இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : அக் 21, 2021 | Added : அக் 21, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:ஹெராயின் பறிமுதல்: பெண் கைதுமும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையின் புறநகரான மங்கூட்டில் வசிக்கும் அமினா ஹம்சா ஷேக் என்ற லாலி, 53, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அறிந்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். விசாரணையின் முடிவில், அவர் பதுக்கி வைத்திருந்த 21.70 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.2 கிலோ ஹெராயின் பறிமுதல்
crime, murder, arrest


இந்திய நிகழ்வுகள்:ஹெராயின் பறிமுதல்: பெண் கைது


மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையின் புறநகரான மங்கூட்டில் வசிக்கும் அமினா ஹம்சா ஷேக் என்ற லாலி, 53, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அறிந்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். விசாரணையின் முடிவில், அவர் பதுக்கி வைத்திருந்த 21.70 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.


விபத்தில் 4 பேர் பலி


கெடா: குஜராத்தின் மஹிசாகர் மாவட்டம் சாந்த்ராம்பூரில் இருந்து, ஆனந்த் மாவட்டம் மலதாஜ் கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்த ஆறு பேர் நேற்று முன்தினம் வேனில் புறப்பட்டனர். கெடா மாவட்டம் நதியாத் அருகே நள்ளிரவில் அவர்களின் வேன் கவிழ்ந்தது. விபத்தில் நான்கு பேர் பலியாயினர். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் சிகிச்சை பெறுகின்றனர்.


எல்லையில் சிக்கிய ஆயுதங்கள்


சண்டிகர்: அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம் கெக்ரன் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 22 கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கான 100க்கும் மேற்பட்ட குண்டுகள் மற்றும் 1 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை சிக்கின. அவற்றை பதுக்கியோர் குறித்து விசாரணை நடக்கிறது.


பாலியல் சுற்றுலா: 2 பெண்கள் கைது


மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாலியல் சுற்றுலா அதிகரித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் போல் நடித்த போலீசார், பெண் 'ஏஜன்டு'களை தொடர்பு கொண்டனர். அவர்கள் இரு பெண்களை கோவா அழைத்து செல்லும்படி கூறினார். அதற்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாய். கோவாவில் 2 நாட்கள் தங்கும் செலவையும் வாடிக்கையாளர் ஏற்க வேண்டும் என்றனர். இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை மீட்ட போலீசார், இரு ஏஜன்டுகளையும் கைது செய்தனர்.


உணவால் 77 பேர் பாதிப்பு


ராஜ்நந்த்கான்: சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டம் கடபர் கலா கிராமத்தில், நேற்று முன்தினம் வாரச்சந்தை நடைபெற்றது. இங்கிருந்த கடையில் பானி பூரி உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்ட 57 சிறுவர்கள் உட்பட 77 பேரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை, 26 பேர் குணமடைந்த நிலையில் மற்றவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது.


பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் டிராகட் பகுதியில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.பாதுகாப்பு படையினர் அப்பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. அதில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; மூன்று பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர்.


latest tamil news
தமிழக நிகழ்வுகள்:கழிப்பறையில் தங்கம் பறிமுதல்


திருச்சி: துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையம் வந்தது. மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பயணியரிடம் சோதனை செய்தனர். அப்போது, விமான நிலையக் கழிப்பறையில் கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் ஒரு பார்சல் கிடப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கழிப்பறையில் கிடந்த பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர். அதில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 900 கிராம் தங்கம் இருந்துள்ளது. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.


குளவி கொட்டி 40 பேர் காயம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மணக்கடவு ஊராட்சியில் தேசிய வேலை உறுதி திட்டப்பணியில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை அப்பகுதியில் குளவி கூடு உடைந்தது. அதில் இருந்து வெளியேறிய விஷ குளவிகள், பெண்களை கொட்டின. வலி தாங்க முடியாமல் பெண்கள் அலறியடித்து ஓடினர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் 40 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மாணவர்களை அடித்த ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'


பெரம்பலுார்: பெரம்பலுார், வெங்கடேசபுரம் பகுதியில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும், 15க்கும் மேற்பட்ட மாணவர்களை தமிழ் ஆசிரியர்கள் பிரகாசம், செந்தாமரை ஆகிய இருவரும், 18ம் தேதி கண்மூடித்தனமாக பிரம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் செய்தனர். இத்தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் மாணவர்களின் படத்துடன் பரவியது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆசிரியர்கள் பிரகாசம், செந்தாமரை ஆகிய இருவரையும், பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.


