நாகர்கோவில்:பாம்பை கடிக்க வைத்து மனைவி உத்ரா 25ஐ, கொன்ற கணவன் சூரஜ் 27, க்கு 17 ஆண்டு கடுங்காவல், தொடர்ந்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் ஆறாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா. கணவர் சூரஜ், அடூரை சேர்ந்தவர். 7.5.2020 அன்று தாய் வீட்டின் மாடியில் 'ஏசி' அறையில் துாங்கி கொண்டிருந்த உத்ரா பாம்பு கடித்து இறந்தார். அறையில் பதுங்கியிருந்த பாம்பை உறவினர்கள் அடித்து கொன்றனர். இதற்கு முன்னரும் ஒரு முறை கணவர் வீட்டில் உத்ராவை பாம்பு கடித்து சிகிச்சையில் உயிர் பிழைத்தார்.
'சர்ப்ப சாபம்' என்று கதை கிளப்பப்பட்டாலும் போலீஸ் விசாரணையில் திட்டமிட்ட கொலை என தெரிந்தது.சூரஜ் மற்றும் பாம்பை வாடகைக்கு விட்ட சுரேஷ் கைது செய்யப்பட்டனர். மனைவியை கொன்று விட்டு சொத்தை அபகரிக்க சூரஜ் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மிக அபூர்வமான இந்த வழக்கை அறிவியல் ரீதியாகவும் விசாரித்தனர். பாம்பு சாதாரணமாக கடித்தால் பற்களுக்கிடையிலான இடைவெளி 1.7 செ.மீ., மட்டுமே இருக்கும். ஆனால் உத்ராவை கடித்த பாம்புகளின் பல் இடைவெளி 2.5 மற்றும் 2.7 செ.மீ., இருந்தது. பாம்பின் தலையை பிடித்து கடிக்க வைத்தால்தான் இந்த இடைவெளி வரும் என்பதை அரசு தரப்பு வாதம் எடுத்து வைத்தனர்.
இதற்காக கோழி இறைச்சி கட்டிய உத்ரா உருவத்தில் பாம்பின் தலையை பிடித்து கடிக்க வைத்து அதன் அளவை விசாரணை அதிகாரிகள் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். பாம்பை வாடகைக்கு விட்ட சுரேஷ் அப்ரூவராக மாறினார்.பாம்பு வேகமாக கடிப்பதற்காக அதை ஏழு நாள் பட்டினி போட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உட்பட 288 ஆதாரங்கள், 40 பொருட்கள், 87 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அக்.,11ல் சூரஜ் குற்றவாளி என கோர்ட் அறிவித்தது. கொல்லம் ஆறாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்தார்.பல்வேறு பிரிவுகளின் கீழ் சூரஜ், முதலில் 10 ஆண்டு, அதன்பின் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை, அதன்பின் தொடர்ந்து இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பலத்த பாதுகாப்புடன் சூரஜ் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பை கேட்க கோர்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.