சென்னை--'கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், நிதித் துறையும் முடிவு செய்யும்' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்குமாறு, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.அதைத் தொடர்ந்து, மாநில அரசுகள், தங்களின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

இதன்படி, நிதி உதவி வழங்க, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், முதல்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை, 35 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு எப்போது இழப்பீடு வழங்கப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கோவிட் தொற்றால் உயிர்இழந்தோர் குறித்த அனைத்து தரவுகளும், விபரங்களும், மாநில அரசிடம் உள்ளன. அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், நிதி துறையும் முடிவு செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டால், அதற்கான ஒத்துழைப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை அளிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.