சிவகாசிஇயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிச. 25 ல் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்றாலே பட்டாசு ஞாபகம் வருகிறதோ அதேபோல் கிறிஸ்துமஸ் என்றாலே கேக் ஞாபகத்தில் நிற்கும். 14 ம் நுாற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் விஜில் எனும் உண்ணா நோன்பு இருப்பதை மக்கள் கடைபிடித்து வந்தனர். இந்த நோன்பு இருப்பவர்கள் மறு நாள் சாப்பிடுவதற்கு இதமானதும் செரிக்கக் கூடிய தன்மையுடையதுமான ஓட்ஸ் கஞ்சி பருகுவர். இது பாரிட்ஜ் என அழைக்கப்பட்டது. 16 ம் நுாற்றாண்டில் வசதி படைத்தவர்கள் கோதுமை மாவில் உலர்ந்த பழங்களை சேர்த்து கேக்காக உருவாக்கினர். இதுவே நாளடைவில் அனைவரின் பயன்பாட்டிற்கும் வந்தது. இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவு பிசைந்து கேக் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது குடும்பத் தலைவி ஒரு நாணயத்தை அந்த மாவுடன் கலந்து வைப்பார். கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்டி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும். அப்போது அந்த நாணயம் யாருக்கு கிடைக்கிறதோ அவர் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார். இதனால் கேக் தயாரிக்கப்பட்ட நாளிலிருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை ஆரம்பித்துவிடுகிறது.அத்தகைய சிறப்பு வாய்ந்த கேக் தயாரிப்பதற்காக சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உலர் பழ திருவிழா நடந்தது.பாதாம், கிஸ்மிஸ், முந்திரி ,உலர் கருப்பு, வெள்ளை திராட்சை, பேரீச்சை, செர்ரி பழம், டியூட்டி ப்ரூட்டி போன்ற அனைத்து பழங்களையும் திராட்சை ரசம், ஒரு சில வாசனை மது பானங்களை கொண்டு கேக் செய்வதற்காக ஊறவைக்கப்பட்டது. இவ்விழாவில் உலர் பழங்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா போன்று வடிவைக்கப்பட்டு பின்பு பழங்கள் அனைத்தும் 300 க்கு மேற்பட்ட கல்லுாரியின் இளம் சமையல் கலைஞர்கள் மூலம் கலக்கப்பட்டது. இதில் ஏறக்குறைய 700 கிலோ உலர் பழங்களும் 50 லிட்டர் மதுபான வகைகளும் உபயோகப்படுத்தப்பட்டது. இதிலிருந்து செய்யப்படும் கேக் 5000 கிலோவுக்கு மேல் எடை கொண்டது. இதன் கேக் கிறிஸ்துமஸ் காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.