தாம்பரம்--ஊரக உள்ளாட்சி தேர்தலில், வேங்கைவாசல் ஊராட்சியில் தலைவர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கையில் 'மெகா' குளறுபடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள், 13ம் தேதி இரவு எண்ணி முடிக்கப்பட்டன.இந்த ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறி, அகரம் தென், பொழிச்சலுார் உட்பட பல ஊராட்சிகளில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் நேற்று முன்தினம், சிட்லப்பாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன்பும் மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில், வேங்கைவாசல் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள், நேற்று காலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து, தேர்தலில் பதிவான ஓட்டுகள் மற்றும் எண்ணப்பட்ட ஓட்டுகளின் விபரங்கள் பற்றி பட்டியல் கேட்டனர்; அவர் தர மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இது குறித்து வேட்பாளர்கள் கூறியதாவது:தலைவர் பதவிக்கான தேர்தலில், 27 ஓட்டுச் சாவடிகளில், 11 ஆயிரத்து 503 ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் எழுதிக் கொடுத்துள்ளனர்.ஆனால், ஓட்டு எண்ணிக்கையில், 16 ஆயிரத்து 700 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. பதிவான ஓட்டுகளை விட கிட்டத்தட்ட, 5,199 ஓட்டுகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன.இவ்வாறு, கூடுதலாக ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளதால், நியாயமாக வெற்றி பெற வேண்டிய வேட்பாளர்களின் வெற்றி, தட்டிப் பறிக்கப்பட்டு உள்ளது.எனவே, கூடுதல் ஓட்டுகளுக்கான விபரங்கள் மற்றும் பதிவான ஓட்டுகளின் விபரங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரியான, சிவகலைச்செல்வன், தன் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் என, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நாள் முதல் கேட்டு வருகிேறாம்; அவர், தருவதாக கூறியே காலம் தாழ்த்தி வருகிறார்.இது, அவர் ஓட்டுகளை முறைகேடாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சேர்த்து பதிவிடுவதற்காகவே செய்து வருவதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.ஓட்டு எண்ணிக்கையில் நடந்துள்ள இந்த 'மெகா' மோசடி மற்றும் ஜனநாயக படுகொலை மீது, மாநில தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE