சான் ஜூவான்-ஹைதியில், அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 17 பேர் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரீபியன் தீவு நாடான ஹைதியில், ஒரு காலத்தில் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வந்தன. நாட்டின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் படுகொலை, நிலநடுக்கம் போன்ற அடுத்தடுத்த அசம்பாவித நிகழ்வுகளால், சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன. இந்நிலையில், நேற்று மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஹைதிக்கு சென்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர்கள், நேற்று தங்கள் குடும்பத்தினருடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பயணித்தனர். செல்லும் வழியில் அவர்களை வழிமறித்த கடத்தல் கும்பல், அங்கிருந்து 17 பேரையும் கூட்டாக கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும், ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவ அமைப்பு, அமெரிக்காவில் உள்ள இதர கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் பகிர்ந்துள்ளது.

கடத்தப்பட்டோரின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.ஹைதியில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரிகள், கடத்தப்பட்டோரைக் கண்டறியும் முயற்சிகளை துரிதப்படுத்த, ஹைதி அரசிடம் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பிலும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE