பொது செய்தி

தமிழ்நாடு

ஓலை குடிசையில் உன்னத உணவு

Added : அக் 15, 2021
Share
Advertisement
திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் தேசிய நெடுஞ்சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் சாலையை ஒட்டி, அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு பள்ளத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது, 'செவன் ஹில்ஸ்' சைவ உணவு விடுதி.செவன் ஹில்ஸ் என எழுதப்பட்ட, நைந்து கிழிந்து போன ஒரு பழைய பேனர் மட்டும் அங்கு இல்லை என்றால், அந்த உணவு விடுதியை கண்டுபிடிக்கவே முடியாது.அன்லிமிடெட்ஓலைக்
 ஓலை குடிசையில் உன்னத உணவு

திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் தேசிய நெடுஞ்சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் சாலையை ஒட்டி, அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு பள்ளத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது, 'செவன் ஹில்ஸ்' சைவ உணவு விடுதி.

செவன் ஹில்ஸ் என எழுதப்பட்ட, நைந்து கிழிந்து போன ஒரு பழைய பேனர் மட்டும் அங்கு இல்லை என்றால், அந்த உணவு விடுதியை கண்டுபிடிக்கவே முடியாது.அன்லிமிடெட்ஓலைக் குடிசைக்கு எப்போதாவது வரும் விருந்தினரை, அங்கிருக்கும் வயதான தம்பதி, ஆர்வத்தோடு வந்து, 'சாப்பிட வந்திருக்கீங்களா? வாங்க... வாங்க...' என்று வரவேற்கின்றனர்.

மொத்தம் மூன்று குடிசைகள் உள்ளன. இரண்டு குடிசைகளில், கல்லால் ஆன சாப்பாடு மேஜை போடப்பட்டுள்ளது. மூன்றாவது குடிசை, தம்பதியின் சமையல் அறையாக விளங்குகிறது. இது தவிர, மரத்திற்கு கீழ் திறந்த வெளியில் ஒரு கல் மேஜை உள்ளது. இதமான காற்று வீசியதால், திறந்த வெளி மேஜையில் உட்கார்ந்து சாப்பிடுவது, தனி அனுபவம். முதியவரும், அவரது மனைவியுமாக சேர்ந்து, சிறிது நேரத்தில் அருமையான உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாறுகின்றனர்.
முழு வாழை இலையில் சுடச்சுட சோறும், அதில் போட்டுக் கொள்ள முருங்கைக்கீரை பொடி, நெய் கொடுத்தனர். அதைச் சாப்பிடுவதற்குள், ஐந்து வகையான காய்கறி கூட்டுடன், கீரை வடை, அப்பளம், வாழைப்பூ பொரியல், சாம்பார், சுண்டைக்காய் குழம்பு, ரசம், தயிர், கடைசியில் பாயசம் என அணிவகுத்து வந்தது. எல்லாமே, 'அன்லிமிடெட்' தான்.

வடை வேண்டுமானாலும் கூடுதலாக கேட்டு வாங்கி சாப்பிடலாம்.மானியம்எல்லாமே வீட்டு பக்குவத்தில் தயாரித்தது என்பதால், எதுவுமே திகட்டவில்லை. சாப்பிட்டு முடித்ததும் மனதும், வயிறும் ஒரு சேர நிறைவடைகிறது. அவர்களது கதையை நீங்களும் தான் கேளுங்களேன்...

பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கே தான். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, சொந்த தொழில் துவங்கும் இளைஞர்களுக்கு மானியம் கொடுத்து உதவினார். இளைஞனாக இருந்த போது கிடைத்த அந்த உதவியின் மூலம், ஓட்டல் தொழிலை துவக்கினேன்.தொழில் ரொம்ப சிறப்பா இருந்தது. என் மனைவி நிர்மலா, நல்லா சமையல் செய்வாங்க. அவரின் மேற்பார்வையில் காலை டிபன், சாப்பாடு, இரவு உணவு எல்லாம் கொடுத்தோம்.

இந்த இடத்தில், 27 சென்ட் இடம் இருந்தது. திருப்பதி போகும் பஸ்கள், கார்களில் பயணிப்போர், இங்கே சாப்பிட்டு விட்டுத்தான் செல்வர்.எப்போதும் 'ஜே... ஜே...'ன்னு கூட்டம் இருக்கும். இருபது பேர் வேலை பார்த்தனர். எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டு இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில், என்னிடம் இருந்து பெரும்பாலான இடத்தை, அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அதன் பின், எங்கள் இடமும், வாழ்க்கையும் சுருங்கிப் போனது.

வாகன நிறுத்தம் இல்லாததால், கூட்டம் ரொம்பவே குறைந்து போனது. இப்போது யாராவது பழைய வாடிக்கையாளர்கள் தேடி வந்து சாப்பிட்டால் தான் உண்டு. ஆகவே, யாரையும் நம்பி சமைக்க முடியாது. காலை, இரவு உணவு உண்பதற்கு எப்போதாவது யாராவது வந்தால் தான் உண்டு. மதியம் மட்டும் ஒரு நாளைக்கு, ஐந்தில் இருந்து 10 பேர் வரை சாப்பிட வருவர். இந்த ஐந்து, 10 பேர் சாப்பிட்டு கொடுக்கும் பணத்தில் தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது.


வேலைவாய்ப்பு

இப்ப எனக்கு 62, வயது; மனைவி நிர்மலாவிற்கு, 57 வயது. சம்பளம் கொடுக்கும் அளவிற்கு வருமானம் கிடையாது என்பதால், வேலைக்கு ஆட்கள் யாரும் கிடையாது. காய்கறி நறுக்குவது முதல், சமைத்து பரிமாறுவது வரை நாங்களே தான் பார்த்துக் கொள்கிறோம்.எங்க சாப்பாட்டை சாப்பிட்டவங்க, திரும்ப எங்ககிட்ட தான் வருவாங்க. ஆனால், எங்களால தான் இன்னும் எத்தனை நாளைக்கு ஓட முடியும்னு தெரியலை.

மனசு ஒத்துழைக்கிற அளவிற்கு உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. எங்களுக்கு ஒரே மகன்; நிகழ்காலமும், எதிர்காலமும் இல்லாத இந்த தொழில் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு, வேலை தேடி வெளியூர் சென்றிருக்கிறான். என்னோட இடத்தை அரசாங்கம் எடுக்கும் போது, உரிய இழப்பீடு தரப்படும்னு சொன்னாங்க. ஆனால், அது இன்னும் முழுமையாக வரலை. அதோட, என் பிள்ளைக்கு அரசாங்க வேலை தரேன்னு சொன்னாங்க. அவனும் வளர்ந்து, படிச்சுட்டு தயாராயிருக்கான். எங்களுக்கு உரிய இழப்பீடும், மகனுக்கு ஒரு வேலைவாய்ப்பும் தந்தால் போதும். நாங்க நிம்மதியா கொஞ்ச நாள் இருப்போம்; ஓடி ஓடி களைச்சும் போயிட்டோம். இவ்வாறு சொல்லி முடித்தார் அந்த முதியவர்.

இது குறித்து, அரசாங்கத்திடம் கொடுத்த மனுக்களே மலையளவு இருக்கும் என்கிறார் வருத்தத்தோடு. எப்படியும் தங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, வாடிக்கையாளர்களின் பசியாற்றி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, முறுக்கம்பட்டு போஸ்ட், தரணிவராகபுரம் கிராம விலாசத்தில் இருக்கும் கோவிந்தசாமி - நிர்மலா தம்பதிக்கு, விடியலும், நிம்மதியும் விரைவில் கிடைக்க வேண்டும். உணவுக்கு ருசி கூட்டி, தேடி வருவோருக்கு பசியாற்றும் தம்பதியை, 93808 25285 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X