பி.எஸ்.எப்., வீரர்களின் அதிகார வரம்பு... உயர்வு!: எ ல்லையில் 50 கி.மீ., வரை அதிரடி காட்டலாம்| Dinamalar

பி.எஸ்.எப்., வீரர்களின் அதிகார வரம்பு... உயர்வு!: எ ல்லையில் 50 கி.மீ., வரை அதிரடி காட்டலாம்

Updated : அக் 16, 2021 | Added : அக் 14, 2021 | கருத்துகள் (12+ 40)
Share
புதுடில்லி:பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று மாநிலங்களான பஞ்சாப், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில், எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பு, 15 கி.மீ.,யில் இருந்து 50 கி.மீ.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாரின் அனுமதி இன்றி இந்த பகுதிகளில் சோதனை நடத்தவும், பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபடவும் எல்லை
பி.எஸ்.எப்., வீரர்களின் அதிகார வரம்பு... உயர்வு!: எ ல்லையில் 50 கி.மீ., வரை  அதிரடி காட்டலாம்

புதுடில்லி:பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று மாநிலங்களான பஞ்சாப், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில், எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பு, 15 கி.மீ.,யில் இருந்து 50 கி.மீ.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாரின் அனுமதி இன்றி இந்த பகுதிகளில் சோதனை நடத்தவும், பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபடவும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் நம் சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்கும் பணியில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சர்வதேச எல்லையில் இருந்து நம் பகுதிக்குள் 15 கி.மீ., துாரம் வரை மட்டுமே இவர்களுக்கு அதிகார வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட பகுதிகளில் உள்ளூர் போலீசாரின் அனுமதி இன்றி இவர்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட அதிகாரம் இல்லை.


பல்வேறு தடங்கல்

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பி.எஸ்.எப்., வீரர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியை, 15 கி.மீ.,யில் இருந்து 50 கி.மீ.,யாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

எல்லைப் பகுதிகளில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. இதை கண்காணித்து கட்டுப்படுத்தவே பி.எஸ்.எப்., அதிகார வரம்பை அதிகரித்துள்ளோம்.இதன் வாயிலாக பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் மற்றும் குஜராத் மாநில எல்லையில் 50 கி.மீ.,க்கு உட்பட்ட பகுதியில் பி.எஸ்.எப்., வீரர்கள் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும், குற்றங்களில் ஈடுபடும் எவரையும் கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பி.எஸ்.எப்., வீரர்களுக்கு அதிகார வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. அங்கு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்யவும், கைது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது.இதன் வாயிலாக 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் சட்ட விரோத ஊடுருவல்கள் தடுக்கப்படுவதுடன் தேசிய பாதுகாப்பு வலுப்பெறும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், ''இது மாநில அரசின் உரிமைகள் மீதான நேரடி தாக்குதல். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்,'' என்றார்.

திரிணமுல் காங்., செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது: மேற்கு வங்க அரசை கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை திடீரென எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை நடத்த வேண்டும் எனில் மாநில அரசின் உதவியை நாடலாம். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப் பட்டு வருகிறது.தற்போது அவர்களின் அதிகார வரம்பை அதிகரித்துள்ளதன் வாயிலாக மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி கூறியதாவது:எல்லைப் பகுதியை பாதுகாப்பதோடு, ஊடுருவலை தடுப்பதே எல்லை பாதுகாப்பு படையினரின் முக்கிய பணி. ஆனால் அந்த பணியை செய்வதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளன.


நடவடிக்கை

சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் போது உள்ளூர் போலீசார் மற்றும் கிராம மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி உள்ளது. எல்லையில் உள்ள புறக்காவல் நிலையங்களில் மட்டுமே பணியாற்றி வந்த நாங்கள், இப்போது 50 கி.மீ., வரை எங்கள் அதிகாரத்தை விஸ்தரிக்க முடியும்.ஏதாவது வழக்கில் உளவுத்துறை தகவல் கிடைத்தால் உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்புக்கு காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கையில் இறங்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


பலவீனமாக்க முயற்சி!

மாநில அரசுகளை பலவீனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில், எல்லை பாதுகாப்பு படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட மோசமான வரலாறுகள் உள்ளன.

சவுகதா ராய், எம்.பி.,

திரிணமுல் காங்.,


அத்துமீறும் செயல்!

எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு விஸ்தரிப்பு என்பது மாநிலங்களின் உரிமைகளில் தலையிடும் செயல். இதுபோன்ற அத்துமீறல்களில் அரசு ஈடுபட்டால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,

மூத்த தலைவர், காங்கிரஸ்


திசை திருப்ப வேண்டாம்!

அதானிக்கு சொந்தமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் சமீபத்தில் 25 ஆயிரம் கிலோ, 'ஹெராயின்' போதைப் பொருள் வந்தது. செப்டம்பரில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இந்த பிரச்னையை திசை திருப்பவே, பி.எஸ்.எப்., அதிகார வரம்பை உயர்த்தும் நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

ரன்தீப் சுர்ஜேவாலா,

பொது செயலர், காங்.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X