தமிழ்நாடு

ரூ.1,000 கோடி! ';காஞ்சி, செங்கை ஊராட்சி தேர்தலில் வாரி இறைப்பு :ஜெயித்தவர் அள்ளலாம்; தோற்றவர் 'தலையில் துண்டு'

Added : அக் 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கு நிகராக, 1,000 கோடி ரூபாய் வரை வேட்பாளர்கள் வாரியிறைத்ததும், ஓட்டுக்கு, 1,000 முதல் 5,000 ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. தேர்தலில் பெரியளவில் செலவழித்தும் தோல்வி அடைந்தவர்கள், 'தலையில் துண்டு' போட வேண்டிய நிலைக்கு
ரூ.1,000 கோடி!  ';காஞ்சி, செங்கை ஊராட்சி தேர்தலில் வாரி இறைப்பு :ஜெயித்தவர் அள்ளலாம்; தோற்றவர் 'தலையில் துண்டு'

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கு நிகராக, 1,000 கோடி ரூபாய் வரை வேட்பாளர்கள் வாரியிறைத்ததும், ஓட்டுக்கு, 1,000 முதல் 5,000 ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. தேர்தலில் பெரியளவில் செலவழித்தும் தோல்வி அடைந்தவர்கள், 'தலையில் துண்டு' போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிஉள்ளன.சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பல்வேறு சர்ச்சைகள், மோதல்கள், முறைகேடுகளுடன் தேர்தல் முடிந்துள்ளது.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 155 பேரும், 154 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 1,005 பேரும், 359 ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 2,010 பேரும், 2,679 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 9,735 பேரும் களத்தில் நின்றனர்.


மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 11 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 64 பேரும், 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 384 பேரும், 269 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 922 பேரும், 1,793 பதவிகளுக்கு 5,666 பேர் என, மாவட்ட அளவில் மொத்தமாக, 2,171 பதவிகளுக்கு, 7,036 பேர் போட்டியிட்டனர்.இந்த இரண்டு மாவட்டங்களிலும், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் முதல் தலைவர், வார்டு உறுப்பினர் வரை, தி.மு.க., கூட்டணி கட்சிகளே, 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன.

தமிழகத்தில், தி.மு.க., 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், அதிக வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க.,வினரும், கூட்டணி கட்சியினரும் மகிழ்ச்சி கடலில் உள்ளனர்.

ஆளுங்கட்சியாக இருப்பதால், எப்படியும் பதவியை பிடித்துவிட வேண்டும் என, அவர்கள் களத்தில் இறங்கி செலவழித்தது வீண் போகவில்லை.அதே நேரம், ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாததால், எப்போது தேர்தல் நடக்கும் என்று ஏங்கிக் கொண்டும், தேர்தலில் நின்று பதவியை பிடிப்பதற்காகவே, சில ஆண்டுகளாக தங்கள் பகுதியில் செலவழித்து, 'கெத்து' காட்டிக் கொண்டிருந்தவர்களும், இந்த தேர்தலில், பணத்தை வாரி இறைத்தனர்.

வார்டு உறுப்பினர் பதவிக்கு, நகர் புறத்தை ஒட்டிய ஊராட்சிகளில், 10 லட்சம் ரூபாய் வரையும், கிராம பகுதிகளில் 1 - 2 லட்சம் ரூபாய் வரையிலும் செலவழித்து உள்ளனர்.அதே போல, தலைவர் பதவிக்கு, சென்னை புறநகர் ஊராட்சிகளில், 2 கோடி ரூபாய் வரை செலவழித்தவர்களும் உண்டு. நகர்புறத்தை ஒட்டிய ஊராட்சிகளில், 50 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரையும், கிராம பகுதிகளில், 10 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரையும் செலவழித்துள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள், 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை செலவழித்து உள்ளனர். இதில், 30 சதவீதம் கூட, பிரசாரத்திற்கு செலவாகவில்லை; 70 சதவீதம் செலவு, வாக்காளர்களுக்கான 'கவனிப்பு' தான்.


பரிதாபம்களத்தில் நின்ற ஒட்டுமொத்த வேட்பாளர்களில், 30 சதவீதம் பேர், பிரசாரத்திற்கு கூட செலவழிக்கவில்லை. மீதமுள்ள, 70 சதவீதம் பேரில், 20 சதவீதம் பேர் ஓரளவும், 50 சதவீதம் பேர் வாரியிறைத்தும் செலவழித்தனர்.இதில், அரசியல் குடும்பம், பூர்வீக சொத்து உடையவர், தொழில் அதிபர்கள் மட்டுமின்றி, புதிதாக அரசியல் ஆசை உருவானவர்கள், பதவியை பிடித்து சம்பாதிக்கலாம் என, வட்டிக்கு பணம் வாங்கி செலவழித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

பெண்களுக்கு கொலுசு, மூக்குத்தி, ஹாட் பாக்ஸ், இரும்பு கட்டில், குக்கர், புடவை, அரிசி மூட்டை, எண்ணெய் பாக்கெட், காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் தொகுப்பு, கூப்பன் என, அவரவர் தகுதிக்கு ஏற்ற பரிசு பொருட்களை வாரி வழங்கினர். ஓட்டுக்கு, 1,000 முதல் 5,000 ரூபாய் வரை கொடுத்தனர்.

அப்படி வாரி வழங்கியும் தோற்ற வேட்பாளர்கள், ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு, 'தலையில் துண்டு' போட்டுக் கொண்டு, அடுத்த நகர்வு தெரியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.சிலர் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி தேர்தலில் களம் கண்டு, பணத்தை இழந்து, குடும்பத்தினர் முகத்தில் கூட முழிக்க முடியாமல் மனம் நொந்து போயுள்ளனர். எவ்வளவு செலவானாலும், கவுரவத்திற்காக பதவியை பிடிக்க எண்ணி, பணத்தை வாரி இறைத்தும் தோல்வியை தழுவிய வேட்பாளர்களும் உள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள், செலவழித்த தொகையை எந்தெந்த வழிகளில் சம்பாதிக்க முடியும் என, இப்போதே யோசிக்க துவங்கிவிட்ட நிலையில், தோற்றவர்கள் நிலைமை ரொம்ப பரிதாபமாக மாறி உள்ளது.வாங்கிய கடனை எப்படி அடைப்பது, வட்டி எப்படி கட்டுவது என தெரியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.உள்ளூர் 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், தத்துவ மழை பொழிந்து, ஆதரவாளர்கள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் கொடுமையும் நடக்கிறது.

இதற்கிடையே, இந்த இரண்டு மாவட்டங்களிலும், வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட கவுன்சிலர் வரை, பிரதான கட்சிகள் முதல் சுயேச்சைகள் வரை, அனைவரும் வீடு தேடி வந்து கொடுத்த பணத்தில், தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாட, வாக்காளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


செலவழித்த பணத்தை 'அள்ளுவது' எப்படி?

* வார்டில் நடக்கும் அரசு பணிகளுக்கு ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கிடைக்கும் * அரசு ஒப்பந்தங்களை 'பினாமி' பெயரில் எடுத்து தரமில்லாமல் செய்வது* ஊராட்சிகளில் புதிதாக வரி போடுவது, குடிநீர் இணைப்பு போன்றவற்றுக்காக அலுவலகத்தை நாடி வரும் மக்களிடம் 'கல்லா' கட்டுவது*கட்டட வரைபட அனுமதிக்கு 'கட்டிங்' கேட்பது*புதிதாக மனைப்பிரிவு உருவானால், புரமோட்டரிடம் குறிப்பிட்ட தொகையை 'கறப்பது!'* அரசு புறம்போக்கு நிலங்களை தேடி பிடித்து, பிளாட் போட்டு விற்பது*தொழிற்சாலைகளை மிரட்டி கட்டுமான பொருட்கள் முதல் கேன்டீன், மேன் பவர், ஸ்கிராப் என, அனைத்து பணிகளையும் எடுத்து, முறைகேடாக செய்வது* தொழிற்சாலை கட்டுமான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முன்பே, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவன பிரமுகர்களை அழைத்து பேசி, கணிசமான தொகை பெறுவது* ஏரி, குளங்களை துார் வாரினால், முறைகேடாக மண் அள்ளுவது அல்லது மண் எடுக்கும் ஒப்பந்ததாரரிடம் 'கட்டிங்' பெறுவது.


அமர்வு படி மட்டுமேஅரசு பணம்!


ஊரக தேர்தலில் வெற்றி பெறும் வார்டு உறுப்பினர்கள் முதல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் வரை, யாருக்கும் அரசு சார்பில் சம்பளம் வழங்கப்படுவது கிடையாது. மாதாந்திர கூட்டம் நடக்கும் தினத்தில், கூட்டத்திற்கு வந்து கையெழுத்திட்டால், அமர்வு படி மட்டும் கிடைக்கும். அதுவும் வார்டு உறுப்பினர்களுக்கு 50 ரூபாய்; ஊராட்சி தலைவருக்கு 100 ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்களுக்கு 500 ரூபாய் அரசு பணத்தில் வழங்கப்படும்.

ஊராட்சி தலைவருக்கு, மாதம் 1,000 ரூபாய், பயண படி என்ற வகையில் வழங்கப்படும். இந்த தொகையை உயர்த்தி சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த படியை பெற்று, 'மக்கள் சேவை' செய்யவே, வேட்பாளர்கள் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளனர்.


நம்புங்க...9.7 லட்சம் தான் சிக்கியது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி தேர்தல் அறிவிப்பு முதல் ஓட்டுப்பதிவு வரை, 2.49 லட்சம் ரூபாயும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 7.20 லட்சம் ரூபாயும் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதைத்தவிர, அரிசி சிப்பம், மதுபாட்டில், மூக்குத்தி உள்ளிட்ட பரிசு பொருட்களும் சிக்கி உள்ளன. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட பணம், பரிசு பொருட்களில், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது மிக மிக சொற்பம் என்பதே நிதர்சனமான உண்மை என்கின்றனர் வாக்காளர்கள்.


அடுத்த பேரம் ஆரம்பம்!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 20ம் தேதி, அந்தந்த தேர்தல் அலுவலர்களால் பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது. வரும் 22ல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.

இந்த மறைமுக தேர்தலில், மாவட்ட மற்றும் ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஓட்டளிப்பதற்கு, பல தரப்பு உறுப்பினர்களிடம் அரசியல் கட்சியினர் பேரம் துவக்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
15-அக்-202118:55:31 IST Report Abuse
DVRR ஆகா மொத்தம் இதிலிருந்து தெரிவது டாஸ்மாக் நாட்டில் மக்கள் யாவரும் என்ன என்ன என்ன வேண்டுமானலும் செய்கின்றேன் பணம் கொடு அந்த குலமா???அப்போ டாஸ்மாக்கினாடு உருப்படவே உருப்படாது என்று சொல்வது போல இருக்கின்றது. அதான் திருட்டு மு...ள் கயவர்கள் கழகம் இவ்வளவு வெற்றியை அள்ளியதா???
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
15-அக்-202118:54:57 IST Report Abuse
DVRR ஆகா மொத்தம் இதிலிருந்து தெரிவது டாஸ்மாக் நாட்டில் மக்கள் யாவரும் என்ன என்ன என்ன வேண்டுமானலும் செய்கின்றேன் பணம் கொடு அந்த குலமா???அப்போ டாஸ்மாக்கினாடு உருப்படவே உருப்படாது என்று சொல்வது போல இருக்கின்றது. அதான் திருட்டு முட்டாள் கயவர்கள் கழகம் இவ்வளவு வெற்றியை அள்ளியதா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X