காதல் திருமணத்தை எதிர்த்த தாயை கொன்று சிறுமி ஓட்டம்: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:ரயிலில் சிக்கிய கர்ப்பிணி மீட்புதானே: மஹாராஷ்டிராவின் தானே அருகேயுள்ள கல்யாண் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் கணவர் மற்றும் மகனுடன் ஒரு கர்ப்பிணி பெண் தவறான ரயிலில் ஏறி விட்டார். அதை உணர்ந்து அவர் இறங்க முயற்சிக்கும்போது ரயில் புறப்பட்டது. இதனால் அவர் தவறி விழுந்தார். ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளிக்குள்
crime, murder, theft


இந்திய நிகழ்வுகள்:



ரயிலில் சிக்கிய கர்ப்பிணி மீட்பு


தானே: மஹாராஷ்டிராவின் தானே அருகேயுள்ள கல்யாண் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் கணவர் மற்றும் மகனுடன் ஒரு கர்ப்பிணி பெண் தவறான ரயிலில் ஏறி விட்டார். அதை உணர்ந்து அவர் இறங்க முயற்சிக்கும்போது ரயில் புறப்பட்டது. இதனால் அவர் தவறி விழுந்தார். ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளிக்குள் விழுந்த அவரை, அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் எஸ்.ஆர்.கண்டேகர் விரைந்து சென்று காப்பாற்றினார். அங்கிருந்தோர் அவரை பாராட்டினர்.


உ.பி.,யில் வியாபாரி சுட்டுக்கொலை


புதான்:உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தையில், வியாபாரி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உ.பி., புதான் மாவட்டம் வாஸிர்கஞ்ச் மார்க்கெட்டிற்கு தானிய வியாபாரி விஷ்ணு குமார், அவரது சகோதரர் சிவம் வர்ஷ்னேவுடன் நேற்று வந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், நாட்டுத் துப்பாக்கியால் இருவரையும் தாக்கினர். சிவம் அவர்களுடன் போராடி துப்பாக்கியை பறித்தார். அடுத்த சில நிமிடங்களில் வேறு ஒரு பைக்கில் வந்த மேலும் மூன்று பேர், சிவத்திடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிவம் உயிரிழந்தார்.


மாமியார் காபியில் விஷம்


புதுடில்லி: டில்லியில் வசிக்கும் ரீட்டா குப்தா, தன் மருமகள் சுவாதி குப்தாவின் பிறந்த வீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுவாதி குப்தா, தன் உறவினர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, சமீபத்தில் மாமியாருக்கு கொடுத்த காபியில் விஷம் கலந்தார். அதை குடித்து மயங்கிய அவர் சிகிச்சைக்கு பின் மீண்டார். அவரது புகார் தொடர்பாக மருமகள் சுவாதி குப்தா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை


பெங்களூரு: தட்சிண கன்னடா மங்களூரில் வக்கீலாக இருப்பவர் ராஜேஷ் பட், 45. இவரிடம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர், பயிற்சிக்காக வந்திருந்தார். அவருக்கு ராஜேஷ் பட், செப்டம்பர் 25ல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவி அவரது அலுவலகத்துக்கு செல்லவில்லை. ராஜேஷ் பட் போனில் மன்னிப்பு கேட்டுள்ளார். மங்களூரு மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்துள்ளார்.


மழைக்கு 34 பேர் பலி


டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மலைப் பிரதேசம் என்பதால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 34 பேர் பலியாகி உள்ளனர்; பலரை காணவில்லை.


தாயை கொன்று சிறுமி ஓட்டம்:


ஐதராபாத்: ஐதராபாதில் காதல் திருமணத்தை எதிர்த்த தாயை, காதலருடன் சேர்ந்து சிறுமி கொலை செய்தார். தலைமறைவான இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.

ஐதராபாதில் உள்ள ராஜேந்திரா நகரை சேர்ந்த, 40 வயது பெண், தன் கணவர் மற்றும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து கணவர் வீடு திரும்பியபோது, துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பெண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த பெண்ணின் மகள், அவரது காதலரை திருமணம் செய்து கொள்ள விரும்பியது தெரியவந்தது. அதற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காதலரை வீட்டிற்கு அழைத்து வந்து, திருமணம் தொடர்பாக தாயுடன் தகராறு செய்துள்ளார். திருமணத்துக்கு தாய் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுமி, தன் காதலருடன் சேர்ந்து, தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்:



மனைவிக்கு வரன் பார்த்த கணவர் கைது


திருவள்ளூர் : மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில், இணையத்தில் மனைவிக்கு வரன் தேடிய கணவரை, 'சைபர் கிரைம்' போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த, உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகள் ஜான்சி, 32. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், திருவள்ளூர் அடுத்த, வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த, சுரேஷ்பாபு மகன் ஓம்குமார், 34, என்பவருக்கும், 2016ல் திருமணம் நடந்தது. ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால், கணவருடன் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஓம்குமார் மட்டும் வெள்ளியூருக்கு வந்தார்.

மூன்றரை ஆண்டுகளாக, மனைவியை பிரிந்து வாழும் இவர், தனக்கு விவாகரத்து கேட்டு, பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில், திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டும் என, தகவல் கொடுத்து, அதில் அவரது தந்தையான பத்மநாபன் மொபைல்போன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. 'ஆன்லைன்' விளம்பரத்தை பார்த்தோம்,

பத்மநாபனை தொலைபேசியில் அழைத்தனர்.அதிர்ச்சி அடைந்த அவர், தான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் மாப்பிள்ளை வேண்டும் என, விளம்பரம் செய்யவில்லை என, திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.விசாரணையில், விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டு, தன் மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஓம்குமாரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின், திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


latest tamil news





போலீஸ் போல் நடித்து 2.5 பவுன் வழிப்பறி


சிவகங்கை : சிவகங்கை அமைதியான நகர் என்ற மக்களின் நம்பிக்கையை இழக்க செய்யும் விதத்தில் போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் 2.5 பவுன் நகையை மோசடி செய்து தப்பிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

நேற்று மதியம் 12:00 மணிக்கு வேலாயுதசுவாமி கோயில் தெருவிற்கு வந்த 35 -- 40 வயதுள்ள இருவர் தங்களை போலீஸ் எனக்கூறி தெருவில் மாஸ்க் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த வழியாக உறவினர் வீட்டுக்கு சென்ற ராஜேஸ்வரி 72, என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2.5 பவுன் செயினை கழட்டி பர்சில் போடுமாறு கூறி அவரை ஏமாற்றி செயின் இருந்த பர்சை வழிப்பறி செய்து தப்பினர். நகரில் வழிப்பறி, டூவீலர் திருட்டு, கஞ்சா விற்பனை அதிகரித்த போதும் போலீசார் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.


குழந்தையை அடித்து கொல்ல முயன்ற தந்தை தலைமறைவு


ஓசூர்: சூளகிரி அருகே தன் பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொல்ல முயன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பொன்னல்நத்தத்தை சேர்ந்த விவசாயி யுவராஜ் 26; இவரது மனைவி நாகசுதா 21; இவர்களது ஒன்பது மாத பெண் குழந்தை வேதிகா. மனைவியிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு யுவராஜ் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் தன் தாய் வீட்டிற்கு நாகசுதா சென்று விட்டார்.

கடந்த 17ல் மாமனார் வீட்டிற்கு சென்ற யுவராஜ் மனைவியுடன் தகராறு செய்து தாக்கியவர் அவரது கையிலிருந்து குழந்தையை பிடுங்கி தரையில் வீசி அடித்துக் கொல்ல முயன்றார். படுகாயமடைந்த குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூளகிரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து தலைமறைவான யுவராஜை தேடி வருகின்றனர்.


உலக நிகழ்வுகள்:



10 ஆயிரம் குழந்தைகள் ஏமனில் கொலை


ஜெனீவா: மத்திய கிழக்கு நாடான ஏமனில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் உள்நாட்டு போரில், 1.30 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என, ஐ.நா., சர்வதேச குழந்தைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


துப்பாக்கி சூடு 43 பேர் பலி


அபுஜா :நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல்வேறு கொள்ளை கும்பல்கள் பல ஆண்டுகளாக அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் கும்பலாக புகுந்து கொள்ளையடித்துச் செல்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது வாடிக்கை. இந்நிலையில் சொகோடோ மாகாணத்தில் உள்ள கோரொன்யோ என்ற கிராமத்தில் கடந்த 17ம் தேதியன்று வார சந்தை நடந்தது. சந்தைக்குள் புகுந்த கொள்ளையர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X