மதுரை-மதுரை மாவட்டம் சிறுமலை தென்மலை மீனாட்சிபுரம் மக்கள் மலையடிவாரத்திற்கு சென்று வர ரோடு, பஸ் வசதி இல்லை. 1987க்கு பிறகு மதுரையிலிருந்த பாதை துண்டிக்கப்பட்டு திண்டுக்கல் வழியாக ஊருக்கு சென்று வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சிறுமலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 2000 எக்டேர் நிலம் உள்ளது. பத்து கி.மீ., சுற்றளவில் ஆங்காங்கு 120 குடும்பங்களை சேர்ந்த 350 பேர் விவசாயம் செய்கின்றனர். பெரும்பாலும் ஓட்டு வீடுகளும் தகர வீடுகளுமாக உள்ளன. இவர்களுக்கு பட்டா இல்லை. ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் இடையே அரை கி.மீ., துாரம் உள்ளது. அலைபேசி இருந்தாலும் மலையடிவாரத்திற்கு சென்றால் தான் பேச முடியும். அவசர காலத்தில் ஒருவருக்கொருவர் 'ஓ…' என பெருங்குரலெடுத்து பேசுகின்றனர்.சவ்சவ், அவரை, பட்டர்பீன்ஸ், முருங்கை பீன்ஸ், வாழை, மிளகு, காபி விவசாயம் செய்து அந்த விளைபொருளை மட்டும் அனுபவித்துக் கொள்ள உரிமை தரப்பட்டுள்ளது. வனத்துறை சோதனைச்சாவடியில் காய்கறிகள் ஏற்றி வரும் பிக்கப் வேன்கள் பரிசோதனைக்கு பிறகே திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகின்றன.மதுரை மாவட்ட எல்லையிலிருந்து 7 கி.மீ., துாரத்தில் இருந்த மீனாட்சி புரம் தற்போது திண்டுக்கல்லைச் சுற்றி 120 கி.மீ., சென்றுவரும் சோகப்பாதையாக மாறியது 1987ல் தான். அப்போது பெருமழை பெய்தது. மண் அரிப்பால் 7 கி.மீ., பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. அந்த பள்ளம் நீண்டு ஆழமானது.மழையால் வண்டி போகாதுவீரணன், விவசாயி: தென்மலை அடிவாரத்திலிருந்து மீனாட்சிபுரம் வரை 4 கி.மீ., மலைப்பாதை. காய்கறிகள் ஏற்றி செல்லும் வேனை நம்பி வாழ்க்கை ஓடுகிறது. மழை பெய்தால் வண்டி போகாது. விளைந்த பொருட்களை தலைச்சுமையாக மலைடியவாரத்திற்கு கொண்டு செல்கிறோம். வாடிப்பட்டியின் விராலிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் கிராமம். விராலிபட்டியில்இருந்து மீனாட்சிபுரத்திற்கு செல்ல 6 கி.மீ.,க்கு ஒற்றையடி பாதை உள்ளது. இந்த துாரத்தை நடந்து செல்ல 2 மணி நேரமாகிறது. இதை வண்டிப்பாதையாக மாற்ற வேண்டும்.டோல்கேட்டால் நஷ்டம்சுந்தரி, விவசாயி: ரோடு வசதி இல்லாததால் 45 கி.மீ., துாரத்தில் உள்ள திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்கு விளைபொருட்களை எடுத்து செல்கிறோம். வண்டி போடும் ஆட்டத்தில் விளைபொருட்கள் சேதமாகும். அதை வியாபாரிகள் கழித்து கொள்வதால் நஷ்டம். ரோடு சரியாக இருந்தால் திண்டுக்கல் செல்லாமல் வாடிப்பட்டியிலிருந்து மதுரை பரவை மார்க்கெட்டிற்கே காய்கறிகளை கொண்டு செல்லலாம். தற்போது மதுரை வருவதற்கு டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் லாபம் இன்னமும் குறைகிறது.குழந்தைகளைகாண முடியவில்லைபாண்டியராஜன், விவசாயி: இங்கு 5வது வரை ஆரம்பபள்ளி உள்ளது. 5வது படிக்கும் பொண்ணும் 2வது படிக்கும் பையனும் உள்ளனர். ரோடு வசதி இல்லாததால் இருவரையும் ஒன்றாம் வகுப்பில்இருந்தே திண்டுக்கல் பஞ்சம்பட்டி விடுதியில் தங்க வைத்துள்ளேன். விடுதிக்கு இரண்டு பேருக்கும் ரூ.3000 கட்டுகிறேன். 5 வயதிலேயே விடுதியில் சேர்த்து விடுவதால் பிள்ளைகளை பார்க்க முடியாமல் பரிதவிக்கிறோம்.பட்டாணி, விவசாயி: நபார்டு வங்கி, கிரெட் தொண்டு நிறுவன அதிகாரிகள் சேர்ந்து 120 வீடுகளுக்கும் சோலார் மின்விளக்குகள் அமைத்தனர். பள்ளிக்கூடத்தில் மாதமொரு முறை ரேஷன் வாங்குவதற்கும் ஏற்பாடு செய்தனர். தென் மாவட்ட மக்களின் காய்கறி தேவையில் பெரும்பகுதியை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். ஆனால் மின்சாரமில்லை, குடிநீரில்லை, ரோடில்லை.முதியோர் ஓய்வூதியம்மாதம் ரூ.1000 தருகின்றனர். இங்கே வங்கி இல்லாததால் காசு செலவழித்து வாடிப்பட்டிக்கு போய் பணம் எடுத்து வருவேன். அவசரத்திற்கு செல்ல மருத்துவமனை இல்லை. இறந்து கிடந்தாலும் எங்களை பார்ப்பாரும் இல்லை; கேட்பாரும் இல்லை.மதுரை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு செல்கின்றனர். எங்களின் முயற்சியால் 5 கி.மீ., துார ரோட்டை சரிசெய்து விட்டோம். ஒரு இடத்தில் மிக பள்ளமாக இருப்பதால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட வனத்துறை மனது வைத்தால் மட்டுமே ரோட்டை சரி செய்யலாம். எங்களை அரசு தான் வாழ வைக்க வேண்டும் என்றனர் இப்பகுதி மக்கள்.