புதுடில்லி : கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளதால், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கை, அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள்
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் 10 மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிங்கு எல்லையில் கை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட லக்பிர் சிங், 35, என்ற தலித் இளைஞரின் உடல், தொங்க விடப்பட்ட நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டது.இந்நிலையில், ஸ்வாதி கோயல், சஞ்சிவ நேவார் ஆகிய சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தின் போது ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. தற்போது ஒரு தலித் இளைஞர் கை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய உடலை, சாலைத் தடுப்பில் கட்டித் தொங்க விட்டுள்ளனர்.இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளதாக பல செய்திகள், தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுமதி அளிக்கலாம்
கொரோனா பரவல் உள்ளதால், பள்ளிகள், கல்லுாரிகள், அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள் என, பல இடங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் மாதக் கணக்கில் போராட்டம் நடத்துவதற்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கலாம்.இவர்கள் தங்கள் உயிருடன் மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருடனும் விளையாடுகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது.போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக நாங்கள் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுக்கள், பல காரணங்களால் விசாரிக்கப்படாமல் உள்ளன. அவற்றை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை எதிர்த்து, டில்லியை அடுத்துள்ள நொய்டாவைச் சேர்ந்த மக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஹரியானா மாநில அரசு தொடர்ந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி 43 விவசாய சங்கத் தலைவர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலித் அமைப்புகள் கோரிக்கை
தலித் சமூகத்தைச் சேர்ந்த லக்பிர் சிங் கொலை செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்திற்கு 15 தலித் அமைப்புகள் இணைந்து கடிதம் எழுதி உள்ளன. லக்பிர் சிங் மரணத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
'கொலைக்கு வருந்தவில்லை'
ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் பகுதிக்கு அருகே, நேற்று முன்தினம், லக்பிர் சிங், 35, என்ற பஞ்சாபைச் சேர்ந்த தலித் சமூக தொழிலாளி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உடல், இரும்பு தடுப்பில் தொங்க விடப்பட்டிருந்தது. சீக்கியர்களின் புனித, 'குரு கிரந்த் சாகிப்' புத்தகத்தை அவமதித்த குற்றத்திற்காக, அந்த நபரை 'நிஹாங்' எனப்படும் ஆயுதம் ஏந்திய சீக்கிய அமைப்பினர் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.
அந்த கொலையை செய்ததாகக் கூறி, நிஹாங் உறுப்பினரான சரவ்ஜித் சிங் என்பவர், போலீசாரிடம் சரண் அடைந்தார். சரணடைவதற்கு முன், நிருபர்களிடம் சரவ்ஜித் சிங், 'இந்த கொலை செய்ததற்கு நான் வருந்தவில்லை' என தெரிவித்துள்ளார். இந்நிலையில், சரவ்ஜித் சிங்கை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE