உள்ளாட்சி மலர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மும்முரம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி மலர் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் மும்முரம்!

Added : அக் 14, 2021
Share
திருப்பூர் மாநகராட்சி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய இத்திட்டப் பணிகள் எப்போது முழுமையாக முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநாட்டு அரங்கம்:குமரன் ரோட்டில் மாநகராட்சி டவுன்ஹால்

திருப்பூர் மாநகராட்சி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய இத்திட்டப் பணிகள் எப்போது முழுமையாக முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாநாட்டு அரங்கம்:குமரன் ரோட்டில் மாநகராட்சி டவுன்ஹால் வளாகம், நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. பல்வேறு பொது நிகழ்ச்சிகள், பொருட்காட்சி, கண்காட்சி நிகழ்வுகள் நடத்தும் வகையில் பெரிய அளவில் இட வசதியுடன் இவ்வளாகம் இருந்தது. இதை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு, மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணி, 55 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியுள்ளது. ஏறத்தாழ 9500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில், நான்கு தளங்களில் இந்த அரங்கம் கட்டப்படுகிறது. இதில் வாகன பார்க்கிங் அன்டர் கிரவுன்ட் தளத்திலும், தரைத் தளம் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள், கண்காட்சி, கூட்ட நிகழ்வுகள் நடத்தும் இடம் மற்றும் உணவுக் கூடத்துடன் அமைக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தற்போது கீழ்தளம் மற்றும் தரைத் தளம் கட்டுமானம் நிறைவடைந்துள்ளன. முதல் தளத்துக்கு கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிப்., மாதம் நிறைவடைய வேண்டிய இப்பணியில் தற்பேது கட்டுமானப் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது.* பல அடுக்கு வாகன நிறுத்தம்:டவுன்ஹால் வளாகம் அருகே 12.5 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு தளங்களில் வாகன பார்க்கிங் கட்டப்படுகிறது. இதில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனம், 500 கார்கள் என நிறுத்தும் வகையில் நான்கு தளங்கள் திட்டமிட்டு பணி நடைபெறுகிறது. ரேம்ப் மற்றும் லிப்ட் வசதியும் அமைக்கப்படும். இத்திட்டமும் பிப்., மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இதில் 80 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.அதே போல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 19 கோடி ரூபாய் செலவில் நான்கு தளங்கள் கொண்ட வாகன பார்க்கிங் மையம் கட்டப்படுகிறது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனம் மற்றும் 20 கார்கள் நிறுத்தும் வகையில் ரேம்ப் மற்றும் லிப்ட் வசதியும் அமைந்துள்ளது. இதன் பணி கடந்தாண்டு ஆக., மாதம் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது 90 சதவீத அளவுக்கு மேல் பணி முடிந்துள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடைபெறுகிறது.*புது பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு:பி.என். ரோட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்ட் வளாகம், 32 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு செய்யும் திட்டம் தற்போது 75 சதவீத அளவில் நிறைவடைந்துள்ளது.

ஏற்கனவே உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகம் புதுப்பித்தல் பணியுடன், முன்புறத்தில், 44 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம், வாகன பார்க்கிங் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. கடந்த பிப்., மாதம் முடிய வேண்டிய பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளது.*பழைய பஸ் ஸ்டாண்ட்:காமராஜ் ரோட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் 38.5 கோடி ரூபாய் செலவில் நவீன பஸ் ஸ்டாண்ட்டாக மாற்றியமைக்கும் பணி நடைபெறுகிறது. பஸ் ரேக்குகள், வணிக வளாகம், அறிவிப்பு வசதி, வாகன பேட்டரி சார்ஜ் வசதி, ஓய்வறை, போலீஸ் அவுட் போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன்

இந்த பஸ் ஸ்டாண்ட் அமைகிறது. கடந்த பிப். மாதம் முடிவுற வேண்டிய பணி தற்போது 75 சதவீதம் அளவு முடிவுற்றுள்ளது.*தென்னம்பாளையம் சந்தை வளாகம்:பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் வாரச் சந்தை, 13.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டும் பணி ஏறத்தாழ 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதில் ஏறத்தாழ 200 கடைகள் கான்கிரீட் கூரையுடன் அமைந்துள்ளது. காய்கறி கொண்டு வரும் லாரிகள், வேன்கள் நிறுத்தும் வசதி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 90 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது. கடைகள் ஏலம் விடுவதற்கான முன்னேற்பாடு நடைபெறுகிறது

தினசரி மார்க்கெட்:பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே தினசரி மார்க்கெட் வளாகம் முற்றிலும் இடித்து அகற்றி புதிய வளாகம் கட்டும் பணி நடைபெறுகிறது. இங்கு 30 கோடி ரூபாய் மதிப்பில் கீழ் தளம், தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள் அமையவுள்ளன. மொத்தம், 396 கடைகள்; 300 இரு சக்கர வாகனம், 100 நான்கு சக்கர வாகனம் ஆகியன நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி; பொதுக்கழிப்பிடம் உள்ளிட்டன அமையவுள்ளன. கட்டுமானப் பணியில் தற்போது 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

பூ மார்க்கெட்:ஈஸ்வரன் கோவில் வீதியில் 4.7 கோடி ரூபாய் மதிப்பில் பூ மார்க்கெட் வளாகம் புதிதாக அமைக்கப்படுகிறது. இதில் கான்கிரிட் கூரையுடன் 86 கடைகள்; கீழ் தளத்தில் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் 100 வரை நிறுத்தும் வசதியுடன் அமைகிறது. கட்டுமானப் பணி 75 சதவீதம் முடிவுற்றுள்ளது.* நொய்யல் கரை மேம்பாடு பணி:திருப்பூர் நகரப் பகுதியில் 6.2 கி.மீ., நீளத்துக்கு நொய்யல் ஆற்றின் இரு புறமும் கரை மேம்படுத்தும் திட்டம் 180 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆற்றின் கரையில் ரோடு, நடைபாதை, சிறுவர் பூங்கா, பொழுது போக்கு தலம், உணவகம், கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் என திட்டமிடப்பட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இவை தவிர மேலும் சில பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் இப்பணிகள் முறையாக திட்டமிட்டபடி துவங்கியிருந்தால் பெரும்பாலானவை தற்போது பயன்பாட்டில் இருந்திருக்கும்.

ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது; தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று விட்டு திரும்பியதில் ஏற்பட்ட காலதாமதம் போன்ற காரணங்கள் இப்பணியில் பெரும் தொய்வை ஏற்படுத்தியது.தற்போது இப்பணிகள் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதனால், இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும் நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X