உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக வாங்கிய 1 லட்சம் ரூபாயை போட்டியாளர் வீட்டின் முன் பெண் உறுப்பினர் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நன்னாவரம் ஊராட்சித் தலைவராக கலியமூர்த்தி வெற்றி பெற்றார். நாளை 20ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டி நிலவுகிறது.இதில், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்ற சந்திரபாபு - ஆறுமுகம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக இரு தரப்பினரும் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சந்திரபாபு ஆதரவாளர்கள், துணைத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கக் கோரி ஆறுமுகத்தை மிரட்டியதாக தெரிகிறது.இது ஆறுமுகத்தின் ஆதரவாளரான வார்டு உறுப்பினர் அனுஷியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் சந்திரபாபுவிடம் பெற்ற 1 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க அவரது வீட்டிற்கு நேற்று காலை 10:00 மணியளவில் அனுஷியா சென்றார்.
அங்கு, சந்திரபாபு பணத்தை திருப்பி வாங்க மறுத்து தனக்கு ஆதரவளிக்குமாறு கூறினார். ஆனால் அனுஷியா ஆதரவளிக்க மாட்டேன் எனக்கூறி 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 1 லட்சம் ரூபாயை சந்திரபாபு வீட்டின் முன் வீசி விட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE