விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில், மாவட்டக் குழுவில் நான்கு இடங்களில் நம் கட்சி போட்டியிட்டது. அதில், மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், 75 சதவீத வெற்றி பெற்றுள்ளோம்.
ஏன் சார் நான்கு இடத்தில் போட்டியிட்டீர்கள்... ஒரு இடத்தில் மட்டும் போட்டியிட்டிருந்தால், 100 சதவீத வெற்றி கிடைத்து இருக்குமல்லவா!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு: அ.தி.மு.க., அரசு வழங்கிய பல சமூக நலத்திட்டங்களை, தி.மு.க., நிறுத்தி விட்டது. மாணவர்களுக்கு இலவச 'லேப்-டாப்' திட்டத்தை ரத்து செய்ய உள்ளது. கான்கிரீட் வீட்டில் இருந்தால், மண்டபத்தில் திருமணம் நடந்தால், இலவச தங்கம் கிடையாது என சட்டத்தை மாற்றி வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த, 500க்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றினால் கஜானா காலியாகி விடும். அதை தவிர்க்க, பல நிபந்தனைகளை விதிக்கிறதோ!
மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வினருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், கோவில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர். அவர்களின் கொள்கைப்படி, கோவில்களை விட்டு வெளியேறினால், அவர்களின் கொள்கைப் பிடிப்பை பாராட்டலாம்.
கோவில்களை எதிர்த்து அரசியல் செய்பவர்கள், கோவிலை விட முடியாமல் தவிப்பது வினோதமாகத் தான் இருக்கிறது!
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. எனவே, கொசு ஒழிப்பில் அரசு கவனமாக இருக்க வேண்டும். மேலும், பொது இடங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணியை துவக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தமிழக அரசு கட்டுப்படுத்தி விட்டதாம்... சுகாதார அமைச்சர் சொல்கிறார். எனவே, கஷாயம் எல்லாம் வழங்க மாட்டார்கள்!
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி: கோவில்களில் வழிபாட்டிற்கான, 'போற்றி' பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வௌியிட்டுள்ளோம். முதற்கட்டமாக, 46 முக்கிய கோவில்களில் அந்த புத்தகத்தை விற்பனைக்கு வைக்க உள்ளோம்.
அதில் மறந்து போய், 'கருணாநிதியே போற்றி; ஸ்டாலினே போற்றி' என்பன போன்ற கட்சி வாசகங்களையும் சேர்த்து விடாதீர்கள்!
விழுப்புரம் தொகுதி தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார் அறிக்கை: பா.ஜ.,வுக்காவது அந்த ஒத்த ஓட்டு கிடைத்திருக்கும் நிலையில், அது கூட நமக்கு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படும் 'நாம் தமிழர்' கட்சி தோழர்களே கவலை வேண்டாம். சமூக வலைதள ஓட்டுகளையும், 'யுடியூப் லைக்'குகளையும் இன்னும் எண்ணவில்லை.
உள்ளாட்சி தேர்தல் முடிவு, நாம் தமிழர் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக கேள்வி. அதை விட, நடிகர் கமல் தான் ரொம்ப அதிர்ந்து போய் விட்டாராம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE