காரியாபட்டி--இரு தரப்பினர் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பாதை பிரச்னைக்கு கடும் எதிர்ப்பையும் மீறி , நீதிமன்றம் உத்தரவுப்படி அதிகாரிகள் பாதை ஏற்படுத்தி கொடுத்தனர்.காரியாபட்டி பிச்சம்பட்டியில் வாழவந்தஅம்மன் கோயிலுக்கு செல்லும் பாதை தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி விழாவின்போது முளைப்பாரி கொண்டு செல்ல பாதை வேண்டி போலீசாரிடம் முறையிட, பாதை ஒதுக்கி கொடுத்த பின் நேர்த்திக்கடன் செலுத்துவர். ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்னை நீடிப்பதால் உரிய தீர்வு காண ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து பாதை ஒதுக்கி தர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் மேல்முறையீடு செய்தனர்.இந்த ஆண்டு விழா நடத்த நீதி மன்றம் தீர்ப்பின் படிபாதை ஒதுக்கி தர காரியாபட்டி தாசில்தார், போலீசாரிடம் ஒரு தரப்பினர் கோரினர். இதை தொடர்ந்து தாசில்தார் தனக்குமார், பி.டி.ஓ., சிவக்குமார் முன்னிலையில் பாதை ஏற்படுத்த மண் அள்ளும் இயந்திரங்களுடன் சென்றனர். எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் அப்புறப்படுத்தி பாதையை ஒதுக்கி கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையில், எஸ்.ஐ., அசோக்குமார் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE