வாஷிங்டன் :அண்மையில் இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை, அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகமும், அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்களின் தலைவர்களும் வரவேற்றுஉள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தபோது, ''அதிபர் பைடனின் அரசும், பெரு நிறுவனங்களின் தலைவர்களும், இந்திய அரசு மேற்கொண்ட பல சீர்திருத்தங்களை வரவேற்றுள்ளனர். ''குறிப்பாக, முன் தேதியிட்ட வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்ததை வரவேற்றுள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மத்திய அரசு, நிறுவனங்களின் நீண்ட கால ஆதாயம் சம்பந்தமான முன்தேதியிட்ட வரி வசூலிப்பு முறையை நீக்குவதாக அறிவித்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நிர்மலா சீதாராமன் இது குறித்து மேலும் கூறியதாவது:
முன்தேதியிட்ட வரி வசூலிப்பு முறையை நீக்குவதாக அறிவித்த இந்த முடிவு, சற்று காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டபோதிலும், பெரும்பாலான தொழிலதிபர்கள் இதை துணிச்சலான முடிவு என்றே தெரிவித்துள்ளனர். பல வழக்குகளில் முறையான தீர்வுகள் கிடைப்பதற்காக காத்திருந்தோம். சட்ட ரீதியாக தீர்வு கிடைத்தவுடன், பார்லியில் இந்த வரி வசூல் முறையை ரத்து செய்தோம்.
இப்படி இந்த சீர்திருத்தங்களை அறிவிப்பதற்கு முன்னதாக, இந்திய அரசுக்கு சட்ட ரீதியாக பல கட்டாயங்கள் இருந்ததை அவர்களிடம் எடுத்துரைத்தேன். இது மிகவும் 'பாசிட்டிவ்'வான நடவடிக்கை என பலரும் வரவேற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''இது குறித்தும் பேசப்பட்டது. இரு நாடுகளும் பேச்சு நடத்தி, விரைவாக இவ்விவகாரத்தை முடிக்க உள்ளோம்.''ஆனால், வர்த்தகம் குறித்தவற்றில் பெரிய பிரச்னைகள் உள்ளன. இது குறித்து, இந்திய வர்த்தக அமைச்சகம் அமெரிக்க வர்த்தக துறையுடன் இணைந்து பேசி வருகிறது. அதனால் இந்த விஷயத்தில் நான் முழுமையாக ஈடுபடவில்லை'' என தெரிவித்தார். கொரோனா பாதிப்புக்கு பிறகு, முதன்முறையாக இப்போது அமெரிக்கா சென்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் சந்திப்புகளில் கலந்துகொண்டதோடு, மேலும் பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு
வருகிறார்.இவற்றின்போது, இந்தியாவின் பொருளாதார மீட்சி குறித்தும், நீண்ட கால சீர்திருத்தங்கள் குறித்த அரசின் உறுதிப்பாடு குறித்தும் விளக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE