தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: காய்கறி விற்பவர் செல்லும் இருசக்கர வாகனத்திற்கான பெட்ரோல் விலை லிட்டருக்கு, 105 ரூபாய். கார்ப்பரேட் முதலாளிகள் செல்லும் விமானத்துக்கு, பெட்ரோல் லிட்டருக்கு 79 ரூபாய். இது என்ன பொருளாதாரம்?
ரொம்ப சாதாரண பொருளாதாரம் தான். இருசக்கர வாகன பெட்ரோல், அதிகமானவர்களால் வாங்கப்படுகிறது; விமான பெட்ரோல் அப்படியில்லை. எந்த பொருளுக்கு தேவை அதிகமுள்ளதோ, அந்த பொருளுக்கு கிராக்கி அதிகரித்து, விலையும் கூடும்!
யாதவர் மகாசபை தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை: 'தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகைகள் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டவை' என, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சொல்கிறார். 'கடவுள் இல்லை' என சொல்பவருக்கு, ஹிந்து மத பண்டிகைகள் பற்றி கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன... இதுபோல, பிற மத பண்டிகைகள் குறித்தும் கேள்வி எழுப்ப முடியுமா?
இதனால் தான், இத்தகையவர்களை, தமிழக மக்கள் கண்டுகொள்வதே இல்லை. சில கட்சிகள் மட்டும், சில காரணங்களுக்காக ஆதரிக்கின்றன!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: முஸ்லிம்களின் மிலாடி நபி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்கிறார். ஆனால், கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமிக்கு வாழ்த்து சொல்லவில்லை. அதனால் தான் உங்களை ஹிந்து விரோதி என்கிறோம்.
இப்படித் தான் பல ஆண்டுகளாக, தி.மு.க.,வின் முதல்வராக இருந்த கருணாநிதியும் செய்தார். அதன் பின், இப்போது அவர் மகன் ஸ்டாலின் தொடர்கிறார்!
கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: மன்மோகன் சிங் அரசு, 10 ஆண்டுகளில், 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது. மோடி அரசு, ஏழு ஆண்டுகளில் 23 கோடி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்தியாவில் வறுமை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும்.

காங்., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்., மூத்த தலைவர்களால் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் அதிகரித்திருக்குமே!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: சங்க காலப் பெண்பாற் புலவர், தலைகுறிஞ்சி தந்த பெருமகள் இளவெயினிக்கு மதுரையில் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
உண்மையிலேயே அந்த பெண்பாற்புலவரின் புகழ்பாட வேண்டும் என்றால், அவரின் பாடல்களை நான்கு பேருக்கு தெரியப்படுத்துங்கள்; பள்ளி, கல்லுாரி பாடங்களில் சேர்க்கலாம். மணி மண்டபங்கள் எல்லாம் வீண்!
கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை: கொரோனாவால் உயிரிழந்தவர், அந்த குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவராக இருந்தால், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு, மூன்றாண்டுகளுக்கு, மாதம் 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். கேரளா மட்டுமின்றி உலகில் எங்கு அவர் இறந்திருந்தாலும் இந்த தொகை வழங்கப்படும்.
அருமையான திட்டம். அனைவரும் நிச்சயம் வரவேற்பர்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE