நொய்டா: இந்திய பாதுகாப்பு வீரர்களுக்கு திரிசூலம், கையுறை, தடி போன்ற ஆயுதங்களை தனியார் நிறுவனம் ஒன்று பிரத்யேகமாக தயாரித்துள்ளது. இதில் இருந்து வெளிப்படும் மின்சாரத்தை கொண்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கலாம் என்கிறது அந்நிறுவனம்.
எல்லையில் எதிர்நாட்டு படைகள் நம் நாட்டு வீரர்களுடன் அவ்வப்போது மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். சீன வீரர்கள் சமீப காலமாக தொடர்ந்து இந்திய ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. நொய்டாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இந்திய ராணுவத்தினருக்கு பல்வேறு விதமான ஆயுதங்களை தயாரித்துள்ளது.
திரிசூலம், தடி, கையுறை போன்ற இந்த ஆயுதங்களை கொண்டு எதிர் நாட்டு வீரர்களை சிறிது நேரத்திற்கு முடக்கி வைக்க முடியும் என்று இதனை தயாரித்த நிறுவனம் கூறுகிறது. சிறிய அளவிலான மின்சாரத்தை பாய்ச்சி எதிரிகளை தற்காலிகமாக முடக்குவதுடன், நம் வீரர்களின் பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஆயுதங்கள் மக்களுக்கோ, தனியார் நிறுவனங்களுக்கோ விற்கப்படாது என்றும், முழுக்க முழுக்க இந்திய பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிசூலம்: கடவுள் சிவனின் ஆயுதமாக கருதப்படும் திரிசூலம் வடிவிலான ஆயுதத்தில் பேட்டரி உதவியுடன் மின்சாரத்தை பாய்ச்சி எதிரிகளை தாக்கவல்லது. இதற்காக வீரர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும்.
வஜ்ரா: பேட்டரியால் இயங்கும் மெட்டல் தடி போன்ற அமைப்பான வஜ்ராவில் இருந்து வெளியிடப்படும் மின்சாரத்தை கொண்டு எதிரிக்கு வலுவான அடியை கொடுக்க உதவுகிறது. இதன் முனையிலும், பக்கவாட்டிலும் இருக்கும் கூர்முனைகளை கொண்டு, எதிரிகளின் வாகனங்களை பஞ்சர் ஆக்கவும், எதிரிகளை சிறிது நேரத்திற்கு மயக்கமடைய செய்யலாம்.

சப்பர் பஞ்ச்: ‛சப்பர் பஞ்ச்' என்பதன் பொருள் ‛மின்சாரத்துடன் கூடிய கையுறைகள்'. இது வீரர்களின் கையில் கோர்த்து இதிலிருந்து வரும் மின்சாரத்தால் எதிரிகளை தாக்க உதவும் ஆயுதமாகும். தண்ணீர் புகாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதத்தின் பேட்டரி 8 மணி நேரம் வரை நீட்டிக்கக்கூடியது.
பத்ரா: இது ஒரு சிறப்பு வகையான கேடயமாகும். இது வீரர்களை கல் தாக்குதலில் இருந்து காப்பாற்றும். மேலும், இந்த கேடயத்திலிருந்து வரும் மிகுதியான வெளிச்சம் எதிரே உள்ளவரை சில நிமிடங்கள் குருடராக ஆக்கிவிடும். பின்னர், எளிதாக எதிரிகளை தாக்கவிடலாம்.