உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
அ.பாலன், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., எப்போதும் ஆட்சியில் அமர்ந்தவுடன், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதைக் காட்டிலும், கட்டடம், பாலம், மணி மண்டபம், நினைவுத் துாண்கள் கட்டுவதில் தான் அதிக ஆர்வம் காட்டும். மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பதால், ஆட்சியாளர்களுக்கு 1 ரூபாய் கூட பயன் இருக்காது.
அதுவே, மேலே விவரித்துள்ள கட்டுமானங்களை செயல்படுத்தும் போது, பல கோடி ரூபாய்களை அமுக்கலாம்; குதுாகலிக்கலாம்!தற்போதைய பார்லிமென்ட் கட்டடம், 90 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருப்பதாலும், சில இடங்கள் சிதிலமடைந்து இருப்பதாலும், புதிய கட்டடம் கட்ட, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது திட்டம் தீட்டப்பட்டது; திட்ட மதிப்பீடு, 20 ஆயிரம் கோடி ரூபாய்.பிரதமர் மோடி, தற்போது அந்த திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்து, நடவடிக்கையில் இறங்கியுள்ளார். காங்., 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிட்ட கட்டடத்தை, பிரதமர் மோடி, வெறும் 971 கோடி ரூபாய் செலவில் கட்ட முடிவெடுத்துள்ளார்.
கட்டடத்தின் பரப்பளவு 65 ஆயிரம் சதுர மீட்டர்; அதாவது, 6.99 லட்சம் சதுர அடி. இந்நிலையில், டில்லியில் உள்ள, 'தமிழ்நாடு ஹவுஸ்' கட்டடத்தை இடித்து, 2.54 லட்சம் சதுர அடியில், அதாவது, 23 ஆயிரத்து 597 ச.மீ.,ரில் புதிய கட்டடம் கட்டப்படும் என, தமிழக அமைச்சர் வேலு அறிவித்துள்ளார்.ஆயிரக்கணக்கானோர் அலுவல் நிமித்தமாக கூடும், பல்வேறு அரசு இலாகாக்கள் இயங்கும் பார்லிமென்ட் கட்டடமே 65 ஆயிரம் ச.மீ., அளவில் தான் அமைய உள்ளது.
ஆனால், தமிழகத்தில் இருந்து டில்லி செல்லும் அரசியல்வாதிகள் உண்டு, உறங்க உபயோகமாகும் தமிழ்நாடு ஹவுஸ் கட்டடமோ, 23 ஆயிரத்து 597 ச.மீ.,யில், 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதைக் காட்டிலும், கட்டடங்கள் கட்டுவதில் கழக ஆட்சி ஏன் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது என்பது இப்போது புரிந்திருக்குமே!

டில்லியில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்களை இடித்து புதிதாக கட்டுமாறு, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாம். அனைத்து மாநிலங்கள் சார்பிலும், டில்லியில் விருந்தினர் மாளிகை உண்டு.
ஆனால், எந்த மாநிலமும் டில்லி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பு குறித்து, எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. தமிழகம் மட்டும் களத்தில் குதித்துள்ளது.கட்டுமான பணி என்றால், கை மேல் பலன் அய்யா... 'காசு, பணம், துட்டு, மணி மணி...' என்பதால் தான், அதில் மட்டும் கழக அரசுக்கு அம்புட்டு ஆர்வம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE