சென்னை : குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன், 36. தனியார் கூரியர் நிறுவன ஊழியர். அவர் மனைவி, ஷோபனா, 34. இந்த தம்பதிக்கு, இரு பிள்ளைகள் உள்ளனர். கணேஷ், மார்ச் மாதம், 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.
இது தெரியாத மனைவி, நேற்று முன்தினம் மாலை, வீட்டை சுத்தம் செய்த போது, அந்த கவரை எடுத்து, குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். வீட்டிற்கு வந்த கணவர், வளையல் கவரை கேட்ட போது, குப்பை தொட்டியில் போட்டதாக கூறியதும் அதிர்ச்சியடைந்தவர், சாத்தாங்காடு காவல் நிலையத்தில், தங்க நாணயம் மாயமானது குறித்து புகார் அளித்தார்.
இது குறித்து, துாய்மை பணி மேற்கொள்ளும் ராம்கி, தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, குப்பை தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற ஊழியர், தங்க நாணயத்தை மீட்டு, மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
துாய்மை பணி அதிகாரிகள், தங்க நாணயத்தை சாத்தாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரியிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு, 4.5 லட்ச ரூபாய் என தெரிகிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்களை வரவழைத்து, தங்க நாணயத்தை சரி பார்த்த பின், அதை பத்திரமாக மீட்டு கொடுத்த துாய்மை பணியாளர்கள் கையாலே தம்பதியிடம், நேற்று மதியம், போலீசார் வழங்க செய்தனர்.
குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை மீட்டு, போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைத்த, துாய்மை பணியாளர்களுக்கு, தங்கத்தின் உரிமையாளர்கள், போலீசார், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.