திண்டுக்கல் : ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்க இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்கநிலை பள்ளிகளை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடக்கிறது.
கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவ.1 முதல் மழலையர், அங்கன்வாடி மற்றும் 1-8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.நேற்று (அக்.15) விஜயதசமியை முன்னிட்டு மழலையர் வகுப்பு, அங்கன்வாடியில் மாணவர் சேர்க்கை துவங்கியது. மேலும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்க இருப்பதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
நேரடி வகுப்பிற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வில் மாணவர்களுக்கான வசதிகளில் குறைபாடுகள் இருப்பின் அதனை பூர்த்தி செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் நவ.1 க்குள் முதல் தவணையாவது செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.