சென்னை: 'சசிகலாவுக்கு இனி இடம் இல்லை' என, அ.தி.மு.க., தரப்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று கவர்னரை சந்தித்து மனு அளித்த பின், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி அளித்த பேட்டியில், ''பொழுதுபோகவில்லை என்பதால், சசிகலா ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்,'' என சாடினார்.
ஒருதலைபட்சம்
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்று காலை 11:00 மணிக்கு, கவர்னர் ஆர்.என். ரவியை ராஜ்பவனில் சந்தித்தார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சென்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடு; தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட விதம் தொடர்பாக, உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டு மனு கொடுத்தனர். பின், பழனிசாமி அளித்த பேட்டி:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து, கவர்னரிடம் மனு கொடுத்தோம். தி.மு.க., தில்லுமுல்லு செய்து, வெற்றி பெற்றவர்களை, தோல்வி அடைந்ததாக அறிவிக்க வைத்துஉள்ளது. மாநில தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறி, அரசு சொல்வதை நிறைவேற்றி உள்ளது.
ஓட்டுக்கு 1,000 ரூபாய்
மாவட்ட கலெக்டர்கள் முறையாக, தேர்தல் பணியை கவனிக்கவில்லை; புகார் கொடுக்க வந்தவர்களை சந்திக்கவில்லை. பல இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர்களை, தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளனர். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் பகுதியில், எம்.எல்.ஏ., ஓட்டுப் பெட்டியை எடுத்துச் சென்ற காட்சி வெளியானது. அவர் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படித்தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தி.மு.க., அரசின் 100 நாள் சாதனை, விலைவாசி உயர்வு தான். ஐந்து மாத ஆட்சியில், 'கமிஷன் கலெக் ஷன், கரப்ஷன்' செய்கின்றனர். ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். சசிகலா அ.தி.மு.க., கொடியேற்றியது தொடர்பாக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் கட்சியில் கிடையாது. அவருக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அ.தி.மு.க.,வில் இனி அவருக்கு இடம் இல்லை.ஏற்கனவே தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும், எங்களை அங்கீகரித்து, உண்மையான அ.தி.மு.க., என அறிவித்துள்ளது.
ஆனாலும், சசிகலாவுக்கு பொழுதுபோகவில்லை; தான் பொதுச்செயலர் என்றும், ஒன்றிணைவோம் என்றும் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்.முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது, திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை. ஜெயலலிதா இருந்தபோது, தற்போது அமைச்சர்களாக உள்ள தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதை மறைக்க திட்டமிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை வழியாக சோதனை நடத்துகின்றனர்.
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவையும், கவர்னரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். திருச்செந்துாரில் பணியில் இருந்த போலீஸ்காரரை, அமைச்சரின் உதவியாளர் கன்னத்தில் அறைந்துள்ளார். மக்களை பாதுகாக்கும் போலீசாருக்கே இந்த நிலை என்றால், மக்களின் நிலை எப்படி இருக்கும்? புகாரை திரும்பப் பெற்றாலும், அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், தமிழகத்தில் நிலவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE