சென்னை-'வரும் 20, 21ம் தேதிகளில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். நாளை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.வரும் 20, 21ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் 20ம் தேதி கனமழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில்... நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஒரே நாளில் 27 செ.மீ., மழை பெய்துள்ளது.பேச்சிப்பாறை 22; சித்தார் 20; பெருஞ்சாணி அணை 11; மணிமுத்தாறு, சூரலக்கோடு 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மேட்டூர், சின்னகல்லார் 9; சோலையார் 8; மயிலாடி, அம்பாசமுத்திரம், வால்பாறை 7; ஆய்க்குடி, தென்காசி 6; நாகர்கோவில், கொட்டாரம், துறையூர், செங்கோட்டை, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கேரள மலை பகுதிகளில் கனமழை கொட்டியதால் அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன.பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்கள் சேதமடைந்து உள்ளன.