இரிடியம் மோசடி கும்பல் கைது


ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் கோவிலில் சதுரங்க வேட்டை சினிமா பாணியில் இரிடியம் இருப்பதாக கூறி பழைய பித்தளை குடம், செம்பு, கூஜாவை விற்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணன்கோவில் எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டீக்கடை முன்பு சந்தேகத்திற்குரிய வகையில் அட்டை பெட்டியுடன் நின்ற 4 பேரை விசாரித்தனர்.

அவர்கள் பிளவக்கல் அணை பகுதி பட்டுப்பூச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் 39, குன்னுாரை சேர்ந்த கண்ணன் 44, கோபிநாத் 29, சிவகாசியை சேர்ந்த கணேசமூர்த்தி 42, என்பதும், பழைய பித்தளை குடம், செம்பு, கூஜா உள்ளிட்ட பொருட்களை இரிடியம் என கூறி விற்பனை செய்வதாகவும், இவற்றை வாங்க கடையநல்லூரை சேர்ந்த அய்யாச்சாமி, சென்னையை சேர்ந்த சிலர் காத்திருப்பதாக, கூறினர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


ரேஷன் அரிசியில் செத்த எலி


பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லுார் ஊராட்சியை சேர்ந்தவர் மாரி. ரேஷனில் அரிசி வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். வீடு முழுதும் துர்நாற்றம் வீசியது. வீடுமுழுதும் தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் அரிசியில் இருந்து துர்நாற்றம் வந்தது தெரிந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசியை கொட்டி பார்த்தபோது அதில் செத்த எலி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அதை எடுத்து சென்று ரேஷன் கடை வாசலில் கொட்டினார். கடைக்காரர் வேறு அரிசி கொடுத்ததால் கார்டுதாரர் சமாதானமாகி சென்றார்.அந்த ரேஷன் கடையில் அரிசியை வாங்கிச்சென்ற அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.


'டிவி' மெக்கானிக் கொலை


துாத்துக்குடி:ஒருதலைக் காதல் நிறைவேறாததால் 'டிவி' மெக்கானிக்கை தலை துண்டித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், குமாரகிரி புதுாரைச் சேர்ந்தவர் சூரியராகவன், 31; எட்டயபுரத்தில் 'டிவி' மெக்கானிக் கடையில் வேலை பார்த்தார். நேற்று பகலில் ஒருவர் சூரியராகவனிடம் தகராறு செய்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். தலையை தனியே வீசி தப்பினார். எட்டயபுரம் போலீசார் விசாரித்து, சோழபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், 22, என்பவரை நான்கு மணி நேரத்தில் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:சூரியராகவனும், அங்கு 'டைப்பிங்' சென்டருக்கு சென்று வந்த படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில், சோழபுரம் ஆனந்தராஜ், மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்தார். அவர் மகாலட்சுமியின் சமூகத்தை சேர்ந்தவர். தான் விரும்பிய பெண்ணை சூரியராகவன் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமுற்றார். நேற்று கடைக்கு வந்த ஆனந்தராஜ், சூரியராகவனிடம் தகராறு செய்து மிளகாய் பொடியை முகத்தில் வீசி, கத்தியால் தலையை அறுத்து கொலை செய்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


உலக நிகழ்வுகள்:குண்டு வெடித்து 14 பேர் பலி


டமாஸ்கஸ்: மத்திய கிழக்கு நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில், நேற்று அதிகாலை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் அருகே சாலையில் மறைத்து வைக்கப்பட்ட இரு வெடிகுண்டுகள் வெடித்தன.இதில் 14 பேர் பலியானதுடன், மூவர் காயம் அடைந்தனர்.


மருத்துவமனையில் 4 பேர் கொலை


டைலர்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டைலரில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்து வந்த ஜோசப் கலினா உட்பட நால்வர், திடீரென நரம்பியல் பிரச்னைகளால் இறந்தனர். போலீஸ் விசாரணையில், நர்சாக பணியாற்றிய வில்லியம் ஜார்ஜ் டேவிஸ், 37, அவர்களுக்கு காற்று மட்டும் நிரம்பிய ஊசி செலுத்தி கொலை செய்தது உறுதியானது. கைதான வில்லியமுக்கு அங்குள்ள நீதிமன்றம் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்தது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X