புதுடில்லி: மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் வரப்போகும் 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியை பிடிக்க முடியாது என மேகலாயா கவர்னர் சத்யபால் மாலிக் பேசியுள்ளார்.
ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழச்சியின் போது மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் உத்திரபிரதேசம் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முடியாது.
நான் காஷ்மீர் கவர்னராக இருந்த வரை காஷ்மீரில் எந்த இடத்திலும் பயங்கரவாத தாக்குதல்களோ, வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்களே நிகழவில்லை. தற்போது காஷ்மீரில் நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால், நிலவரம் தலைகீழாக சென்றுவிட்டது.இவ்வாறு சத்யபால் மாலிக் பேசினார். மத்திய, அரசுக்கு எதிராக, விவசாயிகளுக்கு ஆதரவாக கவர்னரின் இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3 முறை இடமாற்றம் : யார் இந்த சத்யபால் மாலிக்
மேகலாயா கவர்னராக உள்ள சத்யபால் மாலிக், உ.பி. மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர். முன்னாள் பா.ஜ., எம்.பி.யாவார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட போது, அங்கு கவர்னராக இருந்தவர். சத்யபால் மாலிக். அந்த நிகழ்வுக்கு பின், இரு மாதங்கள் கழித்து, கோவா மாநில கவர்னராக கடந்த 2019 அக்., மாதம் நியமிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் கவர்னராவதற்கு முன், ஓர் ஆண்டு, பீகார் கவர்னராக இருந்துள்ளார்.
கோவா கவர்னராக இருந்த போது கொரோனா நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு தவறான தகவல்களை கவர்னர் தருவதாக, பா.ஜ.,முதல்வர் பிரமோத் சாவந்த் அறிக்கை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுக்கு கவர்னர் சத்யபால் மாலிக் மறுப்பு தெரிவித்தார். மேலும், கோவா அரசின் புதிய ராஜ்பவன் திட்டத்தையும் கவர்னர் விமர்சித்தார். இதனால் கவர்னருக்கும், மாநில பா.ஜ., அரசுக்கும் இடையே சுமூக போக்கு இல்லை என விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் 2020 ஆகஸ்டில் சத்யபால் மாலிக்கை, மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவா மாநில பொறுப்பை, மஹா., கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, கூடுதலாக பொறுப்பு வழங்கப்பட்டது.. கடந்த இரு ஆண்டுகளில் சத்யபால் மாலிக், மூன்றாவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE