மதுரை ;ஆயுதபூஜை குறித்து தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என தமிழ் இலக்கிய ஆய்வாளர் பா.இந்துவன் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: ஆயுத பூஜைக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை, அது ஆரியர்களுடையது என சிலர் கூறி வருகின்றனர். ஆனால் சங்க இலக்கியத்திலேயே ஆயுதபூஜை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
பனிரெண்டாம் திருமுறையில் சேக்கிழார் பெருமான்,"கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி முன்னாள்"- என குறிப்பிட்டுள்ளார்.
நவமிக்கு முந்தைய தினத்தில் போரில் ஈடுபடும் யானைக்கு யானைப்பாகன் அலங்காரம் செய்து மரியாதை செய்தார் என்பது இதன் பொருள்.அதன் முன்னேற்றமாகவே நாம் இன்று ஆயுதங்களை சுத்தம் செய்வது, பயன்படுத்தும் வாகனங்களை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்து மரியாதை செய்யும் நிகழ்வை செய்கிறோம்.
இதையும் சிலர் ஏற்காமல் திருமுறைகளில் இடைச்செருகல் உண்டு, எனவே இதுவும் இடைச்செருகலாக இருக்கலாம் என கூறுவர். அதற்கு பதிலாக சிலப்பதிகாரத்தில் இருப்பதை குறிப்பிடலாம்.
"கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது"
பொருள்:- போருக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்களை கொற்றவை முன்பு வைத்து வழிபட்டு எடுத்துச்செல்ல வேண்டும், கொற்றவைக்குச் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளை செய்யவில்லையெனில் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத்தரமாட்டாள் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
இதையும் ஏற்க மறுத்தால், சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில,"தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின் போர் படு மள்ளர்
போந்தொடு தொடுத்த கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப"
என்று வாளுக்கு விழா எடுத்த செய்தியை கபிலர் நேரடியாக குறிப்பிடுகிறார்.
புறப்பொருள் வெண்பாமாலையின் வாள் மங்கலப்பாடலில்,
"நால் திசையும் புகழ் பெருக வீற்று இருந்தான் குடை புகழ்ந்தன்று. கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று" என்று வாளை புகழ்ந்து பாடுகின்றனர். தொல்காப்பியத்தில்,
"பிறந்த நாள்வயின் பெருமங் கலமும் சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும் மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும் மன்எயில் அழித்த மண்ணுமங் கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும்" என கூறப்பட்டுள்ளது.
பொருள்: மாணார் என்ற சொல்லுக்கு போர் பயிற்சி பெறும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றும் அதில் குறிப்பாக நச்சினார்க்கினியர் பகைவரை வெற்றி கொண்ட வாளை வாழ்த்தி செய்யப்படும் சிறப்பு செயல்முறைகளை அதாவது ஆயுத பூஜையையே குறிப்பிடுகிறார்.
எனவே ஆயுத பூஜை ஆரியர் வழிபாடு என்று கூறுவதை விட்டுவிட்டு தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE