பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி| Dinamalar

பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி

Updated : அக் 17, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (1) | |
சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரேயை, இரண்டு ஆண்டுகளுக்கு தன் ஆலோசகராக நியமித்துள்ளார் பிரதமர் மோடி. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவை சிறையில் தள்ளியதற்கு முக்கிய காரணமே இந்த அதிகாரி தான். இந்த ஊழல் நடந்தபோது, பீஹாரில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக இவர் இருந்தார். இந்த ஊழலை முற்றிலும் தோண்டி எடுத்து உண்மையை வெளியே கொண்டு வந்தார் கரே.
டில்லிஉஷ்

சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரேயை, இரண்டு ஆண்டுகளுக்கு தன் ஆலோசகராக நியமித்துள்ளார் பிரதமர் மோடி. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவை சிறையில் தள்ளியதற்கு முக்கிய காரணமே இந்த அதிகாரி தான். இந்த ஊழல் நடந்தபோது, பீஹாரில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக இவர் இருந்தார். இந்த ஊழலை முற்றிலும் தோண்டி எடுத்து உண்மையை வெளியே கொண்டு வந்தார் கரே. புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவரும் இவரே. எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் தெளிவாக இருப்பதுடன், வெளிப்படையாகவும் இருப்பார் கரே. இதனால் இவரை மோடிக்கு பிடிக்கும்.


வீட்டு வாடகை பிரச்னை!


டில்லியில் எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். பலமுறை எம்.பி.,யாக இருந்தவர்களுக்கு தனி பங்களாவும், புதிதாக வந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிலும் அரசு தரப்பிலிருந்து வீடு தரப்படும்.சில ஆண்டுகளுக்கு முன், இப்படி எம்.பி.,க்களுக்கு கொடுக்கப்படும் பங்களாக்களை பலர் வாடகைக்கு விட்டு பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்.தென்மாநில எம்.பி.,க்கள் டில்லியில் அதிகம் தங்குவதில்லை. இதனால் வீட்டை வாடகைக்கு கொடுத்தனர். இப்போது இது குறைந்துவிட்டது.இருப்பினும், இரண்டு தமிழக எம்.பி.,க்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த விஷயம் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு தெரிந்ததும் கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.அப்படி நடவடிக்கை எடுத்தால் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், அந்த இரண்டு தி.மு.க., - எம்.பி.,க்களும் வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
டில்லிக்கு வந்த ரகசிய துாதுவர்?கொலை வழக்கில் தி.மு.க.,வின் கடலுார் எம்.பி., கைதான உடன், சென்னை கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு சீனியர் அதிகாரி டில்லி வந்தார். டில்லியில் முக்கியமானவர்களைச் சந்தித்து விட்டு, அன்று மாலையே சென்னை திரும்பி விட்டார். தமிழக அதிகாரிகள் யார் டில்லி வந்தாலும், முதலில் தமிழ்நாடு இல்லத்திற்கு தான் செல்வர். ஆனால் இந்த அதிகாரி தமிழ்நாடு இல்லம் பக்கம் போகவே இல்லை, மேலும் இவர், டில்லி வந்ததும், தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு தெரியாது. உளவுத் துறையில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள், முக்கிய விவகாரங்கள் எதையும் எழுத்தில் தெரிவிப்பதில்லை. சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து விஷயத்தை சொல்வது தான் அவர்கள் பாணி. ஒருவேளை, இதே பாணியைப் பின்பற்றி, அந்த கவர்னர் மாளிகை அதிகாரி டில்லி வந்தாரா என பேசப்படுகிறது.
கூட்டணியில் குழப்பம்தமிழக காங்கிரசின் இரண்டு எம்.பி.,க்கள், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஒருவர் ஜோதிமணி, இன்னொருவர் மாணிக்கம் தாகூர். இருவரும் தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து ராகுலுக்கு தினமும் தகவல் அனுப்புகின்றனர். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த தினசரி தகவல் பரிமாற்றம் என்கின்றனர். ராஜிவ் மற்றும் சோனியாவை அவதுாறாக பேசிய அரசியல் கட்சி தலைவர் பற்றியும் ராகுலுக்கு இவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் தி.மு.க., - -காங்., கூட்டணியில் பிரச்னையை ஏற்படுத்தும் என, காங்கிரசார் கருதுகின்றனர்.அந்த தலைவரைக் கைது செய்ய தி.மு.க., அரசு தயங்குவது தான் இதற்கு காரணம்.
மோடியின் ஆலோசனை


மத்திய அமைச்சரவையில் 31 இணை அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக பார்த்து பேசியுள்ளார் மோடி. அப்போது, 'உங்கள் துறையின் வேலையை நன்றாக கற்றுக் கொள்ளுங்கள், பிற்காலத்தில் இது உங்களுக்கு பயன்படும்' என, அறிவுறுத்தி உள்ளார். 'இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. இதில் 300 மாவட்டங்களுக்காவது நீங்கள் சென்று அங்குள்ள பிரச்னைகளை அலசி ஆராய வேண்டும்' என்றும் இணை அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர்.தமிழகத்தைச் சேர்ந்தவரும், மத்திய இணை அமைச்சருமான முருகன், இதுவரை ஏழு மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களுக்கு பயணித்துள்ளார். இதுபோல் வட மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் விரைவில் தமிழகம் வரவுள்ளனர். 'ஜூனியர் அமைச்சர்கள் என்றால் வேலையே இருக்காது என்கிற நிலை இல்லாமல், இப்படி நாடு முழுக்க சுற்ற முடிகிறதே' என, மகிழ்ச்சியில் உள்ளனர் இணை அமைச்சர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X