காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில், ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவர்கள் அடித்து கொடுமைப் படுத்தப்பட்டு உள்ளனர். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவர் கிருபாகரன் கூறியதாவது:காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்துக்கு அருகே இருக்கும் ஆண்டர்சன் பள்ளியில் படிக்கிறேன். சுமாராக தான் படிப்பேன். ஹிந்து கலாசாரத்தை முழுதுமாக பின்பற்றும் ஆன்மிக குடும்பம் எங்களுடையது. சிறு வயசிலேயே குடும்ப வழக்கப்படி ருத்ராட்சம் அணிவித்தனர். அதை எக்காரணம் கொண்டும் கழற்ற மாட்டோம்.
நான் படிப்பது, கிறிஸ்துவ பள்ளி என்பதால், துவக்கத்தில் ருத்ராட்சத்தை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர். பின், பெற்றோரை அழைத்து வரும்படி கூறினர். தாய் ராதிகாவை அழைத்து போனேன். 'எங்கள் குல வழக்கப்படி, ருத்ராட்சம் அணிந்து தான் ஆக வேண்டும். திருநீறு பூசியபடி பள்ளிக்கு வருவான்' என்று என் தாய் உறுதியாக கூறி விட்டார்.
ருத்ராட்சம் அறுப்பு
பின், என்னை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டனர். 10ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று சென்றேன். சமீபத்தில் பள்ளி திறக்கப்பட்டு, வகுப்புகள் ஆரம்பமாகின. வகுப்பு ஆசிரியராக, கணக்கு பாடம் எடுக்கும் ஜாய்சன் என்பவர் வந்தார். வந்த நாளில் இருந்து, என்னிடம் ருத்ராட்சத்தை கழற்றச் சொல்லி நிர்பந்தப்படுத்தினார். கழற்ற மறுத்து விட்டேன். பின், அடிக்கத் துவங்கி விட்டார். ஒரு கட்டத்தில் மூர்க்கத்தனமாக அடித்தார்.
செப்., 27ல், என்னை கடுமையாக அடித்தவர் ருத்ராட்சத்தை அறுத்து விட்டார். அதை வாங்கி பையில் வைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜாய்சன், என்னை அடித்தது போதாதென்று, சக மாணவர்களை விட்டு என் தலையில் குட்டச் சொன்னார். பலரும் தலையில் குட்டினர். இதனால், எனக்கு தலைவலி ஏற்பட்டது. உடம்பெல்லாம் வலி எடுத்து, காய்ச்சல் வந்து விட்டது. பள்ளிக்கு தொடர்ந்து சென்றால், மேற்கொண்டும் அடி வாங்க வேண்டுமோ என்ற பயம் வந்தது. இனிமேல், அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன். வேறு பள்ளியில் சேர்த்தால் அங்கு படிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
மத பிரசாரம்
பாதிக்கப்பட்ட இன்னொரு மாணவன் கிருபாநந்தன் கூறியதாவது:கிருபாகரன் படிக்கும் அதே பள்ளி, அதே வகுப்பில் தான் நானும் படிக்கிறேன். ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என, ஆசிரியர் ஜாய்சன் கூறினார். விஸ்வகர்மா குடும்ப வழக்கப்படி ருத்ராட்சம் அணிவது வழக்கம். அதை எக்காரணம் கொண்டும் கழற்ற முடியாது என சொன்னேன்; அவர் கேட்கவில்லை.
'ருத்ராட்சம் போட்டுட்டு, பொறுக்கி மாதிரி வர்ற. உன்னைப் பார்த்து மத்த பசங்களும் கெட்டுப் போய்டுவாங்க' என்று கூறினார். மோசமாக பேசி திட்டினார். பின், கடுமையாக அடித்தார். பெற்றோரை அழைத்து வரும்படி கூறினார். கடந்த 13ல், தாய் ஹேமாவதியை அழைத்து சென்றேன். என் தாய், ஆசிரியர் ஜாய்சனிடம் விசாரித்தார். அப்போதும், ருத்ராட்சத்தை கழற்ற வேண்டும் என்றார். என் தாய் முடியாது என்றதும், 'டி.சி., வாங்கிட்டுப் போங்க' என்றார்.
அந்த சமயத்துல, எங்களுக்கு துணையாக இருந்து செயல்படும் திருபுண்ணிய நாகேச்சுவரர் திருமுறை திருமடத்தைச் சேர்ந்த அர்ச்சகர் கோபால்சாமி, ஆசிரியர் ஜாய்சன் காலில் விழுந்து, 'அய்யா இப்படி மத பிரசாரம் செய்யாதீங்க' என கூறினார்ஏற்க மறுத்த ஆசிரியர் ஜாய்சன், 'வெளியில் செல்லுங்கள்' என எங்களை விரட்டினார். நானும், இனிமேல் அந்தப் பள்ளிக்கு போக மாட்டேன்.இவ்வாறு கிருபாநந்தன் கூறினார்.
'வீட்டை விட்டே ஓடிட்டான்!'
கணவர் ஆட்டோ ஓட்டுறாரு. நான் மளிகை கடை வெச்சிருக்கேன். பையனை எப்படியாவது படிக்க வெச்சிடணுங்கற ஆசையில தான், கடும் கஷ்டத்துக்கு இடையிலும் மகன் கிருபாகரனை, 6ம் வகுப்புல இருந்து ஆண்டர்சன் பள்ளியில படிக்க வைக்கிறேன். ருத்ராட்சம், திருநீறு பூசக் கூடாதுன்னு சொன்ன வாத்தியார் ஜாய்சனை சந்திச்சு பேசி, அப்படி ஏதும் அரசு உத்தரவு இருந்தா கொடுங்கன்னு கேட்டேன்.
உடனே, 'உங்க பையனுக்கு தமிழில் எழுதக் கூட தெரியலை; சோறு போட்டுத் தான வளர்க்குறீங்க'ன்னு கேவலமா பேசினாரு. 'பள்ளிக்கு வந்தா, ருத்ராட்சம் போடாமத் தான் வரணும்; இல்லைன்னா டி.சி., வாங்கிட்டுப் போங்க. இதுதொடர்பா, யார் கிட்ட போய் என்ன சொன்னாலும், என்னை ஒண்ணும் செய்ய முடியாது'ன்னு சொன்னாரு. வகுப்புல பையனை அடிச்சதுல, கிருபாகரன் வீட்டை விட்டே ஓடிட்டான். பல நாட்கள் தேடி, எங்க நாத்தனார் வீட்டில் இருக்கறத கண்டுபிடிச்சோம். என் பையன் படிக்காட்டி கூட பரவாயில்லை; இனி, அந்த பள்ளிக்கு போக மாட்டான்.-
- கிருபாகரனின் தாய் ராதிகா குமார்
'அப்படித்தான் அடிப்பேன்!'
என் பையன் கிருபாநந்தனையும், ஜாய்சன் வாத்தியார் அடிச்சதோட, போய் கேட்டதுக்கு அப்படித்தான் அடிப்பேன்னு சொல்றாரு. என்ன சார், இப்படி மத ரீதியா நடந்துக்கறீங்கன்னு கேட்டதும், நீங்க செய்தது தான் மதப் பிரசாரம்னு சொல்றாரு. என் பையனோட படிப்பே போனாலும் பரவாயில்லை. இனி, அந்தப் பள்ளிக்கு பையனை படிக்க அனுப்ப மாட்டேன். டெய்லர் வேலைப் பார்த்து, என் குடும்பத்தை காப்பாத்துறேன்.
பெரும் கஷ்டத்தோடத் தான், குடும்பத்தை நடத்துறேன். இந்த சூழல்ல, இப்படியெல்லாம் மத ரீதியில் பள்ளிக் கூடத்துல பிரச்னை பண்றது, ரொம்ப மன உளைச்சலா இருக்கு. என் பையனோட படிப்பு முழுமையா போனாலும் பரவாயில்லை. இனி என் பையன், அந்த பள்ளிக்குப் போக மாட்டான்.
-- கிருபாநந்தன் தாய் ஹேமாவதி
'காலில் விழுந்தும் பலனில்லை!'
கிருபாகரன், கிருபாநந்தன் என்ற ரெண்டு பசங்களும், எங்க திருமடத்துக்கு வருவாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ஆன்மிகத்தோடு, ஒழுக்கத்தையும் தொடர்ந்து போதிக்கிறோம். ஹிந்து மதத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்ட பசங்க. அதுனால தான், திருநீறு பூசறதுக்கு எதிராவும், ருத்ராட்சத்தை கழற்ற வேண்டும்னு, வாத்தியார் அடிச்சப்பக் கூட, அடியை வாங்கிகிட்ட பசங்க, அதை கழற்ற மறுத்துட்டாங்க.
பசங்களோட எதிர்காலம் பாழாகிடக் கூடாதுன்னு சொல்லி, நானும், வாத்தியார் ஜாய்சனை சந்திச்சு, காலில் விழுந்து கேட்டுக்கிட்டேன். 'பிள்ளைங்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுங்க; மத விவகாரங்களில் தலையிட வேண்டாம்'னு சொன்னேன். அதுக்கு அந்த வாத்தியார், எதிர்வாதம் செய்தாரே தவிர, என் கோரிக்கையை ஏற்கவில்லை.
- கோபால்சாமி,
திருபுண்ணிய நாகேச்சுவரர் திருமுறை திருமடம், செந்தமிழ் ஆகம அந்தணர்
'இனி குற்றச்சாட்டு எழாது!'
இப்படியொரு பிரச்னை இருப்பது குறித்து, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக வந்த தகவலை பார்த்தோம். பொதுவாக பள்ளியில், தனித்த மத அடையாளங்களோடு, மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று வாத்தியார் வலியுறுத்தி இருக்கலாம். கூடவே, படிப்பு விஷயத்தில் வாத்தியார், மாணவர்களிடம் கொஞ்சம் கடுமை காட்டியிருக்கலாம்.
அது பிடிக்காத மாணவர்கள், பிரச்னையை திசை திருப்பும் விதமாக, மத ரீதியில் பிரச்னைகளை கொண்டு சென்றிருக்கலாம். தங்களை வாத்தியார் அடிப்பதாகச் சொன்னால், எந்த பெற்றோரும் கோபப்படத் தான் செய்வர். அதை வைத்து, பெற்றோர் உணர்ச்சி வயப்பட்டு, முதல்வர் அலுவலகம் வரை தகவல் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும், இது குறித்து தீவிரமாக விசாரிக்கிறோம். பாரம்பரியமான பள்ளி மீது, இதுவரை இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் வந்ததில்லை. இனி, இந்த மாதிரி குற்றச்சாட்டு எழாமல், எல்லாருக்கும் அறிவுறுத்தப்படும்.
-- பள்ளி நிர்வாகம்
'மாணவர்களை வேறு பள்ளியில் சேர்ப்போம்!'
ஆண்டரசன் பள்ளி மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, வாட்ஸ் ஆப்பில் பரவியிருக்கும் தகவல் கவனத்துக்கு வந்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறையில், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் உள்ளனர். பள்ளிக்கும் விடுமுறை. அதனால், என்ன நடந்தது என்று துறை ஊழியர்கள் வாயிலாக விசாரித்துக் கொண்டிருக்கிறேன். அலுவலகம் திறந்ததும், முறைப்படியான விசாரணைக்குப் பின், நடவடிக்கை எடுக்கப்படும்.
மத ரீதியிலான குற்றச்சாட்டு என்பதால், அதை தொடர விடக் கூடாது. முரண்பாடு அதிகமாகி இருப்பதால், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும், இரு மாணவர்களும் வேறு பள்ளியில் படிப்பை தொடருவது தான் நல்லது. அதற்கான ஏற்பாட்டை, நாங்கள் செய்து தருவோம். கொரோனா தாக்கத்தில் இருந்து மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வருவதே பெரும் சிரமமாக இருக்கும் சூழலில், இப்படிப்பட்ட மத பிரச்னைகள் எழுவது வேதனையாக இருக்கிறது. இது தொடராமல் பார்த்துக் கொள்வோம்.-
- அருள்செல்வன், மாவட்ட கல்வி அதிகாரி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE