கொழும்பு,-'கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய 3,750 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும்' என, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

நம் அண்டை நாடான இலங்கை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான அன்னிய செலாவணி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சிங்கப்பூரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இலங்கை இறக்குமதி செய்கிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இறக்குமதிக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கொரோனா தொற்றால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய பணம் இல்லாமல் தவித்து வருகிறது.
எரிபொருள் கொள்முதல் செய்யும் அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனமான, சி.பி.சி., எனப்படும் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், அரசு வங்கிகளான சிலோன் வங்கி மற்றும் மக்கள் வங்கியில் ௨,௫௦௦ கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், சி.பி.சி., தலைவர் சுமித் விஜிஷிங்கே கூறியதாவது:இந்தியா -- இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்படி, ௩,௭௫௦ கோடி ரூபாய் கடன் வாங்குவது தொடர்பாக இங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அந்த தொகையை வைத்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்களுக்கு எதிராக போராட்டம்
தங்கள் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்த இரண்டு மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இலங்கையின் முல்லைத் தீவு பகுதியில் தமிழக மீனவர்களை கண்டித்து, இலங்கை மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். 'இலங்கையின் கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE