எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவால் எம்.ஜி.ஆர்., குடும்பத்தில் மோதல்

Updated : அக் 20, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
அ.தி.மு.க.,வின் பொன் விழா துவக்கத்தை ஒட்டி, சென்னை, தி.நகர், ஆற்காடு தெருவில் இருக்கும் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்துக்கு சென்று, அ.தி.மு.க., கொடி ஏற்றி வைத்த சசிகலா, தன்னை அ.தி.மு.க., பொதுச்செயலர் என குறிப்பிடப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்துள்ளார். இதற்கு எம்.ஜி.ஆர்., குடும்பத்தினரும், அ.தி.மு.க.,வினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, எம்.ஜி.ஆர்., குடும்ப வாரிசும்,
சசிகலாவால் எம்.ஜி.ஆர்., குடும்பம், மோதல்

அ.தி.மு.க.,வின் பொன் விழா துவக்கத்தை ஒட்டி, சென்னை, தி.நகர், ஆற்காடு தெருவில் இருக்கும் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்துக்கு சென்று, அ.தி.மு.க., கொடி ஏற்றி வைத்த சசிகலா, தன்னை அ.தி.மு.க., பொதுச்செயலர் என குறிப்பிடப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்துள்ளார். இதற்கு எம்.ஜி.ஆர்., குடும்பத்தினரும், அ.தி.மு.க.,வினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, எம்.ஜி.ஆர்., குடும்ப வாரிசும், அ.தி.மு.க., இளைஞர் அணி துணை செயலருமான நடிகர் ராமச்சந்திரன் கூறியதாவது:ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் காது கேளாதோர் பள்ளி, தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம் ஆகியவற்றை, எம்.ஜி.ஆர்., வளர்ப்பு மகள் லதாவின் கணவர் ராஜேந்திரன் தான் நிர்வகித்து வந்தார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராஜேந்திரன் மறைந்து விட, அவரது மகன் குமார் ராஜேந்திரன் தற்போது நிர்வகித்து வருகிறார். நினைவு இல்லம் உட்பட, பொது நல நோக்கோடு எம்.ஜி.ஆர்., துவக்கிய எல்லாவற்றின் நிர்வாக செலவுக்காக, வருமானம் வரும் பல வழி வகைகளையும் அவரே செய்துள்ளார். நினைவு இல்லம் நடத்துவதற்கான நிதியை, ஆலந்துாரில் இருக்கும் மீன் மார்க்கெட் வருமானத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என, உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆனாலும், ராஜேந்திரன் குடும்பத்தினர் பலரிடமும் நிதி வசூலிக்கின்றனர்.


பொதுவான இடங்கள்எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம், ராமாவரம் தோட்டம், காது கேளாதோர் பள்ளி என, எல்லாமே பொதுவான இடங்கள் தான். அங்கே, யார் வேண்டுமானாலும் சென்று வரலாம். அந்த வகையில் தான், சசிகலா சென்று, அரசியல் செய்து இருக்கிறார். ராமாவரம் தோட்டத்துக்கும் சென்றுள்ளார். பத்தோடு பதினொன்றாக, அந்த இடங்களுக்கு அவர் சென்று திரும்பியிருந்தால், யாரும் கேள்வி எழுப்ப போவதில்லை.

தி.நகர் நினைவு இல்லத்தில், அ.தி.மு.க., கொடி ஏற்றி வைத்து விட்டு, 'அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா' என, பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை வைத்துள்ளார். அவர், அ.தி.மு.க., பொதுச் செயலர் அல்ல என்பதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் பொதுச் செயலர் என போட்டுக் கொள்வதே தவறு. எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்துக்குள் சென்று, அரசியல் செய்ய யாருக்கும் உரிமையில்லை. நாளையே, கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் கொடியேற்றி, கல்வெட்டை வைத்து விட்டுப் போனால், என்ன செய்ய முடியும்?


மாபெரும் குற்றம்

அரசியலுக்காக, சசிகலா திட்டமிட்டு செய்யும் காரியங்களுக்கு, எம்.ஜி.ஆரின் வாரிசுகள் துணை போயிருக்க கூடாது. எம்.ஜி.ஆர்., கட்சி துண்டாடப்படுவதற்கு காரணமானவர்களுக்கு, அவர் சார்ந்த பொது இடத்தில் கல்வெட்டு வைக்க அனுமதித்தது மாபெரும் குற்றம். இவ்வாறு, அவர் கூறினார்.

இவரது கருத்துக்கு எம்.ஜி.ஆர்., குடும்ப வாரிசும், தி.நகர் நினைவு இல்ல நிர்வாகியுமான குமார் ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, சசிகலா செயலால் எம்.ஜி.ஆர்., குடும்பத்திற்குள்ளும் மோதல் உருவாகி விட்டதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.


'நான் தான் முடிவு செய்வேன்'

-எம்.ஜி.ஆர்., குடும்ப வாரிசும், தி.நகர் நினைவு இல்ல நிர்வாகியுமான குமார் ராஜேந்திரன் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம் என்பது, பொது மக்கள் பார்வைக்கு விடப்பட கூடியது தான். அதற்காக, அது அரசு சொத்து அல்ல; தனியார் சொத்து. அது தொடர்பான எல்லா செலவுகளையும், ஆலந்துார் மீன் மார்க்கெட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து செய்து வருகிறோம்.

அந்த வகையில், இங்கு யார் வர வேண்டும்; யாருக்கு மரியாதை, முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் என்பதை, நிர்வாகியான நான் தான் முடிவு செய்ய வேண்டும். சசிகலா என்பவர் யாரோ அல்ல. அவர், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர். அவர், இங்கு வந்து எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அ.தி.மு.க., கொடியேற்றினார். பின், எங்கள் அனுமதியோடு தான், கல்வெட்டு வைத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?

அது தவறு என கூறி கேள்வி கேட்கும் யாராவது, சசிகலா போல செய்ய முன்வந்தனரா? நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோருக்கு, 'எம்.ஜி.ஆர்., இல்லத்துக்கும், ராமாவரம் தோட்டத்துக்கும் வாருங்கள்' என கடிதம் கொடுத்து அழைத்தேன்; கடைசி வரை வரவில்லை. வராதவர்களை வம்படியாக அழைத்து கொண்டிருக்க முடியுமா; விட்டு விட்டேன்.

வருகிறேன் என்ற சசிகலாவை அனுமதித்தோம். கம்யூனிஸ்ட்காரர்கள் வந்தால், என்ன செய்வது என யாரும் பயப்பட வேண்டியதில்லை. அப்படி யாரும் வர மாட்டார்கள்; வந்தாலும், அனுமதிக்க மாட்டோம். இறந்து, 30 ஆண்டுகள் கடந்த பின்னும், மக்கள் மத்தியில் வாழும் எம்.ஜி.ஆரை போற்றுவதன் மூலம், அவரது விசுவாசிகள் ஓட்டுக்களை வாங்கலாம் என, அ.தி.மு.க., திட்டம் போடுகிறது.

ஆனால், உண்மையில் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்., மீது பற்று கிடையாது. எனது சகோதரர் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., வாரிசு தானே. அவர், அ.தி.மு.க.,வில் தானே இருக்கிறார். சட்டசபை தேர்தலில் அவருக்கு ஏன், 'சீட்' கொடுக்கவில்லை? எம்.ஜி.ஆரின் வாரிசுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை. அப்படிப்பட்ட கட்சிக்காரர்களை, நான் ஏன் மதிக்க வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.


'ஒன்றுபடுவோம்' சசிகலா கடிதம்சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற பெயரில், கட்சி தொண்டர்களுக்கு, சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை, நெஞ்சில் வைத்து கட்சியை காப்போம். கரம் கோர்ப்போம்; பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? மக்கள் தந்த மாபெரும் வெற்றியால், அ.தி.மு.க., நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால், எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோமே... சிந்தியுங்கள்.
ஜெயலலிதா வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம். தொண்டர்களின் துாய நெஞ்சம் புரிகிறது. கட்சி காக்கப்படும்; கரம் கோர்ப்போம்; அன்பாய் பயணிப்போம். எதிர்காலத்தை கட்சியின் கையில் கொண்டு வர சூளுரைப்போம். நானிருக்கிறேன் என்பதை விட நாமிருக்கிறோம். ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். ஜெயலலிதா பாதையில், மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம்; வென்றுகாட்டுவோம். கட்சி நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது, தொடர்வோம் வெற்றிப் பயணத்தை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
20-அக்-202116:12:10 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam குமார் ராஜேந்திரா, சசிகலா என்பவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று முதலில் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யவும். தயவு செய்து எம்ஜிஆர் அவர்களின் பெயருக்குப் பங்கம் உண்டாக்காதீர்கள். அதிமுகவில் இருக்கும் இராமச்சந்திரன் தனது விடயங்களை பார்த்துக்கொள்வார்.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
20-அக்-202115:52:42 IST Report Abuse
SENTHIL NATHAN ஏன் சசிகலாவிடம் யாரும் அப்போலோவில் என்ன நடந்தது என்று கேட்பதில்லை ??
Rate this:
Cancel
ANANDA KAMESWARAN - GABRONE,போஸ்ட்வானா
20-அக்-202110:44:33 IST Report Abuse
ANANDA KAMESWARAN கவனிக்கவும் "கழக பொது செயலாளர்" எந்த கழகம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X