சென்னை:'உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி, புறவாசல் வழியாகப் பெற்றது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
அவர்களின் கூட்டறிக்கை:உள்ளாட்சித் தேர்தலில், வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்து விட்டு, மிகப்பெரிய தேர்தல் வன்முறையை தி.மு.க., நடத்தி முடித்திருக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுவும், நான்கு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுவும், தேர்தல் விதிகளுக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்டன.
இதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.வெற்றி பெறக்கூடிய பகுதிகளில் உள்ள, அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை தேர்தல் பணி செய்ய விடாமல் முடக்கினர். பல வன்முறைகளை கட்டவிழ்த்து, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே முனைப்போடு, சட்டத்தை தன் கையிலெடுத்து, தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்றி, தி.மு.க., வெற்றிகளை பெற்றிருக்கிறது.
பல இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னும், அதை அறிவிக்க தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்பு காட்டவில்லை. வெற்றி பெற்றவர்களை, தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளனர்.தி.மு.க., பெற்ற வெற்றி, புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என்பதை, சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவோம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE