தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, 'கட்சியின் தலைவராக நானே தொடர்வேன்' என அறிவிக்கிறார். அவரின் மகனும் கட்சியின் இன்னொரு முன்னாள் தலைவருமான ராகுல், காங்கிரசில் ஜனநாயகம் இருக்கிறது என்கிறார். இதை கேட்கும் போது சிரிப்பு வருகிறது.
சோனியா சொல்லும் வேகத்தைப் பார்த்தால், அந்த பாரம்பரியம் மிக்க கட்சி, அந்த குடும்பத்தின் ஏகபோக உரிமையாக இருக்கிறதோ என, எண்ணத் தோன்றுகிறது!
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை: சிங்கள ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா ராணுவம் கைவிட வேண்டும். மேலும், ராஜபக்சே கும்பலை, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க இந்தியா முன்வர வேண்டும்.
இந்த இரண்டில் எது நடந்தாலும், நஷ்டம் நம் நாட்டுக்குத் தான்.தேச நலனை கருதினால் இதுபோன்று, பிற நாட்டு விவகாரங்களில் தலையிட கோரிக்கை விடுக்க மாட்டீர்கள்!
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: போதுமான அளவு மின்சாரம், நிலக்கரி இருக்கிறது என மத்திய அமைச்சர்கள் அறிவித்து உள்ளனர். எனினும், அதானி போன்ற தனியார் மின் உற்பத்தியாளர்கள், 1 யூனிட் மின்சாரத்தை, 18 ரூபாய்க்கு அரசிடம் விற்கின்றனர். கேட்பாரில்லையா?
இது வழக்கமான ஒன்று தான். அதிக விலைக்கு வாங்கி, மக்களுக்கு குறைந்த விலைக்கு அரசுகள் வழங்குகின்றன. மின்சாரம் உட்பட பல, இப்படித் தான் வழங்கப்படுகின்றன. இதில் லாப, நஷ்ட கணக்கு பார்க்க கூடாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை: மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைத்து அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்கு நன்றி.

ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என பல முறை வலியுறுத்தியும், தமிழக அரசு இப்போது தான் நிறைவேற்றியுள்ளது. தாமதமாக நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கிறீர்களா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை: 'நீங்கள் தான் எங்களின் எஜமானர்கள். எங்களுக்கு உத்தரவு தாருங்கள்; அமைச்சரவைக்கு ஆசி வழங்குங்கள்' என பொதுமக்களிடம் ஆசிர்வாதம் கேட்ட, நாட்டின் முதல் மாபெரும் இயக்கம், அ.தி.மு.க., தான்!
அதனால் தான், 50 ஆண்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்துள்ளது; 30 ஆண்டுகள் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்துள்ளது. இது பொதுமக்கள் கொடுத்த அங்கீகாரம் தானே!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து உள்ள போதிலும் மக்கள் முக கவசம் தொடர்ந்து அணிய வேண்டும். கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
பெரும்பாலான பொறுப்புள்ள குடிமக்களுக்கு இந்த விழிப்புணர்வு உள்ளது. இன்னும் சிலர் தான், பல காரணங்களால் முக கவசம் அணியாமல் பிறரை அச்சமூட்டுகின்றனர்!
புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: நான்கைந்து விமானங்களை வாடகைக்கு ஓட்டும் நிறுவனங்கள் கூட, நான்கைந்து ஆண்டுகளில் நுாற்றுக்கணக்கான விமானங்களை வாங்கி இயக்க முடிகிறதென்றால், 'ஏர் இந்தியா' என்ற அரசு நிறுவனத்தால் அதை ஏன் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை?
பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் போது அசட்டையாக இருக்கும் ஊழியர்கள், தனியார் நிறுவனமானதும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். இது, பலரும் கண்ட உண்மை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE