பெய்ஜிங்: திபெத் மற்றும் உய்குர் சிறுபான்மையினர்களை சீன அரசு துன்புறுத்துவதாகவும், அவர்களை இன அழிப்பு செய்வதாகவும் கூறி சீனாவில் நடக்க உள்ள 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வெளிநாடு வாழ் சீன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 பிப்.,4 முதல் 20 வரை நடக்க உள்ளன. அதற்கான ஒலிம்பிக் தீபம் ஏதென்ஸில் நேற்று (அக்.,19) பெய்ஜிங் தூதுக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீப ஓட்டம் தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக்கில் 85 நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் கமிட்டிகள், 2,900 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சீனா இப்போட்டியை நடத்த வெளிநாடு வாழ் சீன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களில் சிலர் திபெத்திய கொடியை பறக்கவிட்டனர். மேலும் 'இன அழிப்பு விளையாட்டுகள் வேண்டாம்' என்ற பேனரை ஏந்தி நின்றனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒலிம்பிக் கமிட்டி குழுவினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள ஹாங்காங் வாசிகள், திபெத்தியர்கள் மற்றும் உய்குர் முஸ்லிம்களை அந்நாட்டு அரசு கண்காணிக்க தொடங்கியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியையும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

திபெத் விடுதலைக்கான பிரசார இயக்குனர் பெமா டோமா கூறுகையில், “ஒலிம்பிக் கமிட்டி 21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்கிறது. விளையாட்டு உணர்வை களங்கப்படுத்துகிறது,” என்றார்.
உலக உய்குர் காங்கிரஸின் ஆதரவாளரான அர்கின் கூறுகையில், “எங்கள் பிரசாரம் 2008-ம் ஆண்டை விட வலிமையானதாக இருக்கும். உய்குர், ஹாங்காங், திபெத்தியர்கள், தெற்கு மங்கோலியர்கள், சீன மற்றும் தைவானிய சமூகங்களை ஒன்றிணைப்போம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியோ, அரசாங்கங்களோ, விளம்பரதாரர்களோ, விளையாட்டு வீரர்களோ யாரும் எங்களை தடுக்க முடியாது. நாங்கள் போராடுவதை நிறுத்த மாட்டோம்,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE