும்பான்மை சமூக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது' என, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி அங்கலாய்த்து இருக்கிறார்.கடந்த 70 ஆண்டுகளாக, 370 விதியின் படி அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டு, காஷ்மீர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தான் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டது.சிறப்பு அந்தஸ்தை விலக்கியதை, காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், மெஹபூபா முப்தி போன்ற அரசியல்வாதிகளால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மீண்டும் சிறப்பு அந்தஸ்தை பெறும் கனவை நனவாக்கும் பொருட்டு, அவர்கள் எந்த வகை செயலிலும் துணிந்து இறங்குவர்.பாகிஸ்தானுக்கு துாது விடுவர்; பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து உதவியும் செய்வர்.
இன்னும் சில ஆண்டுகளுக்கு மத்திய அரசும், ராணுவமும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், விரும்பத்தகாத சம்பவங்கள் காஷ்மீரில் நிகழவும் வாய்ப்பு உண்டு. அதனால் தான், சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு கையாண்டு வருகிறது.நாங்கள் வாழும் தமிழகத்தில் கொரோனா தொற்று ஒன்று தான் மக்களை அச்சுறுத்துகிறதே தவிர, பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களால் எந்த அசம்பாவிதமும் ஏற்படுவதில்லை.ஆன போதிலும், இங்கு ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசு, ஹிந்துக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து நாசம் செய்து, கோவில்களை மட்டும் மூடி வைத்துள்ளது; ஆனால், சர்ச் மற்றும் மசூதிகளில் தொழுகை நடக்கிறது.
ஹிந்துக்களாகிய நாங்கள் விதியை நொந்து, வாய் மூடி மவுனமாக இருக்கிறோம்; எங்களால் வேறு என்ன செய்து விட முடியும்?ஆனால், நாங்கள் ஒருபோதும் மாநில அரசை மிரட்டுவதில்லை; நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவது இல்லை!


அது பச்சை துரோகம்!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, 'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
புதிய கல்விக் கொள்கையை, தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள் அமல்படுத்த தயாராகி விட்டன என்றும், அதை அமல்படுத்தாவிட்டால் ஏற்படும் சாதக, பாதகங்களையும் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்.தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், 2005ல் அறிமுகப்படுத்திய தேசிய பாடத் திட்டத்தை தமிழகம் அமல்படுத்த தவறியதால், நம் மாநிலத்தின் கல்வித் தரம் குறைந்து போனது. அதனால், ஜே.இ.இ., மற்றும் 'நீட்' தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் இழந்து போன பரிதாபத்தையும், அவர் சுட்டிக் காட்டி
உள்ளார்.இப்போது கல்வி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுத்தால், மத்திய நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவதில் சிக்கல் ஏற்படும்.மாணவரின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், திராவிட கட்சிகள் வறட்டு பிடிவாதம் செய்ததால், தமிழகத்தில் 'நவோதயா' பள்ளிகள் துவங்க முடியாமல் போனது. பாழாய்ப் போன இரு மொழி கொள்கையால், நாம் ஹிந்தி கற்கும் வாய்ப்பையும் இழந்தோம்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற தேசிய அளவில் நடக்கும் போட்டித் தேர்வில், நம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்து வருகிறது.குன்றிலிட்ட விளக்காக இருக்க வேண்டிய மாணவர்களை, குடத்தில் இட்ட விளக்காக மாற்றி விட்டன கழக ஆட்சிகள்.இந்த லட்சணத்தில், நம் மாணவர்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என ஆசைப்படுகிறார் கல்வி அமைச்சர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக
இருக்கிறது அமைச்சரின் பேராசை!புதியவற்றை ஏற்றுக் கொண்டால் தான், மாணவர்கள் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.'என் வழி தனி வழி' என்று வறட்டு வேதாந்தம் பேசினால், அது மாணவர்களுக்கு செய்யும் பச்சை துரோகமாகும்.பால குருசாமி சொல்லும் அறிவுரைகள் கசப்பாக இருந்தாலும், அது தான் மாணவர்களின் நலனுக்கு உகந்தது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


அங்கெல்லாம் கொரோனா பரவாதா?ரா.முக்கண்ணன், கோ வையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா ஊரடங்கில், தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்தாலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களைத் திறக்க அனுமதி மறுத்துள்ளது.முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியின், 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் தற்போது அரண்மனை - 3 என்ற படத்தை வெளியிடுகிறது. அந்த படத்தை அனைவரும், 'ஏசி' தியேட்டருக்கு சென்று கண்டு களிக்குமாறு, சமூகவலைதள பதிவை போடுகிறார்.
தியேட்டரில் பரவாத கொரோனா, கோவிலில் பரவும் என, தி.மு.க., அரசு கூறுவதற்கு காரணம் இருக்கிறது என்பது இதிலிருந்தே புரிகிறது.தமிழகமெங்கும் பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து பராமரிக்கப்படுவது இல்லை. பயணியரும், பேருந்து ஊழியர்களும் முக கவசம் அணிவது இல்லை. ஆனால் பேருந்தில் கொரோனா பரவாது என்கிறது தமிழக அரசு!'டாஸ்மாக்' கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவாது என சத்தியம் செய்கிறது தி.மு.க., அரசு!ரேஷன் கடை, மார்க்கெட் போன்ற பொது இடங்களில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அங்கெல்லாம் நோய் பரவாதா?'மத்திய அரசின் அறிவுரைப்படி தான், தமிழகத்தில் கோவில்களை திறக்காமல் இருக்கிறோம்' என, தி.மு.க., அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தும் எதையும் கடைப்பிடிக்காத தி.மு.க., அரசு, இதில் மட்டும் நல்லுறவு காட்டுகிறதோ?சரி... மத்திய அரசு கூறிய அறிவுரை என்ன?நோய் பாதிப்பு 5 சதவீதம் வரை இருந்தால், கடும் கட்டுப்பாடு விதியுங்கள் என்பது தான். தமிழகத்தில் தற்போது 2.48 சதவீதம் தான் நோய் பாதிப்பு இருக்கிறது.தி.மு.க.,வின் ஹிந்து விரோத கொள்கையை, ஆட்சியிலும் கடைப்பிடிக்கிறது. தமிழகத்தில் நடப்பது, மதச்சார்பற்ற அரசு என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது வேடிக்கையாக இல்லை!

ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக போலீசார் ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக பேசப்பட்டனர்; இப்போதும் அவர்களின் திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. பிரச்னை என்னவெனில், அவர்களை எந்த அரசும் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என்பது தான்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில், எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்க கோரினார்.அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு பின், அவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க., அரசு போராடி, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க அனுமதி கோரியது; அதை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி., துறை, அமைச்சர்களுக்கு எதிராக விசாரித்து, அறிக்கை கொடுக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.வழக்கப்படி சி.பி.சி.ஐ.டி., விசாரணை செய்து, 'ஊழல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை' என, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது; நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்டது.தற்போது ஆட்சி மாறியதும், காட்சியும் மாறிஉள்ளது.ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க., எதிர்க்கட்சி ஆனது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., தற்போது ஆளும் கட்சியாகியுள்ளது.
விளைவு... 'மேற்படி அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கிறது' எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கை தொடர அனுமதி கோருகின்றனர் சி.பி.சி.ஐ.டி., போலீசார்; அதை நீதிமன்றமும் அனுமதிக்கிறது.இது வேடிக்கையாக இல்லை!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X