புதுடில்லி: 2022ம் ஆண்டு செப்., மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என இன்றைய காங்., காரியகமிட்டி குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு சோனியா தலைமை வகித்தார். கூட்டத்தில் லோக்சபா எம்.பி., ராகுல், பிரியங்கா, அம்பிகாசோனி, மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், பூபேஸ் பாகேல் உள்ளிட்ட மூத்த காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், புதிய தலைவர், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள், உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது: மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்தையும் நாம் கவனிக்காமல் இருந்தது இல்லை. இது தொடர்பாக மன்மோகன் சிங் மற்றும் ராகுலுடன் பேசி உள்ளேன். பார்லிமென்டிலும், வெளியேயும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
ஒற்றுமை முக்கியம்
விரைவில் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை துவக்கி விட்டோம். ஆனால், நாம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் ஒற்றுமையாக, கட்டுப்பாட்டுடன், கட்சியின் நலனை மட்டும் கவனத்தில் கொண்டுபணியாற்றினால், சிறப்பாக செயல்பட முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் புத்துயிர் பெற வேண்டும் என ஒட்டுமொத்த அமைப்பும் விரும்புகிறது. இதற்கு ஒற்றுமையும், கட்சியின் நலனை முன்னிலைப்படுத்துவதும் அவசியமாகிறது.

நான் தான் காங்கிரசின் முழு நேர தலைவர்
கடந்த 2019 முதல் கட்சியின் இடைக்கால தலைவராக பணியாற்றி வருகிறேன். முழுநேர தலைவரை நியமிப்பதற்கான காலக்கெடுவானது, கோவிட் 2வது அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. நான் தான் காங்கிரசின் முழு நேர தலைவர் என்பதை சொல்வேன். வெளிப்படைத்தன்மையுடன் பேசுபவர்களை எப்போதும் நான் பாராட்டுவேன். என்னுடன் யாரும் மீடியா வழியாக பேச வேண்டியதில்லை. எனவே நாம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விவாதம் நடத்தலாம். இங்கு அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவை மட்டும் வெளியே சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கை
இதனிடையே, இந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், ‛‛ சோனியா மீது முழு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமை பதவி குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை '' எனக்கூறியுள்ளார்.

தலைவர் பதவிக்கு தேர்தல்
2022ம் ஆண்டு செப்., மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE