இந்திய நிகழ்வுகள்
தசரதனாக உயிரிழந்த நடிகர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் 'ராமாயணம்' நாடகம் நடந்தது. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திர காஷ்யப், 62, தசரதனாக நடித்தார். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்வதை அறிந்த தசரதன் உயிரிழக்கும் காட்சியை, காஷ்யப் உணர்ச்சிகரமாக நடித்தார். அவர் கீழே விழுந்ததை அடுத்து, பார்வையாளர்கள் பலமாக கைதட்டினர். ஆனால் அதன்பின் காஷ்யப் எழவில்லை. அவருடன் நடித்தவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அப்போது தான், மாரடைப்பால் அவர் பலியானது தெரிய வந்தது. கதைப்படி உயிரிழக்கும் காட்சியில் உண்மையில் இறந்த அவருக்கு கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
ஊர்வலத்தில் புகுந்த கார்
போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் ரயில்வே ஸ்டேஷன் அருகே தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்கிருந்த துர்கை சிலையை நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார், பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் உட்பட நால்வர் காயமடைந்தனர். தப்பிய கார் டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.
சிறுமியை கொன்ற சிறுத்தை
சியோனி: மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டம் பாண்டிவாடா கிராமத்தைச் சேர்ந்த தந்தையும், 16 வயது மகளும், அருகில் உள்ள வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க சென்றனர். அங்கு வந்த சிறுத்தை, சிறுமியை அடித்து கொன்றது. மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் காயமடைந்தார். இவர்களின் கூச்சல் கேட்டு மக்கள் திரண்டதால் சிறுத்தை வனத்திற்குள் தப்பியது; சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு
புதுடில்லி: திடக்கழிவு மேலாண்மை மற்றும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரு, சூரத், சண்டிகர், மொஹாலியில் ஏழு இடங்களில் நடந்த சோதனையில், இந்நிறுவனங்கள் போலி கணக்குகள் வாயிலாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதியானது. கணக்கில் வராத 1.95 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரட்டை சகோதரர்கள் பலி
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 20 வயதுடைய இரட்டை சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் இருவரும் குடியிருப்பின் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை சகோதரர்களின் மரணம் ஒரு விபத்தாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்
6 போலீசார் கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மணீஷ் குப்தா, 36. கடந்த மாதம் கோரக்பூர் ஓட்டலில் நண்பர்களுடன் தங்கினார். அவர்களின் அறையில் போலீசார் சோதனை நடத்திய போது மணீஷ் குப்தா மர்மமான முறையில் இறந்தார். போலீசார் தாக்கியதால் அவர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையும் அதை உறுதி செய்தது. இதையடுத்து, சோதனை நடத்திய ஆறு போலீசாரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பலாத்காரம்: கட்சி நிர்வாகிகள் கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லலித்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறார். சமீபத்தில் இவர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், அவரது தந்தை, மாமா, உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட பலர், தன்னை ஐந்து ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி இருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட தலைவர் திலக் யாதவ், பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் ஆஹிர்வார் உள்ளிட்ட எட்டு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தமிழக நிகழ்வுகள்
47 பவுன் நகை திருட்டு
வாடிப்பட்டி-வாடிப்பட்டி அன்னை தெரசா நகர் கோபாலகிருஷ்ணன் 55, ஓய்வு பெற்ற மில் ஊழியர். அக். 16ல் தந்தைக்கு திதிக்காக வத்தலக்குண்டு சென்றார். நேற்று மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு அலமாரியில் இருந்த 47 பவுன் நகை, ரூ.1.10 லட்சம் திருடு போனது தெரிந்தது. சம்பவ இடத்தை எஸ்.பி., பாஸ்கரன் பார்வையிட்டார். திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சின்னமனூர் ஆதரவற்ற காப்பக உரிமையாளரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி; நைஜீரிய வாலிபர் மும்பையில் கைது
தேனி--தேனி மாவட்டம் சின்னமனுார் ஆதரவற்றோர் காப்பக உரிமையாளரிடம் ரூ.3.50 லட்சத்தை நுாதன முறையில் மோசடி செய்த வழக்கில் நைஜீரியாவின் லாகோஸ் தீவை சேர்ந்த ஒலட்டியன் மேத்யூவை 43, தேனி சைபர் கிரைம் போலீசார் மும்பையில் கைது செய்தனர்.
சின்னமனுார் கருங்காட்டன்குளம் தெற்குத்தெரு ஆதரவற்றோர் காப்பக உரிமையாளர் ரிதம்பரநந்தா 48. இவருக்கு மே 7ல், ஒரு பெண் எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதில், ''நான் இங்கிலாந்தில் மருந்து நிறுவனத்தில் வணிக பிரிவு மேலாளராக உள்ளேன். புனேவில் இயங்கும் 'ஜோல்ஜென்ஸ்மா பிரசர்வ் ஆயில் சொல்யூஷன்' நிறுவனத்தில் இருந்து புற்றுநோயை குணமாக்கும் ஆயில் வேண்டும். இதன் வெளிநாட்டு மதிப்பு அதிகம். வாங்கி அனுப்பினால் பங்குத்தொகை தருகிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இதனை நம்பியவர் ஆயில் வாங்கி தருவதாக கூறினார். பெண் கூறியபடி டாக்டர் கருணாவை அவர் தொடர்பு கொண்டார். 2 லிட்டர் ஆயிலை ரூ.3.50 லட்சம் செலுத்தி புனேவில் இருந்து கூரியரில் பெற்றார். பின், டில்லி சென்று டாக்டர்.ஹாரிஷனை சந்தித்து ஆயில் தரத்தை பரிசோதிக்க வழங்கினார்.அவரோ, ''23 லிட்டர் ஆயில் வேண்டும். வாங்கி கொடுத்தால் ஆயிரம் லிட்டருக்கான ஆர்டர் தருவதோடு, பங்குதொகையும் வழங்குவேன்'' என்றார். இதற்கு ரிதம்பரநந்தா மறுப்பு தெரிவிக்க ஹாரிஷன் தலைமறைவானார்
.இதுபற்றி தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி,போலீஸ்காரர்கள் ஜெபராஜன், அரவிந்த்குமார், போடி குற்றப்பிரிவு போலீஸ்காரர் ராம்குமார் சேதுபதி, மொழிபெயர்ப்பாளரான முன்னாள் ராணுவ வீரர் பழனிச்சாமி கடந்த வாரம் மகாராஷ்டிரா சென்றனர். வழக்கு தொடர்பாக பால்ஹார் மாவட்டம் தானேவில் புரோக்கராக இருந்த ஒலடியன் மேத்யூ 43 என்பவரை கைது செய்தனர். 3 அலைபேசிகள், லேப்டாப்கள், 2 'மோடம்' கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி கொலை: கணவர், மகன் கைது
திருநெல்வேலி--மனைவியை கொலை செய்த கணவன், மகன் கைதாகினர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், 48; மனைவி சங்கரம்மாள், 47. மகன் தளவாய்க்கும், சங்கரம்மாளின் அண்ணன் மகள் பூவிதாவிற்கும், 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
பெற்றோர், சங்கரம்மாள் ஏற்பாட்டில், கல்லுாரியில் படிப்பை பூவிதா தொடர்ந்தார். கணவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், சங்கரம்மாள் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது.நேற்று முன்தினம் தளவாயும், தந்தை முருகனும் சேர்ந்து சங்கரம்மாளை தாக்கி, தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்தனர். பின், அவர் கீழே தவறி விழுந்து இறந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கல்லிடைகுறிச்சி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.கணவர் தற்கொலைதஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 52; மனைவி ராசாத்தி, 44. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.இவர்களது மகன் பாரதி, 20, வெளியூருக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது.
பாரதி நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, தாய் ராசாத்தி முகத்தில் காயங்களுடனும், தந்தை கிருஷ்ணமூர்த்தி துாக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர். செங்கிப்பட்டி போலீசார் விசாரணையில், ராசாத்தியை கிருஷ்ணமூர்த்தி அடித்து கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
தஞ்சாவூர்-குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று, கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 52; மனைவி ராசாத்தி, 44. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.இவர்களது மகன் பாரதி, 20, வெளியூருக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது. பாரதி நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, தாய் ராசாத்தி முகத்தில் காயங்களுடனும், தந்தை கிருஷ்ணமூர்த்தி துாக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர். செங்கிப்பட்டி போலீசார் விசாரணையில், ராசாத்தியை கிருஷ்ணமூர்த்தி அடித்து கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை
பெ.நா.பாளையம்,:தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மேம்பாடி ராணி மலா எஸ்டேட் பகுதிக்கு மாவோயிஸ்ட்கள் சிலர் துப்பாக்கியுடன் வந்து சென்றதாக தகவல் வெளியானது. அவர்கள், அதே பகுதியில் அரிசி, உணவு உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்றனர். இதையடுத்து, கேரள போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் என தெரியவந்தது. இதையடுத்து, மாநில எல்லையோர பகுதியில் மாவோயிஸ்ட்களை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், சின்னதடாகம் அருகே மாங்கரை சோதனை சாவடியில் தமிழகம், கேரளாவுக்கு சென்று வரும் வாகனங்களை, போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
அனைத்து வாகனங்களின், விவரங்களும் பதிவேடுகளில், பதிவு செய்யப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. போலீசார் இங்கு மூன்று ஷிப்ட்களில் பணியாற்றி வருகின்றனர். இங்கு அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, ஆனைகட்டி மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் அதிரடி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை கிராமங்களில் புதிய நபர்கள் யாராவது தென்பட்டால், தகவல் தெரிவிக்குமாறு பழங்குடியினருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
உலக நிகழ்வுகள்
பில் கிளின்டன் 'டிஸ்சார்ஜ்'
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளின்டன், ௭5, திடீர் உடல்நலக் குறைவால் சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தின் ஆரஞ்சு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து அவர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்
ராபர்ட் டர்ஸ்டுக்கு கொரோனா
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் வாரிசான ராபர்ட் டர்ஸ்ட், 78, கொலை வழக்கில் கடந்த வாரம் ஆயுள் சிறை தண்டனை பெற்றார். நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வலம் வரும் டர்ஸ்ட், உடல்நலக் குறைவால் தொடர்ந்து அவதியுற்று வந்தார். இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சீன நிறுவனத்திற்கு தடை
லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பொதுத் துறை நிறுவனம் ஒன்று, அரசு திட்டத்திற்காக ஏலம் விட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்ற ஒரு சீன நிறுவனம், போலி ஆவணங்களை சமர்ப்பித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் இணைத்து, அந்த பொதுத் துறை நிறுவனம் நேற்று அறிவித்தது. இனி, அடுத்த ஒரு மாதத்திற்கு இதுபோன்ற ஏலங்களில் பங்கேற்க அந்த சீன நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கடன் பெற தவிக்கும் பாக்.,
இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தான் 2019ம் ஆண்டு, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 45 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற முடிவு செய்யப்பட்டது. எனினும் சில முரண்பாடுகளால் 15 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டது. அதன் பின், நிலுவைக் கடன் வழங்கப்படவில்லை. அடுத்த கடன் தவணையாக 7,500 கோடி ரூபாயை வழங்க, பாக்., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பாக்., அரசு, ஐ.எம்.எப்., அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. எனினும் அதில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE