நாமக்கல்: நாமக்கல் அடுத்த தலைமலையில் பாதை தவறி தவித்த இருவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள தலைமலையில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நாளை புரட்டாசி, 5வது சனிக்கிழமையாததால் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த மோகன் குமார், 27, ரவிச்சந்திரன், 21, ஆகியோர் கோவிலுக்கு சென்று விரதம் முடிக்கலாம் என, நேற்று காலை துறையூர் சாலை பவித்ரம் வழியாக தலைமலைக்கு சென்றனர். கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் காவக்காரன்பட்டி வழியாக வந்த அவர்கள் பாதை மாறியதால் நீண்டதூரம் மலையை சுற்றி நடந்துள்ளனர். மேற்கொண்டு நடக்க முடியாமல் தவித்த அவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் இருக்கும் இடம் எதுவென்று தெரியாததால், 'வாட்ஸ் ஆப் லொகேஷன்' அனுப்பி வைத்தனர். நிலைய அலுவலர் போக்குவரத்து (பொ) சரவணன் தலைமையில் தலமலைக்கு சென்ற தீயணைப்பு படையினர் மாலை, 5:00 மணிக்கு இருவரையும் மீட்டனர். அவர்கள் மீட்கப்படும் போது அனைத்து நாட்களும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என, அரசு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE