உள்ளாட்சி தலைவர்கள் பதவியைக் கைப்பற்ற குதிரை பேரம்!| Dinamalar

உள்ளாட்சி தலைவர்கள் பதவியைக் கைப்பற்ற குதிரை பேரம்!

Updated : அக் 17, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (8) | |
சென்னை : ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற, உள்ளாட்சிகளில் குதிரை பேரம் துவங்கியுள்ளது. கவுன்சிலர்கள் கடத்தல் உள்ளிட்ட ஆள் இழுப்பு நடவடிக்கைகள் அரங்கேறும் என்பதால், வரும் 22 ல் நடக்க உள்ள, இப்பதவிகளுக்கான மறைமுக தேர்தலை சந்திக்க, கட்சிகள் தயாராகி வருகின்றன.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார்,
 உள்ளாட்சி ,தலைவர்கள், பதவி, குதிரை பேரம்!

சென்னை : ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற, உள்ளாட்சிகளில் குதிரை பேரம் துவங்கியுள்ளது. கவுன்சிலர்கள் கடத்தல் உள்ளிட்ட ஆள் இழுப்பு நடவடிக்கைகள் அரங்கேறும் என்பதால், வரும் 22 ல் நடக்க உள்ள, இப்பதவிகளுக்கான மறைமுக தேர்தலை சந்திக்க, கட்சிகள் தயாராகி வருகின்றன.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி அடிப்படையிலும், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கட்சி சார்பற்ற முறையிலும் தேர்தல் நடத்தப்பட்டது.


கைப்பற்றுவது உறுதி



மொத்தமாக, 153 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது; இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு இடங்களில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க., 139 இடங்களிலும், காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.இதனால், ஒன்பது மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை, தி.மு.க., கைப்பற்றுவது உறுதியாகிஉள்ளது.

தி.மு.க., விரும்பினால் மட்டுமே, அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.இதேபோல, 1,421 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், தி.மு.க., 980 இடங்களிலும், அ.தி.மு.க., 213 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 33, பா.ஜ., எட்டு இடங்களிலும், மா.கம்யூ., நான்கு, இ.கம்யூ., மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தே.மு.தி.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 178 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இப்பட்டியலில், பா.ம.க., 46, வி.சி., 16, ம.தி.மு.க., 15 இடங்ளை பிடித்துள்ளன.


உள்ளடி வேலைகள்



ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதில், பல இடங்களில் போட்டி உருவாகியுள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள, தி.மு.க.,வினர் இப்பதவிகளை கைப்பற்றும் நோக்கத்தில், ஆள் இழுப்பு பணிகளை துவங்கியுள்ளனர். சொந்த கட்சியிலேயே உள்ளடி வேலைகள் நடந்து வருகின்றன. இதேபோல, 3,007 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 23 ஆயிரத்து 185 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. இதில், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் முட்டி மோதுகின்றனர்.


மறைமுக தேர்தல்



இப்பதவிகளை கைப்பற்ற குதிரை பேரம், ஆள் இழுப்பு நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், 20ம் தேதி பதவி ஏற்கவுள்ளனர். பதவி ஏற்பு நாளில், ஆள் கடத்தல் உள்ளிட்ட பரபரப்புகள் அரங்கேறும் வாய்ப்புள்ளன.இதை தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது.எனவே, வரும் நாட்களில், ஒன்பது மாவட்டங்களில் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புகள் உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X