பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலையை பயன்படுத்தி, அரியலுார், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலுார், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
மழை காலங்களில் தொழுதுார் அணைக்கட்டு, ஆனைவாரி, உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தற்காலிக செம்மண் சாலை அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிப்பது வழக்கம். இதனால் இருமாவட்ட மக்களும் தலா 15 கி.மீ., சுற்றி வெளியூர் செல்ல வேண்டியதாகிறது.இதனால் பெண்கள், மாணவர்கள், முதியோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.பாதிப்பை போக்க வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என, இரு மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.கடந்த 2018ம் ஆண்டு நெடுஞ் சாலைத்துறை சார்பில், ரூ. 10 கோடியே 86 லட்சத்து 485 மதிப்பில், புதிதாக மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.தற்போது, பாலம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பாலத்தின் இரு புறமும் உள்ள கிராமங்களை இணைக்கும் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பாலம் கட்டும் பணியை முடித்து பயன்பாட்டிற்கு விடாததால் சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு பொது மக்கள் பயன்படுத்தி வந்த தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து பாதித்து, இரு மாவட்ட மக்கள் பெரிதும் பாதித்தனர்.விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருoமழைக்கு முன் பாலத்தின் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலை அமைத்து, போக்குவரத்தை துவக்க இரு மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE