லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தையை காக்க கோரி, மகள் விடுத்த அழைப்பை ஏற்று, 3 கி.மீ., தொலைவை 3 நிமிடங்களில் கடந்து வந்த போலீசார், தற்கொலையை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் ஒரு கிராமத்திலுள்ள ஒரு வீட்டில், தன் தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தந்தை தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும்; விரைந்து வந்து காப்பாற்றும் படியும் போலீஸ் அவசர உதவி எண்ணை (முதலில் 100 தற்போது 112) அழைத்து மகள் கோரியுள்ளார்.

போலீசாருக்கு இந்த அழைப்பு பகல் 2:10 மணிக்கு வந்துள்ளது. தங்களது வாகனத்தை அதிவேகமாக இயக்கிய போலீசார், 3 கி.மீ., தூரத்தை மூன்றே நிமிடங்களில் கடந்து, 2:13க்கு போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். ஜன்னல் வழியாக தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்ட போலீசார் கதவை உடைத்து தூக்கிட்டிருந்தவரை மீட்டனர். உடனடியாக முதலுதவி கொடுத்து அவரை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர். துரிதமாக செயல்பட்ட துணை ஆய்வாளர் ஷிவ்தாஸ் மற்றும் ஓட்டுநர் பிரேம் நாராயண் ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.