நெஞ்சம் கொஞ்சம் அதிகமாகவே பதறுகிறது... கடந்த ஒரு மாதமாக கலப்பட உணவுகளால் மக்கள், குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு, மரணம் வரை கூட செல்கின்றனர். சமீபத்தில், கோவில்பட்டியில் அசைவம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த தாயும், மகளும் பலி என்ற செய்தி இடியாகத் தாக்குகிறது.
வழக்கம் போல, இறப்புக்கு காரணம் கெட்டுப் போன கோழிக்கறியா அல்லது தரமற்ற குளிர்பானமா என்ற ஆராய்ச்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆராய்ச்சி முடிவதற்குள் அடுத்தடுத்த மரணங்கள் நிகழாமல் இருக்கட்டும்.
இளநீர்
இந்த விவகாரத்தில், அடிப்படை தவறு எங்கே இருக்கிறது?நிறத்திற்காகவும், மணத்திற்காகவும், சுவைக்காகவும் கலக்கப்பட்ட ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்கள், குழந்தைகளுக்கு முற்றிலும் பொருந்தாத திரவ உணவு. அதன் விளைவு, தாகத்திற்காகவும், ஆசைக்காகவும் குடித்த பானம் உயிரையே குடித்து விடுகிறது.
இளநீர் தாகம் தீர்க்கும் அரும் பானம் என்றாலும் அதை நம் மக்கள் அதிகம் நாடுவதில்லை. ஒருவேளை இளநீரை குடிக்கச் சொல்லி, கிரிக்கெட் வீரர்கள் கோலியும், தோனியும் சொன்னால் தான் கேட்பரோ என்னவோ?எங்கேயாவது இளநீர் குடித்து, யாராவது மரணம் அடைந்ததாக செய்திகள் கேட்டதுண்டா?
ஆனால், உணவகங்களில் அசைவ உணவை சாப்பிட்ட குழந்தைகள் மரணமடைந்த செய்திகளை இப்போது அதிகம் பார்க்கிறோம். மாறி வரும் உணவு பழக்கமும், அதிகமாக வெளியே சாப்பிடும் உணவுகளும், இதற்கு முக்கிய காரணம்.
உணவு சமைப்பதை பக்தியோடும், அர்ப்பணிப்போடும் செய்து வந்த காலம் போய் விட்டது. எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் உணவு என்ற பெயரில் கொடுத்து காசாக்குவது என்ற மோசமான வர்த்தக உணர்வும், அத்தகைய உணவுகளுமே இதற்கு காரணம்.
என் கிளினிக்கிற்கு, 5 வயது குழந்தைக்கு வயிற்று வலி, வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகளுடன் தன் குழந்தையை ஒரு தாய் என்னிடம் அழைத்துவந்தார். பொதுவாக இது போன்ற வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுக்கு, நேரம் தவறிய உணவு, உணவை தவிர்த்தல், அதிகப்படியான மசாலா அல்லது எண்ணெய் சேர்ந்த உணவு உண்ணுதல், மன அழுத்தம், துாக்கமின்மை தான் காரணமாக இருக்கும்.
ஆனால் இந்த தாக்கம், 25 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் இருக்கும். 5 - 6 வயது குழந்தைக்கு இந்த பிரச்னை வர, மேலே சொன்ன எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. குழந்தை என்ன சாப்பிட்டது என விசாரித்த போது, பாக்கெட்டுகளில் அடைத்து வைத்த தின்பண்டங்களை, முந்தைய தினம் மானாவாரியாக தின்று தீர்த்திருக்கிறது என்பது தெரிந்தது.
உணவுகளில் அதிகமான உப்பும், இனிப்பும் கெட்டுப் போகாமல் இருப்பதற்குரிய வேதிப்பொருட்களும், பூச்சி பிடிக்காமல் இருப்பதற்குரிய பூச்சிக்கொல்லி மருந்துகளும் இருக்கும். இத்தகைய உணவுகளை உண்ணும் போது சிறு குழந்தைகளின் வயிற்றில் உள்ள பாதுகாப்பு படலம் பறிபோய், வயிறு செரிமானம் செய்ய இயலாத தன்மையை அடைகிறது.
ஒரு, 20 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற பிரச்னைகளுடன் குழந்தைகளை பார்த்ததில்லை; அந்த பிரச்னைகளுக்கு அப்போது மருந்தும் இருந்ததில்லை.
செரிமானம் பாதிப்பு
ரசாயனங்கள் நிறைந்த குப்பை போன்ற உணவுகளை கொடுக்கும் பழக்கம், இப்போது, சில மாதங்களே ஆன குழந்தையிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது. ஒரு நாள், நான்கு மாத குழந்தையை துாக்கிக் கொண்டு தாய் ஒருவர் என்னிடம் வந்தார். 'குழந்தை இரண்டு நாட்களாக பாலும் குடிக்கவில்லை; மலமும் கழிக்கவில்லை' என்று மிகவும் வருத்தப்பட்டார். குழந்தையை பார்த்த போது சோர்ந்திருந்தது.'என்ன உணவு கொடுத்தீர்கள்?' என்று கேட்டபோது, 'பிஸ்கட் ஊட்டினேன்' என்று கூறினார்.
உப்பு, சோடா உப்பு, இனிப்பு கலந்த மைதா மாவு உணவை சிறு குழந்தைக்கு கொடுக்கும் போது அதன் செரிமானம் முழுவதுமாக பாதித்து விடும். அது சரியாவதற்கு இரண்டு நாட்கள் வரை ஆகும்.
'ஏன் பிஸ்கட் கொடுத்தீர்கள்?' என்று கேட்டால், 'டிவி விளம்பரத்தில் பார்த்தோம்; பிஸ்கட்டில் பால் இருக்கிறது என்று சொன்னார்கள்; அதனால் கொடுத்தேன்' என்றார், அந்த தாய் அப்பாவித்தனமாக. இத்தகையவர்களின் அறியாமையை என்ன செய்வது?
பால், 1 லிட்டர் விலை 50 ரூபாய்க்கு மேல் இருக்கும்போது, 5 ரூபாய் பிஸ்கட்டில் எவ்வளவு பாலை வைக்க முடியும்? அதை தயாரிப்பதற்கான செலவு, அந்த பளபளக்கும் கவர் மற்றும் அது சிறு சிறு கடைகளையும் அடைய பயணிக்கும் துாரம்... இது எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு துளி பால் கூட அதில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. 'கேப்பையில் நெய் வடிகிறது என்றால், கேட்பவனுக்கு புத்தி எங்கே போயிற்று' என்பரே. அதுபோல, நாம் தான் யோசிக்க வேண்டும்.
அந்த உணவில் அது இருக்கிறது; இந்த உணவில் இது இருக்கிறது என்று யாராவது சொன்னால், உடனே ஓடி போய் அதை வாங்கி சாப்பிடக் கூடாது.அவை வயிற்றை புண்ணாக்கி விடும். பிறகு நம் ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தான் தேட வேண்டும்.பின் அந்த அப்பாவி தாய்க்கு, 'குழந்தைகள் அவர்களாக கடைக்கு சென்று, கேட்டு வாங்கும் வரை, பாக்கெட் உணவுகளை தயவு செய்து நீங்களாக வாங்கி, குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்' என்று அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினேன்.
அதுபோல, குழந்தை பிறந்த முதல் நான்கு மாதத்தில், முதல் உணவாக பருப்பு தண்ணீர், கீரை தண்ணீர், அரிசி கஞ்சி. பிறகு வாழைப்பழம், இட்லி, பருப்பு சோறு என்று கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில், குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தன. இன்று அது எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து விட்டு, நேரடியாக பாக்கெட் உணவுகளுக்கு சென்று விடுகிறோம். முதல் கோணல் முற்றும் கோணல் ஆகி விடுகிறது.
பிஸ்கட் பாக்கெட்
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு நல்ல உணவுப் பொருளை தேர்ந்தெடுப்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவர் அங்காடியில் பலவிதமான, வகை வகையான, கலர் கலரான பிஸ்கட்டுகளை வாங்குவதை பார்த்தேன்; மனம் வலித்தது.வீட்டில் பிள்ளைகளுக்கு பழங்களையும், நொறுக்குத்தீனிகளாக முறுக்கு, சீடை, அதிரசம், முந்திரி கொத்து போன்றவற்றை கொடுத்தது மறைந்தும், மறந்தும் போயிற்று.
முன்பெல்லாம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தால், குழந்தைகளுக்கு ஆளுக்கு இரண்டு பிஸ்கட் என்று கொடுப்பர்; பகிர்ந்து குழந்தைகள் உண்ணுவர். வீட்டிற்கு வரும் மற்ற குழந்தைகளுக்கும் கொடுப்பர். ஆனால், இன்றோ ஒரு குழந்தை ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து, முழுவதையும் சாப்பிட்டு விடுகிறது. அதை முடிக்காமல் பாக்கெட் கவரை கீழே வைப்பதில்லை.
