சென்னையில் அதிகரிக்கும் கருப்பட்டி பேக்கரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் கருப்பட்டி 'பேக்கரி'கள்

Added : அக் 15, 2021
Share
தாம்பரம்:வறட்சியை தாங்கி வளரும் மரங்களில், முதலிடத்தில் பனை மரம் உள்ளது. ஆண்டுக்கு ஒரு மரத்திலிருந்து, பதனீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, தும்பு 11 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோவும், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, கட்டடத்திற்கான மரம் என, பனை மரம் மக்களுக்கு, பல பயன்களை தருகிறது.இந்தியாவில் உள்ள பனை மரங்களில், 60 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது. பரவலாக

தாம்பரம்:வறட்சியை தாங்கி வளரும் மரங்களில், முதலிடத்தில் பனை மரம் உள்ளது. ஆண்டுக்கு ஒரு மரத்திலிருந்து, பதனீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, தும்பு 11 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோவும், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, கட்டடத்திற்கான மரம் என, பனை மரம் மக்களுக்கு, பல பயன்களை தருகிறது.

இந்தியாவில் உள்ள பனை மரங்களில், 60 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது. பரவலாக காணப்படும் பனை மரம், தென் மாவட்டங்களில் அதிகம்.உடல் வீக்கம், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கரும்பு சர்க்கரைக்கு பதிலாக, பனங்கருப்பட்டியை பயன்படுத்தலாம்.

பொட்டாசியம் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களுக்கு, கருப்பட்டி சிறந்த மருந்து.வெள்ளை சர்க்கரை நடைமுறைக்கு வரும் முன், தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்களில், கருப்பட்டி மற்றும் அது சார்ந்த, பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை ஆகியவையே அன்றாட பயன்பாடாக இருந்தது.

ஆனால், வெள்ளை சர்க்கரை மீதான மோகம், அதிகப்படியான இனிப்பு சுவை மீதான பொது மக்களின் ஆசை, கருப்பட்டியின் விலை ஆகியவற்றால், மெல்ல மெல்ல இவற்றின், பயன்பாடு தமிழகத்தில் குறைந்தது.குறிப்பாக, சென்னையை பொறுத்தவரை கருப்பட்டி மற்றும் அது சார்ந்த பொருட்கள் பயன்பாடு, முற்றிலும் மறைந்து போனது.

இந்நிலையில், சமீபகாலமாக தென் சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரையில் தயார் செய்யப்பட்ட இனிப்புகளுடன், டீ, பால், காபி ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.இதில், 'ஆலடிபட்டியான் கருப்பட்டி காபி' என்ற கடை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் படித்து, பட்டம் பெற்ற, தென்காசி மாவட்டம், சுரண்டை அடுத்த ஆலடிபட்டி கிராம பட்டதாரிகளால் உருவாகி உள்ளது.

அந்த கிராமத்தை சேர்ந்த, மோசஸ் தர்மபாலன், மாரிராஜா, சார்லஸ், வினோத் விக்டர் ஆண்டனி, ஸ்டாலின் சுந்தர், ராஜேந்தர், தினேஷ் உட்பட ஏழு நண்பர்கள் இணைந்து, முதலில் திருநெல்வேலி அல்வாவை, 'ஆன்லைனில்' மட்டும் விற்பனை செய்தனர்.அதற்கு வரவேற்பு அதிகரித்ததால், கூடுவாஞ்சேரியில், தேநீருடன் கூடிய, அல்வா கடை துவக்கப்பட்டது. தொடர்ந்து தாம்பரம், வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் உட்பட, 25 இடங்களில் கிளைகள் திறக்கப்பட்டன.இந்த கடை பிரபலமானதை தொடர்ந்து, 'உடன்குடி, குடந்தை, காஞ்சி ' என பல்வேறு பெயர்களில், கருப்பட்டி மற்றும் நாட்டுச் சர்க்கரை டீ, பால், காபி விற்பனை செய்யும் 'பேக்கரி' கடைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

மறைந்து வந்த நம் பாரம்பரியம் மிக்க பொருட்களுள் ஒன்றான கருப்பட்டி மற்றும் அது சார்ந்த பொருட்களின் பயன்பாடு, மீண்டும் அதிகரித்து வந்தாலும், மற்ற உணவு பொருட்களில் உள்ளது போல், காலமாற்றம், இவற்றிலும் கலப்படத்தை புகுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.

இது பற்றி, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பட்டி விற்பனையாளர், சுந்தரம், 52, கூறியதாவது:பதனீரை காய்ச்சி, பாகாக மாற்றினால் பனங்கருப்பட்டி தயாராகி விடும். 1 கிலோ பனங்கருப்பட்டி தயாரிக்க, 7.5 லிட்டர் பதனீர் தேவை. 100 கிராம் பனங் கருப்பட்டியில், நீர், இரும்பு, நிக்கல், மக்னீஷியம், பொட்டாஷியம், வைட்டமின் சி, கால்ஷியம், தையமின் பி6, ரிபோப்ளோவின் பி12, தாதுப்புக்கள் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளன.

இதிலுள்ள தாதுப்புக்கள் எளிதில் ஜீரணமாகும் இயல்புடையது.கரும்பு வெல்லத்தை விட, பனங்கருப்பட்டியில் அமினோ அமிலங்கள் நிறைய உள்ளதால், வெந்நீரில் கலந்து பானமாக அருந்தலாம். இதில் மட்டும் தான், ரெட்யூசிங் சர்க்கரை உள்ளது.கருப்பட்டியை பொறுத்தவரை கலப்படம் என்பது, வெள்ளை சர்க்கரை வாயிலாக தான் நடக்கிறது.

வெள்ளை சர்க்கரை விலையை விட, கருப்பட்டியின் விலை, எட்டு மடங்கு அதிகம். இதனால் வெள்ளை சர்க்கரையை கொண்டு, கலப்பட கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.உண்மையான கருப்பட்டியில், வெள்ளை சர்க்கரை, 1 கிராம் அளவு கூட இருக்காது. கருப்பட்டியில் வெள்ளை சர்க்கரை கலந்திருந்தால், சுவைக்கும்போது அது, தெரிந்துவிடும். மேலும், உடைக்கும்போதும் கருப்பட்டி கடினமாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.

நாட்டுச் சர்க்கரையை பொறுத்தவரை, கரும்புச்சாறில் இருந்து தயாராகிறது. இதில், கரும்புச் சாறை பாகாக காய்ச்சும்போது, முதல் நிலையில் நாட்டுச்சர்க்கரையும், இரண்டாம் நிலையில், வெல்லமும் தயாரிக்கப்படுகிறது.வெள்ளை சர்க்கரை பயன்பாட்டில் இருந்து, நம் மக்கள் மீண்டும், பாரம்பரிய மிக்க நாட்டுச்சக்கரை மற்றும் கருப்பட்டி பயன்பாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

ஆனால், கருப்பட்டி மற்றும் அது சார்ந்த பொருட்களில் உள்ள கலப்படமும் அதிகரித்துள்ளது. அரசு தலையிட்டு, இதுபோன்ற கலப்படத்தை தடுக்க, பனை தொழிலாளர்கள் கூட்டமைப்பு வாயிலாக, சிறப்பு குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X