சாக்லேட்களுக்கும் அதே கதி தான்.சாக்லேட்டுகள் தயாரிக்க, பல வேதிப்பொருட்கள் தேவைப்படும். இந்த உண்மை தெரிந்தால் சாக்லேட்டுகளை தொட மாட்டோம்.
இனிப்பு என்றாலே லட்டு, ஜிலேபி, பூந்தி, பணியாரம் என்று இருந்த காலங்கள் மாறி, இனிப்பு என்றாலே அட்டையில் உள்ள சாக்லேட்டுகள் என்று மாறி விட்டது.இப்படிப்பட்ட மனப்பான்மையை நமக்கு கொண்டு வந்தது யார்... நாம் ஏன் நம் நல்ல உணவு பழக்கங்களை விட்டு விலகிப் போகிறோம்?உடலுக்கு கெடுதல் செய்யாத இட்லி, தோசை, பணியாரம், இடியாப்பம் இதற்கெல்லாம் ஒரு விளம்பரம் கூட வருவதில்லையே ஏன்? இப்படியே போனால், அதிரசமும், முறுக்கும், லட்டும், ஜிலேபியும் ஆதிச்சநல்லுாரில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் அரிய பொருளாக மாறி விடும் போலிருக்கிறது.
தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்லும் போது, பழங்களையும், நம் பாரம்பரிய இனிப்புகளையும் வாங்கிச் செல்வோம்.அங்குள்ள குழந்தைகளுக்கு அதில் உள்ள சத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களுக்கு அதை உண்ணும் ஆர்வத்தை உண்டாக்குவோம்.
பழம் என்ற உடனேயே, இன்னோரு விஷயம் நினைவிற்கு வருகிறது. திராட்சையில் இப்போது அனைவரும் விரும்பி உண்பது விதையில்லா திராட்சை.விதையுடன் கூடிய பன்னீர் திராட்சை விதையில் அதிகமான, 'ப்ரோஆன்தோ சயனிடின்' என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்று சொல்லக்கூடிய வயதாவதை தாமதமாக்கும் அரிய தாதுக்கள் உள்ளன. ஆனால், அதை தவிர்த்து, விதையில்லாத திராட்சையை சாப்பிடுகிறோம். நம் வயிற்றை குப்பை தொட்டியாக மாற்றுகிறோம்.
அசைவ உணவகங்களில் சரியான வெப்பநிலையில் உணவை பாதுகாக்காததே, உணவு கெட்டு போவதற்கும், உண்ட உணவு விஷமாக போவதற்கும் முக்கியமான காரணம். அதிலுள்ள சில பாக்டீரியாக்கள் கடும் தொற்றை உண்டாக்கி, உயிரிழப்பு வரை கொண்டு செல்கிறது. அசைவ உணவை பாதுகாக்க பயன்படுத்தப்படும் சில வேதிப் பொருட்களும் மிகவும் கடுமையானவை. வயதில் பெரியவர்களுக்கு அதிக அளவு பிரச்னைகளை ஏற்படுத்தாவிட்டாலும், குழந்தைகளை நிச்சயம் பாதிக்கிறது.
அதுபோல, அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் பெரும்பாலும் குளிர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, 'ரெட் மீட்' என்று சொல்லக்கூடிய அசைவ உணவுகள் தேவை. அத்தகைய உணவை ஆறு மாதம் கூட வைத்து சாப்பிடுவர். ஆனால், நமக்கு நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, உடலுக்கு ஒத்து வரும் உணவு தான் முக்கியம்.
நம் பழக்கம், அன்றாடம் சமைத்து சாப்பிடுவது தான். எனவே, நாம் நாமாக இருப்போம். எதிர்கால சமுதாயத்தை ஆரோக்கிய சமுதாயமாக ஆக்க, உணவில் ஆரோக்கிய தரக் கட்டுப்பாடுகளை பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கான உணவு தரக் கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்க வேண்டும். உணவு தரக் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து, உணவு தரக் கட்டுப்பாடு எவ்வித அதிகார பலத்திற்கும் வளையாமல் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், இன்றைய குழந்தைகளின் ஆரோக்கியமே, நாளைய பலமான இந்திய சமுதாயம்!
டாக்டர் ஜெயஸ்ரீ சர்மா
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ - மெயில்: doctorjsharma@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE